Sunday, August 9, 2015

புத்தக விமர்சனம்_நாணயம் விகடன் 16/08/2015



நாணயம் லைப்ரரி: சிறு துளி பெரு வெள்ளம்!
                                                            -சித்தார்த்தன் சுந்தரம்
புத்தகத்தின் பெயர்  : இண்டியா அன் இங்க் (india uninc)
ஆசிரியர் : பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் (Prof. R. Vaidyanathan)
பதிப்பாளர்  : வெஸ்ட்லாண்ட்
நகர்ப்புறம் vs கிராமப் புறம், வளர்ச்சி அடைந்த பகுதி vs வளர்ச்சி அடையாத பகுதி என இருவேறு துருவங்கள் இருக்கிற மாதிரி, தொழில் துறையிலும் 'இன்கார்ப்பரேட் டட் (incorporated) vs அன்–இன்கார்ப்பரேட்டட் (Unincorporated, (இனி சுருக்கமாக (Uninc – 'அன் இங்க்')' என முற்றிலும் வேறுபட்ட இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இதில், 'இன்கார்ப்பரேட்டட்’ (அதாவது, குழுமமாக்கப்பட்டது) என்பது பெரும்பாலும் தனியார் துறையைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் ஆகும். 'அன் இன்கார்ப்பரேட்டட்' என்பதில் குறு, சிறு, மத்திய அளவிலான நிறுவனங்கள் அடங்கும். அது தனிநபரை உரிமையாளராகவோ அல்லது கூட்டு உரிமையாளர் களைக் கொண்டதாகவோ (Proprietorship and Partnership – பி அண்ட் பி) இருக்கும்.
தனியார் துறையைச் சேர்ந்த பெரு நிறுவனங்களுக்குத் தரக் கூடிய முக்கியத்துவமும், சலுகை களும், வசதிகளும் இன்னொரு பிரிவான 'அன் இங்க்'குக்குத் தரப்படாமலே  அனைவராலும் (மத்திய, மாநில அரசுகள், நிதி நிறுவனங்கள்) ஒரு இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதைப் புள்ளிவிவரங் களுடன் சுட்டிக்காட்டி எழுதப் பட்டிருக்கும் புத்தகம்தான் 'இண்டியா அன் இங்க்'.
இந்தப் புத்தகத்தை எழுதியிருப் பவர் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெங்களூரில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஆர் வைத்திய நாதன்.
`அன் இங்க்’ என அழைக்கப் படும் இந்த `முறைசாரா’ அல்லது 'பி அண்ட் பி' என்கிற பிரிவில் மட்டும் 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப்படி, சுமார் 4.1 கோடி சிறு நிறுவனங் களுக்கு மேல் இருக்கின்றன. இதில் 2.5 கோடி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் இருக்கின்றன. இவற்றில் சுமார் 3.5 கோடி நிறுவனங்கள் விவசாயம் சாராதவை.
இந்தக் குறு, சிறு நிறுவனங் களின் வளர்ச்சி வருடத்துக்கு 4.69 சதவிகிதம். தேசிய வருமானத்தில் இதன் பங்களிப்பு சுமார் 45%. ஆனால், `இண்டியா இன்கார்ப்ப ரேட்டட்’ என அழைக்கப்படும் பெரு நிறுவனங்களின் பங்களிப்பு 15%தான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த `அன் இங்க்’கின் கீழ் வரக்கூடிய தொழில்கள்தான் என்னென்ன?
1) பதிவு செய்யப்படாத உற்பத்திக் கூடங்கள், 2) கட்டுமானத் தொழில், 3) வர்த்தகம் – மொத்த மற்றும் சில்லறை வணிகம், 4) ஹோட்டல் கள் மற்றும் ரெஸ்டாரென்ட்டுகள், 5) ரயில்வே தவிர்த்த மற்ற போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழில்கள்/செயல்பாடுகள், 
6) ஸ்டோரேஜ் சம்பந்தப்பட்டவை, 7) ரியல் எஸ்டேட், 8) மற்ற சேவைகள்.
இந்த `அன் இங்க்’ என்பதை `Non-Corporate’ துறை என்றும் அழைக்கலாம். இதில் நாவிதர், செருப்புத் தைப்பவர், மரவேலை செய்பவர், பிளம்பர், எலெக்ட்ரிஷியன், கமிஷன் ஏஜென்ட்டுகள், சைக்கிள்-ரிக்‌ஷா இழுப்பவர்கள், சார்ட்டர்டு அக்கவுன்டென்டு கள், கட்டடக் கலை நிபுணர்கள், வழக்கறிஞர்கள், பூசாரிகள் என சுயமாக வேலை செய்பவர்களும் அடங்குவார்கள். சொல்லப் போனால், மேற்குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை `முறைசாரா’ பிரிவினர் எனக் கூறுவதே தவறானது. பொருளாதார ரீதியிலும், அமைப்பு ரீதியிலும் இந்தத் துறை சிறப்பாகச் சீரமைக்கப்பட்ட துறையாகவே இருந்து வருகிறது.
2005-ல் வெளியான எக்கனாமிக் சர்வே அறிக்கைப் படி, இந்தத் துறையைச் சேர்ந்த தொழில் மற்றும் சேவைகளில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடி.
சேமிப்புக் குறித்த புள்ளிவிவரங்களை அலசினா லும் இந்தத் துறைதான் முன்னணி யில் இருந்தது. 2011-12ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அரசுத் துறை நிறுவனங்களின் சேமிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3%; தனியார் துறை நிறுவனங் களின் சேமிப்பு 7.2%;  குடும்பம் சார்ந்த (நம்மைப் போன்ற சாமானியமானவர்களும், பி அண்ட் பி துறையும்) சேமிப்பு சுமார் 22.3%.
ஆக, தேசிய வருமானத்திலும், வேலைவாய்ப்புகளிலும், சேமிப் பிலும் முன்னிலை வகிக்கும் இந்தத் துறைக்கு, கார்ப்பரேட் என்று சொல்லக்கூடிய தனியார் துறைக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவத்தில் ஓரிரு சத விகிதம்கூட அளிக்கப்படுவ தில்லை என்பதை இந்த புத்தகத் தின் ஆசிரியர்  ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார்.
பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் ஏற்படும்போது அந்தத் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தமும் ஏறி இறங்கும். ஆனால், பங்குச் சந்தை உண்மையிலேயே இந்திய பொருளாதாரத்தைப் பிரநிதித்து வம் செய்கிறதா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதை ஆசிரியர் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங் களுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
`இன்கார்ப்பரேட்டட்’ என்று சொல்லக்கூடிய பிரிவில் சுமார் 7.2 லட்சம் நிறுவனங்கள் (2011 ஆண்டு வரை) கம்பெனிகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் 5,000 முதல்  9,000 நிறுவனங்கள் மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியிலிடப் பட்டிருக்கின்றன. இதில் ஏறக்குறைய 3,000 பங்குகள் வருடத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
சுமாராக 100 பங்குகள் மட்டும்தான் பங்குச் சந்தையில் மிகவும் தீவிரமாகப் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இதில் 50 பங்குகளின் பரிவர்த்தனை மதிப்பு பங்குச் சந்தை பரிவர்த் தனையில் 65 சதவிகிதமாகும். ஆனால் அரசும், அனைத்து ஊடகங்களும் இந்தப் பிரிவுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இந்திய மக்களின் வாழ்க்கை யில் முக்கிய அங்கம் வகிக்கும் சினிமாவும், கிரிக்கெட்டும்கூட `அன் இங்க்’ பிரிவைச் சேர்ந்ததுதான். சமீப காலமாகத் தான் சினிமாப் படம் எடுப்பதில் சில `கார்ப்பரேட்’கள் நுழைந்திருக் கின்றன. பிசிசிஐ (BCCI – Board of Control for Cricket in India) ஒரு `சாரிட்டபிள்” அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டதால், வருமான வரித் துறை வரிச் சலுகை தந்து வந்தது. ஆனால், சமீபத்தில் இந்தச் சலுகையை வருமான வரித் துறை திரும்பப் பெற்றுக் கொண்டது. பிசிசிஐதான் உலகத்திலேயே அதிக வருமானம் கொண்ட கிரிக்கெட் போர்டு. இதன் மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு மேல். ஆனாலும், இது `அன் – இன்கார்ப்பரேட்’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது விந்தைதான்!
அன் இங்க் பிரிவின் கீழ் இருக்கும் அமைப்புகளுக்கு வங்கிகள் தொழில் அபிவிருத்திக்கு கடன் கொடுக்கத் தயங்குகின்றன. இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பு இல்லை. என்னதான் தேசிய வருமானத்துக்கு இந்தப் பிரிவு அதிகப் பங்களிப்புச் செய்தாலும், இதற்கென்று தீர்க்கமான கொள்கைகளை அரசு வகுக்காத தால் இந்தத் துறை வளர முடியாமல் தவிக்கிறது.
இந்தியாவில் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்ய பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கக் காரணம், தேசிய மொத்த உற்பத்தியில் இதன் பங்கு 17% ஆகும் (விவசாயத் துறை 14.6%, , உற்பத்தித் துறை 13.2%). ஆனால், இன்னும் இந்தத் துறைக்கு `இண்டஸ்ட்ரி’ என்கிற அந்தஸ்தை அரசு வழங்கவில்லை. சில்லறை மற்றும் மொத்த வணிகம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி  (2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி)!
`அன் இங்க்’ பிரிவு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பது குறித்தும் புள்ளிவிவரங்களுடன் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம் இதுவாகவே இருக்கும்.
எளிமையாகத் தோற்றம் அளிக்கும் இந்தப் பிரிவும் விவசாயத் துறையும் (தேசிய வருமானத்தில் இதன் பங்கு 17 சதவிகிதம்) உண்மையிலேயே வலிமை மிக்கவை ஆகும். வலிமை மிக்கதாகத் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தியா `இன்கார்ப்பரேட்டட்’ (தனியார் துறை) ஒரு காற்றடைத்த பலூன் தான் என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும்.
மத்திய, மாநில அரசுகளின் கடைக்கண் பார்வை இந்த `அன்–இங்க்’ பிரிவைச் சேர்ந்த தொழில்களின் மேல் பட்டால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் வலிமை பெறும். இன்று சிறு துளியாக இருக்கும் நம் வளர்ச்சி பெரு வெள்ளமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)



Sunday, December 1, 2013

Nanayam Vikatan_08/12/13_ About Change in Consumer Behaviour

மாறிவரும் நுகர்வோர்கள்!
சித்தார்த்தன் சுந்தரம்


இது ஆன்லைன் ஷாப்பிங் யுகம்... இந்த யுகத்தில் நுகர்வோர்கள் எப்படி எல்லாம் மாறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமான விஷயம்!  

தள்ளுபடியில் பொருட்களை வாங்குவது அந்தஸ்த்தில் குறைவாகக் கருதப்பட்டு வந்த காலம் போய், தள்ளுபடிக்காகக் காத்திருக்கும் காலம் வந்திருக்கிறது. தள்ளுபடிக்காக வழக்கமாக வாங்கும் கடையில் வாங்காமல், வேறு கடையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை சுமார் 20% உயர்ந்திருக்கிறதாம்!  
அதிகரிக்கும் ஆன்லைன் பர்ச்சேஸ்!

நுகர்வோர்களில் 41% பேர் பிரைவேட் லேபிள் (குறிப்பிட்ட கடையின் பெயரில் விற்பனை செய்யப்படும் பொருட்கள். இவை அந்தக் கடையில் தவிர வேறெங்கும் கிடைக்காது!) பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு விலைவாசி உயர்வு ஒரு காரணம். தவிர, பிற கடைகளில் விற்கும் பொருட்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பது இன்னொரு காரணம்.  

இந்தியாவில் 10 கோடிக்கும் மேலானவர்களிடம் இன்டர்நெட் வசதி உள்ளது. இதில் 50 சதவிகிதத்தினர் ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறார்கள். காலத்திற்கேற்பவும், பொருளாதார வசதிக்கேற்பவும் பொருட்களை வாங்கும் விதத்திலும் நுகர்வோர்கள் மாறிவருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.      

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லறை வணிகத்தின் பங்கு சுமார் 20%. வேலைக்குச் செல்லும் இந்தியர்களில் 8% பேர் இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைக்கு இந்தியச் சில்லறை வணிகத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர்கள் (ரூ.30 லட்சம் கோடி)!

பணப்புழக்கத்தால் மாற்றம்!
இந்திய ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் மத்தியதர வர்க்கத்தினர்; 50 கோடி மக்களின் வயது 25-க்கும் குறைவு. பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை, உலகமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றினால் வேலைவாய்ப்புகளும், வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும், குறிப்பாக பெண்கள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையேயான பணப்புழக்கத்திலும், வாங்கக்கூடிய பொருட்களிலும், அவைகளை வாங்கும் இடங்களிலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாகவே ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இளைஞர்களின் நிலை!
பலசரக்குக் கடைகளில் பொருட்களை வாங்கிய நாம் இன்று சூப்பர் மார்க்கெட்களை நோக்கி மெல்ல மெல்ல மாறி வருகிறோம். ஆனால், இன்றைக்கும் எஃப்.எம்.சி.ஜி வணிகத்தைப் பொறுத்தவரை, 94% சிறிய அளவிலான பலசரக்குக் கடைகளின் கையில்தான் இருக்கிறது. சூப்பர் மார்க்கெட் போன்ற நவீன வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனையாகும் பொருட்கள் வெறும் 6 சதவிகிதம்தான்.

ஆனால், இந்த நவீன வர்த்தக நிறுவனங்களுக்கே சவால்விடும் வகையில் இன்றைக்கு 'ஆன்லைன்வர்த்தகம் 15 வயதிலிருந்து 34 வயதுக்குட்பட்டவர்களிடையே வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களில் 75 சதவிகிதத்தினர் இந்த வயதைச் சேர்ந்தவர்கள்தான்.
சலுகைகள், வசதிகள்!
84 லட்சம் பலசரக்குக் கடைகளுக்கு மத்தியில் சுமாராக 10,000 சூப்பர் மற்றும் ஹைபர் மார்க்கெட்டுகள் உள்ளன. இதற்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப நுகர்வோர்கள் செலவழிக்கும் தொகையும் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், அனைத்துப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வசதியும், விழாக்காலச் சலுகைகளும்தான். ஜனவரி 26, ஆகஸ்ட் 15, மே 1 போன்ற பொதுவிடுமுறை தினங்களன்று பெரும்பாலான சூப்பர் மற்றும் ஹைபர் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் மூலம் நுகர்வோர்களை கவர்ந்திழுக்கின்றன.

இன்டர்நெட், ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துவரும் இந்நாளில் இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் என்கிற ஆன்லைன் வர்த்தகமும் நுகர்வோர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. வீட்டில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்வதும், எரிபொருளின் விலை அதிகரிப்பும், பணம் செலுத்துவதற்கு பாதுகாப்பான 'கேட்வேவசதியை இந்த வலைதளங்கள் அளிப்பதும் இம்மாதிரியான வர்த்தகம் பிரபலமாகி வருவதற்குக் காரணங்கள்.

பழக்கத்தில் மாற்றம்!
இன்றைக்கு இந்த வலைதளங்களின் மூலம் என்ன பொருட்கள் வேண்டுமானலும் வாங்கக்கூடிய வசதி வந்துவிட்டது. முன்பு 'தொட்டுப் பார்த்துவாங்கக்கூடிய பொருட்களான காய்கறிகள், துணிமணிகள் போன்றவைகள்கூட இன்றைக்குத் தொடாமல் 'பார்த்துமட்டுமே (வலைத்தளத்தில் அப்பொருட்கள் சம்பந்தப்பட்டப் படங்களின் அடிப்படையில்) வாங்க நுகர்வோர்கள் பழகிவிட்டார்கள்.  
மாறும் டிரெண்ட்!
முன்பெல்லாம் விலைஉயர்ந்த பொருளை வாங்கினால் அதை ஏறக்குறைய வாழ்நாள் வரை பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு, ஐஃபோன் 4 அறிமுகமாகி ஒரு சில மாதங்களே ஆகியிருந்தாலும், அதை தந்துவிட்டு தள்ளுபடி விலையில் ஐஃபோன் 5 s¨க்கு தங்களை 'உயர்த்திக்கொள்ளும்படிஆப்பிள் பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. அதற்கும் கூட்டம் அலைமோதுகிறது.    

இன்னொரு டிரெண்ட் என்னவெனில், ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஆன்லைனில் அதுபற்றிய தகவல்களைத் சேகரித்து அந்தப் பொருட்களைக் கடைகளுக்குச் சென்று வாங்குவதும், கடைகளுக்குச் சென்று தேவையானப் பொருட்களைப் பார்த்துவிட்டு வந்து விலை குறைவு என்கிற காரணத்தினாலும், டோர் டெலிவரி வசதி இருப்பதாலும் அந்தப் பொருட்களை ஆன்லைனில் வாங்கவும் செய்கிறார்கள்.  
இந்தியாவில் இ-காமர்ஸ்!
இன்றைக்கு இந்தியாவில் இந்த இ-காமர்ஸ் வர்த்தகம் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள் வாங்குவதற்கும், எலெக்ட்ரிக் பில், போன் பில் போன்றவைகள் கட்டுவதற்கும், புத்தகங்கள், துணிமணிகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், போன்கள் என அனைத்துப் பொருட்களை வாங்குவதற்கும் வசதியாக இருக்கிறது. இதன்மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு 'க்ளிக்கில் பொருட்களை நமது இல்லத்துக்கு வரவழைக்க முடியும்.

'ஒர்க்லைஃப் பேலன்ஸ்என்பது குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வரும் இந்த நாளில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால் நேரம் மிச்சம் ஆகிறது. மிச்சமாகும் நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட முடிகிறது. இந்தியாவின் மொத்த இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஏறக்குறைய 24% 'காலில் வெந்நீர் கொட்டியதுபோல எப்போதும் பரபரப்பாக இருக்கும் மும்பை நகரில் வசிக்கும் நுகர்வோர்களின் மூலம் கிடைக்கிறது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
கலாசார மாற்றம்!
தெருமுனையில் இருக்கும் நாயர் கடையில் ரூ.  5 க்கு டீ, காபி குடிப்பவர்கள் இருக்கும் அதே நகரத்தில் கஃபே காபி டே, ஸ்டார்பக்ஸ், கோஸ்டா போன்ற காபி செயினில் பல மடங்கு அதிகமாக செலவழித்து காபி, டீ குடிக்கும் இளைஞர் பட்டாளமும் இருக்கத்தான் செய்கிறது.
அதுபோல, சமீபகாலத்தில் பிரியாணி விற்கும் தொடர்கடைகளும் அதிகமாகிக் கொண்டேவருகிறது. இதற்குக் காரணம், வீட்டு சமையலறைக்கு அடிக்கடி விடுமுறை அளித்துவிட்டு வெளியே சென்று சாப்பிடுவது போன்ற கலாசாரங்கள் அதிகரித்து வருவதுதான்!  
கன்ஸ்யூமர் இஸ் கிங்!
இன்றைய காலகட்டத்தில் தள்ளுபடி, பொருட்களில் வகைகள் (ஸிணீஸீரீமீ) மற்றும் சிறந்த சேவை போன்ற காரணிகள் நுகர்வோர்களின் நுகர்வுத்தன்மையை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை கொண்டவைகளாக இருக்கின்றன. இன்றைக்கும், என்றைக்கும் 'கன்ஸ்யூமர் இஸ் கிங்என்பதில் மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை.
நுகர்வோர்களிடையே ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப பொருட்களை தயாரிப்பவர்களும், வர்த்தகர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!

Saturday, November 5, 2011

Outliers_50_Nanyam Vikatan

அவுட்லயர்ஸ் (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 50

என் பாட்டிக்கு தனது மகள்களை ஜமைக்காவை விட்டு வெளியே அனுப்பி பிரமாதமாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற உந்துதலும், தீர்க்க தரிசனமும் வேறெங்கிருந்தும் வரவில்லை... அவர் இந்த அனுகூலமான மரபுரிமை என்கிற பாரம்பரியத்தில் வந்தவர். அவருடைய மூத்த சகோதரர் ருஃபூஸ் ஒரு ஆசிரியர். இன்னொரு சகோதரர் கார்லோஸ் கியூபாவிற்குச் சென்று, பிறகு அங்கிருந்து ஜமைக்காவுக்கே வந்து ஒரு கார்மென்ட் தொழிற்சாலையை நிறுவினார். என் அப்பாவின் தந்தையான சார்லஸ் ஃபோர்ட் ஒரு மொத்த வியாபாரி. அவருடைய அம்மாவும்கூட நன்கு படித்தவர். பணக்கார 'கலர்டு’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

என்னுடைய பாட்டி மிகவும் தனிச்சிறப்பு மிக்க சிந்தனைகள் கொண்டவர் என்று சொல்லியிருந்தேன். இதில் முக்கியமாக நினைவு கூறத்தக்கது என்னவெனில், ஃபோர்ட் குடும்பத்தினர் அதுவரை அடைந்து வந்த நிலையான வளர்ச்சி. இதன் ஆரம்பம் என்னவோ ஒழுக்க வரையறைகளை மீறக்கூடிய மிகவும் சிக்கலான விஷயத்திலிருந்துதான் ஆரம்பித்தது. அதாவது, என்னுடைய அம்மாவின் கொள்ளு தாத்தாவான வில்லியம் ஃபோர்ட் தன் துணையை - அதாவது என் கொள்ளுப் பாட்டியை அடிமைகள் சந்தையில் அலிகேட்டர் பாண்ட்டில் வாங்கினார்.
இந்த மாதிரி விருப்பப்பட்டு விலைக்கு வராத அடிமைகளின் வாழ்க்கை சந்தோஷம் அற்றதாக இருந்தது. ஜமைக்காவில் இருந்த தோட்ட முதலாளிகள் தங்களுடைய 'மனிதச் சொத்தான’ அடிமைகளிடம் எவ்வளவு தூரம் வேலை வாங்க முடியுமோ வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு வயதான பிறகு அல்லது அவர்கள் இறந்த பிறகு இன்னொரு சுற்று அடிமைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த அடிமைகள் மூலம் பெற்ற குழந்தைகளுடன் கொஞ்சி கும்மாளம் போடும் அதே நேரம், அந்த அடிமையை தனது சொத்தாகப் பாவிப்பது பற்றி அவர்கள் துளியளவும் கவலைப்படவில்லை.

திஸ்ஸிவுட் என்கிற (தனது பாலியல் விவகாரங்களை டயரி யில் குறித்து வைத்திருந்தவர்) தோட்ட முதலாளி தனது வாழ்நாள் முழுவதும் ஃபிபா என்கிற அடிமையுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் அவளை மிகவும் நல்ல நிலையில் வைத்திருந்தார். அவள் மூலம் அவருக்கு ஒரு மகன் உண்டு. ஆனால், அவர் தோட்டத்தில் வேலை பார்க்கும் மற்ற அடிமைகளைப் பொறுத்தவரை அவர் ஒரு 'மான்ஸ்டர்’... அதாவது, மிருகம் போன்றவர். அவரை விட்டுவிட்டு ஓட நினைப்பவர்களுக்கு அவர் கொடுக்கும் தண்டனைக்குப் பெயர் 'டெர்பி டோஸ்’. ஓட முயற்சிப்பவர்களை நன்கு அடித்து, அந்தப் புண்களில் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, மிளகுத்தூள் போன்றவற்றை நன்கு தேய்த்தெடுப்பார்கள். வேறொரு அடிமையின் கழிவை, ஓடிப் போக முயற்சித்த அடிமையின் வாயில் ஊற்றச் சொல்லி ரசிப்பார்கள். கழிவு ஊற்றப்பட்ட வாயை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு கட்டுப் போட்டு மூடிவிடுவார்கள்.

இதனால், கோதுமை நிறத்தினர் தங்களை அதிகார பலம் மிக்கவர்களாகவும், இதுபோன்ற கொடுமைகள் இல்லாமல் வாழக்கூடிய சந்தோஷத்தை அனுபவிப்பவர் களாகவும் இருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. இது அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. அவர்கள் ஒவ்வொருவருடைய தோலின் நிறத்தை வைத்துக் கொண்டு கொடூரமாக வெள்ளையர்களைப் போல விளையாடினார்கள். 'ஒரே குடும்பத்தில் பல நிறத்தை உடையவர்கள் இருந்ததும் உண்டு. இது அங்கே சாதாரணமாக பெரும்பாலான குடும்பங்களில் காணப்பட்டது. அவர்களுடைய நிலை பற்றி சமூகவியலாளர் ஃபெர்னாண்டோ ஹென்றிக்ஸ் என்பவர்,
''மிகவும் 'லைட்’ கலர் கொண்டவர்களுக்குத் தனிச் சலுகைகள் கிடைத்தன. அவர்களின் இளமைக் காலம் அல்லது திருமணம் ஆகும் வரை 'லைட் கலர்’ கொண்டவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வந்தால் 'டார்க்’ கலர் கொண்டவர்களை அந்த சந்தர்ப்பங்களில் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. 'லைட் கலர்’ கொண்ட குழந்தைதான் அந்த குடும்பத்தின் கலர் என்று பிரகடனப்படுத்தபட்டார்கள். இதன் மூலம் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குக் குறுக்காக எதையும் வர அனுமதிப்பதில்லை.

'லைட் கலர்’ கொண்ட குடும்பத்தினர் தங்களுடைய 'டார்க் கலர்’ கொண்ட உறவினர்களின் தொடர்பை துண்டிக்கவும்கூட தயங்குவதில்லை... அதுபோல 'டார்க் கலர்’ கொண்ட நீக்ரோ குடும்பத்தினர், தங்களிலேயே கொஞ்சம் வெளுப்பாக இருப்பவர்கள் போய், வெள்ளையர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதை ஊக்குவித்தனர். இந்த மாதிரி நிறத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்பத்திற்குள் ஏற்பட்ட உறவுமுறைகளே பின்பு பொது வாழ்விலும் வெளிப்படத் தொடங்கியது'' என்கிறார்.

எனது குடும்பம் இதற்கெல் லாம் பழக்கப்பட்டதில்லை. டெய்ஸி தன்னைவிட தனது கணவர் 'லைட் கலர்’ என்பதில் பெருமிதம் கொண்டவர். 'டெய்ஸி நல்லவள்தான். ஆனால், கொஞ்சம் கறுப்பு'’ என அவருடைய மாமியார் அவரைப் பற்றி கிண்டலாகச் சொல்வாராம்.

எனது அம்மா வழி உறவில் ஒருவர் உண்டு. அவரை நான் ஜோன் அத்தை என அழைப்பேன். அவர் 'ஒயிட் லைட்’ நிற வகையைச் சேர்ந்தவர். ஆனால், அவருடைய கணவர் ஜமைக்காவில் 'இன் ஜூன்’ என அழைக்கப்படும் கறுப்பு நிறமும், நீளமாகவும் நேராகவும் வளர்ந்து நிற்கும் முடியையும் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவர்களுடைய மகள்களும் அப்பாவைப் போலவே கறுப்பு. அவர் இறந்த பிறகு ஒருநாள் அத்தை ஜோன் தனது மகளைப் பார்ப்பதற்காக ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த 'லைட் கலர்’ தோலைக் கொண்ட ஒருவரின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

அது மிகவும் கேவலமான ஒன்று... என் அத்தை ரயிலிலிருந்து இறங்கும்போது அந்த 'லைட் கலர்’ ஆசாமியும் பின்னாடியே இறங்கியிருக்கிறார். உடனே அத்தை தனக்காக அங்கே காத்திருந்த தனது மகளைப் பார்த்தும் பார்க்காதது போல்... யாரோ போல மெள்ள நகர்ந்து சென்றுவிட்டார். காரணம், தனது மகள் இவ்வளவு கறுப்பாக இருக்கிறாள் என்று தன்னுடன் பயணம் செய்த அந்த யாரோ ஒருவருக்கு தெரியக் கூடாதாம்!

1960-ம் ஆண்டு என்னுடைய அம்மா தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். அதன் பெயர், 'பிரௌன் ஃபேஸ், பிக் மாஸ்டர்'! இதில் பிரௌன் ஃபேஸ் என்பது அவரையும், பிக் மாஸ்டர் என்பது ஜமைக்கன் பேச்சு வழக்குப்படி கடவுளையும் குறிப்பதாகும். திருமணத்திற்குப் பிறகு லண்டனில் வசித்து வந்த எனது பெற்றோர் தங்குவதற்காக அபார்ட்மென்ட் தேடியிருக்கிறார்கள். அப்போது நான் பிறக்கவில்லை.
எனது மூத்த சகோதரர் குழந்தையாக இருந்தார். கடைசியாக என் அப்பா ஒரு நல்ல அபார்ட்மென்டை பார்த்து குடியேறிய இரண்டாவது நாளில் அந்த வீட்டுக்காரப் பெண்மணி என் அப்பாவிடம், ''நீங்கள் ஏன் உங்கள் மனைவி ஜமைக்காவைச் சேர்ந்தவர் என முதலிலேயே சொல்லவில்லை? வீட்டை உடனே காலி செய்யுங்கள்'' என கோபாவேசத்துடன் கூறியதாக அம்மா அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அம்மா தனது புத்தகத்தில் இந்த மாதிரியான அவமானங்களுக்கு அர்த்தம் என்னவென்று கண்டுபிடிக்க போராடியிருக்கிறார். இறுதியில் அவர் 'இதுதான் நடைமுறை' என்று ஒப்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'கலர்டு’ ஜமைக்கன்கள் தலைமுறை, தலைமுறையாக இந்த நிற வேற்றுமையினால் நன்மை அடைந்திருக்கிறார்கள். எனவே, அவர் இன்னொருவரிடம் போய், 'தோலின் நிறத்தை வைத்து வேற்றுமைப்படுத்திப் பார்க்காதீர்கள்' என்று கடிந்து கொள்ள முடியாது.
நாம் எங்கிருந்து வந்தோம் என்கிற உண்மையைச் சொல்லிக் கொள்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல. பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து வெற்றி பெற்ற அம்மா தன்னை அந்த மாதிரி காட்டிக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை.

அதாவது, ஜோ ஃபுளோமைப் பார்த்து மிகச் சிறந்த வக்கீல் என்று சொல்வதுபோல, அவருடைய தனிப்பட்ட சாதனைகள் அவருடைய இனம், தலைமுறை, கார்மென்ட் தொழில் மற்றும் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த சட்ட நிறுவனங்களுக்கு உண்டான சிறப்புத் தகுதிகள் ஆகியவற்றுடன் நினைக்க முடியாத அளவிற்கு பின்னிப் பினைந்து இருந்தாலும் கூட!

சூப்பர் ஸ்டார் வக்கீல்களாக இருக்கட்டும், கணித மேதைகளாகட்டும், மென்பொருள் தொழில் முனைவோர்களாகட்டும்... அவர்கள் இது தங்களுக்கு இயல்பாகவே அமைந்த வெற்றி என்று கூறுவார்கள். ஆனால், அது அப்படியல்ல என்பதே உண்மை. அவர்கள் எல்லோரும் வரலாறு மற்றும் சமூகம், வாய்ப்புகள் மற்றும் மரபுரிமை போன்றவற்றின் சாதகங்களையும் சேர்த்தே எடுத்து கொண்டு மற்றவர் களைவிட வேகமாக வளர்ந்தவர் கள்! இவர்களுடைய வெற்றி அதிசயமானதோ, மர்மமானதோ இல்லை. இவர்களுடைய வெற்றிக்குக் காரணம் சாதகமான சூழ்நிலை கள் மற்றும் பாரம்பரியம்.
சிலர் இந்த வெற்றிக்கு தகுதி படைத்தவர்களாக தங்களை ஆக்கிக் கொண்டார்கள். சிலர் அந்த சூழ்நிலைகள் அமைந்தும் கோட்டைவிட்டார்கள். சிலர் கடினமாக உழைத்தவர்கள், சிலருக்கு அதிர்ஷ்டம் வாய்த்தது. ஆனால், இவை யெல்லாம் அவர்கள் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையை அடைய உதவிய காரணிகள் என்பதை மறுக்கவே முடியாது.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது 'அவுட்லயர்’கள் எல்லாம் 'அவுட்லயர்’களே அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்..

என்னுடைய பாட்டிக்கு பாட்டி அலிகேட்டர் பாண்ட்டில் அடிமையாக வாங்கப்பட்டவர். இதனால் அவருடைய மகன் ஜானுக்கு அவருடைய நிறத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. அதுவே அன்றைய காலகட்டத்தில் அவருக்கு அனுகூலமாக அமைந்தது. இதனால் அவர் அடிமை வேலை செய்யும் வாழ்க்கையிலிருந்து தப்பித்தார்.

டெய்ஸி ஃபோர்ட் என்கிற என் பாட்டி பின்பற்றிய 'முடியும்’ என்கிற கலாசாரக் கோட்பாடு அவருடைய மகள்களின் சார்பாக செயலாற்ற உதவியது. அதுபோல எனது அம்மாவின் படிப்பிற்குக் காரணம் மேக் மில்லனின் எச்சரிக்கையும், 1937-ல் ஏற்பட்ட கலகமும், மிஸ்டர் சான்ஸ் மூலமாக கிடைத்த பண உதவியும்தான்.

இவையெல்லாம் சரித்திரத் தின் நிகழ்வுகள்; எனது குடும்பத்திற்குக் கொடுத்த பரிசுகள். பல சரக்குக் கடைக்காரரிடமிருந்த வளமும், கலகத்தினால் ஏற்பட்ட பலனும், முடியும் என்கிற கலாசாரம் தழுவிய வாழ்வும், தோல் நிறத்தினால் ஏற்பட்ட அனுகூலமும் என் பெற்றோரின் வளர்ச்சி மூலமாக எனக்குக் கிடைத்தது போல மற்றவர்களுக்கும் கிடைத்திருந்தால்... இன்னும் எத்தனைபேர் முழுமையான வாழ்வைப் பெற்று இன்றைக்குக் குன்றின் மீது அழகான ஒரு வீடு கட்டிக் கொண்டு சந்தோஷம் பொங்க வசித்துக் கொண்டிருப்பார்கள்!

(நிறைந்தது)



Sunday, October 30, 2011

Outliers_49_Nanayam Vikatan

அவுட்லயர்ஸ் : தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 49

என் பாட்டி டெய்ஸி நேஷன் ஜமைக்காவின் வடமேற்கிலிருந்து வந்தவர். அவருடைய தாத்தாவின் அப்பா பெயர் வில்லியம் ஃபோர்ட். அவர் அயர்லாந்திலிருந்து ஜமைக்காவிற்கு 1784-ல் வந்தவர். அதற்குப் பிறகு அங்கு ஒரு காப்பித் தோட்டம் வாங்கினார். சில நாட்கள் கழித்து ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி தன்னுடைய ஆசைநாயகியாக ஆக்கிக் கொண்டார்.
அந்தப் பெண்ணை அலிகேட்டர் பாண்ட் என்கிற ஒரு மீனவ கிராமத்தில்தான் பார்த்தார். அவள் மேற்கு ஆப்பிரிக்க மலைஜாதி வம்சமான இக்போ இனத்தைச் சேர்ந்தவள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அவர்கள் ஜான் என பெயரிட்டார்கள். அவன் ஒரு 'முலாட்டோ’... அதாவது 'நிறம் கொண்டவன்’ என்று பொருள். அந்த காலகட்டத்திலிருந்து வில்லியம் ஃபோர்ட் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் ஜமைக்கன் 'கலர்டு’ வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள்.

அதே காலகட்டத்தில் தென் அமெரிக்காவில், வெள்ளையர் ஒருவர் அடிமை ஒருத்தியுடன் அனைவரும் அறியும்படி உறவு வைத்திருப்பது என்பதே மிகவும் அரிதான தாகும். வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் இடையேயான செக்ஸ் உறவு ஒழுக்கக் குற்றம் என கருதப்பட்ட காலம் அது. இதற்காக சட்டம்கூட அமலாக்கப்பட்டது. இது 1967 வரை அமலில் இருந்தது.

ஒரு தோட்டத்தின் அதிபர், ஒரு அடிமையுடன் அனைவருக்கும் தெரியும் வகையில் குடும்பம் நடத்தி வந்தால் அவர் சமூகத்தால் தள்ளி வைக்கப்படுவார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லோரும் அடிமை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

ஆனால், ஜமைக்காவிலோ இதற்கான அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. அந்த கரீபிய நாடு கிட்டத்தட்ட ஒரு அடிமைகளின் காலனி போலதான் இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு 1 வெள்ளையர் என்கிற விகிதாசாரம்... அதாவது, கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்தனர். அதனால், திருமண வயதில் இருந்த வெள்ளை யின பெண்கள் மிக, மிகக் குறைவு. இதனால் வெள்ளையர்களில் பெரும்பாலானோர் கறுப்பு அல்லது கோதுமை நிறத்திலிருக்கும் பெண்களை தங்களின் 'துணையாக’ வைத்துக் கொண்டனர்.

ஒரு பிரிட்டிஷ் தோட்ட அதிபர் அவருடைய பாலியல் அனுபவம் பற்றி தனது டயரியில் குறித்து வைத்திருந்தார். அதன்படி அவர் அங்கிருந்த 37 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 138 பெண்களுடன் உறவு கொண்டிருந்தார்.

வெள்ளையர்கள் ஒரு கட்டத்தில் 'முலாட்டோ’க்களை தங்களது கூட்டாளிகளாக கருத ஆரம்பித்தனர். காரணம், இவர்கள் எல்லோரும் வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் பிறந்தவர்கள். இதனால் முலாட்டோ பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே கிராக்கி இருந்தது. இவர் களுடைய குழந்தைகள் கறுப்பினக் குழந்தைகளைவிட நிறத்தில் கொஞ்சம் 'தூக்கலாக’ இருந்தனர். இதனால் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தில் கொஞ்சம் உயரத்தில் இருந்தனர்.

வயலில் பாடுபட்டு வேலை பார்க்கும் முலாட்டோக்களைப் பார்ப்பது மிகவும் அரிது. அவர்களுடைய வாழ்க்கை எளிதாக இருந்தது. அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பதோடு சரி. அவர்கள் மிகவும் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். வெள்ளையினத்தைச் சேர்ந்த தோட்ட அதிபர்கள் தங்களுடைய உயிலில் தங்களது 'முலாட்டோ’ துணைகளுக்கு அதிகமான சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றனர். இதை அறிந்த ஜமைக்கா அரசாங்கம் இந்த சொத்துக்கள் அதிகபட்சமாக 2,000 பவுண்டுகள்தான் (அந்தக் காலத்திற்கு இந்தத் தொகையே மிக மிக அதிகம்) இருக்கலாம் என சட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டு வந்தது.

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் தனது குறிப்பில், 'மேற்கிந்திய தீவுகளுக்கு வரும் ஐரோப்பியர்கள் அங்கு அதிக நாட்கள் தங்க உத்தேசிக்கும் வேளையில், அவர்களுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு 'ஹவுஸ்கீப்பர்’ அல்லது 'துணை’ தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்கு கறுப்பினத்தவர், டானே, முலாட்டோ அல்லது மெஸ்டி என பல இனத்தைச் சேர்ந்தவர்கள் 100 அல்லது 150 ஸ்டெர்லிங்கிற்குக் கிடைத்தார்கள். நிற வேற்றுமை கொண்ட சந்ததிகளின் குழந்தைகளுக்கு சமூகத்தில் உயர் அந்தஸ்து கிடைத்தது. இவர்களில் பெரும்பாலோர் அவர்களுடைய மூன்றாவது அல்லது நான்காவது வயதில் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர்' என்று கூறுகிறார்.

இந்த மாதிரியான காலகட்டத் தில்தான் என் பாட்டியின் தந்தை டெய்ஸினுடைய தாத்தா ஜான் பிறந்து வளர்ந்தார். இவர் சுதந்திரமாகவும், கல்விக்கான அனைத்து வசதிகளும் பெற்றிருந்தார். இவர் ஒரு முலாட்டோவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் ஐரோப்பியர் ஒருவருக்கும், ஆராவக் என்கிற ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர். இவர்களுக்கு 7 குழந்தைகள் இருந்தனர்.

'இவர்களுக்கு இந்த இடைப்பட்ட நிறத்தைக் கொண்டவர்கள் சமூகத்தில் அந்தஸ்து அதிகமாக இருந்தது' என ஜமைக்காவைச் சேர்ந்த ஓர்லாண்டோ பாட்டர்ஸன் என்கிற சமூகவியலாளர் கூறுகிறார். மேலும் அவர், '1826-க்கு முன்பே அவர்களுக்கு முழுமையான சிவில் லிபர்டி இருந்தது. அதாவது, அந்த நேரத்தில் ஜமைக்காவில் யூதர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்ததோ, அவ்வளவு அதிகாரம் இவர்களுக்கும் இருந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை இருந்தது. வெள்ளை இனத்தவர்கள் செய்த அத்தனை விஷயங்களையும் இவர்கள் செய்தார்கள். ஜமைக்கா அடிமைச் சமூக அமைப்பைக் கொண்டிருந்த வேளையில்கூட அவர்களுக்கு இது சாத்தியமாக இருந்தது.

ஜமைக்காவில் அதிகமாக கரும்புத் தோட்டங்கள் இருந்தன. இது தென் அமெரிக்காவில் இருந்த பருத்தி தோட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. செடியிலிருந்து பருத்தியை எடுத்து பிராஸஸ் செய்வதற்கு லங்காஷைர் அல்லது வடக்கில் உள்ள மற்ற இடங்களுக்கு அனுப்புவார்கள். ஆனால், கரும்பு பயிரிடும்போது இதற்கு தொழிற்சாலை பக்கத்திலேயே இருக்க வேண்டும். காரணம், வயலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரும்பு அதில் உள்ள சர்கோஸ்ஸை இழந்துவிடும். கரும்பு பிழியும் தொழிற்சாலை அருகேயே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கரும்புத் தொழிற்சாலைக்குப் பல்வேறுபட்ட தொழில் தெரிந்தவர்கள் தேவைப்பட்டது. பேரல் தயாரிப்பவர்கள், பாய்லர் வேலை தெரிந்தவர்கள், தச்சு வேலை செய்பவர்கள் என பலவகையான தொழில் தெரிந்தவர்கள் தேவைப் பட்டனர். இந்த வேலைகளை கறுப்பினத்தவர்கள் செய்து வந்தனர்.

ஜமைக்காவில் வாழ்ந்து வந்த ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள் போல நாட்டை வளப்படுத்துவதில் அதிகமாக அக்கறை காட்டவில்லை. அவர்கள் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பிப் போகவே விருப்பப்பட்டனர். அவர்கள் ஜமைக்காவிலேயே தொடர்ந்து வசிக்க விரும்ப வில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு கலகக்கார நாடாகவே இருந்தது. இதனால் புதிய சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு புதிதாக உருவான மற்ற இனத்தவர்களின் மேல் விழுந்தது.

1850 வாக்கில் ஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டன்னுக்கு வேறொரு 'நிறம்' கொண்டவர் மேயர் ஆனார். அதேபோல் ஜமைக்கா நாட்டின் 'டெய்லி கிளெனர்’ என்கிற பிரபல தினசரியின் ஸ்தாபகரும் வேறு நிறத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இதுபோல பல புரபஷனல் துறைகளில் இவர்கள் தலை தூக்க ஆரம்பித்தனர். வெள்ளையர்கள் பிஸினஸ்மேன்களாகவோ அல்லது தோட்ட அதிபர் களாகவோ இருந்தார்கள். மற்ற நிறத்தைச் சார்ந்தவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள், ஆசிரியர்களாக ஆனார்கள்.
கடந்த அத்தியாயத்தில் நான் சொன்ன கிங்ஸ்டன் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் கோதுமை நிறத்தைச் சார்ந்தவர். இவரும் இவர் நிறத்தைச் சார்ந்தவர்களும் பொருளாதார ரீதியில் உயர்ந்த அந்தஸ்தில் இல்லை என்றாலும், கலாசார ரீதியில் நல்ல அந்தஸ்தில் இருந்தனர்.

மேலே உள்ள அட்டவணையில் 1950-களில் இருந்த இரண்டு வகையான ஜமைக்கன் புரபஷனல்கள்... அதாவது, வக்கீல்கள் மற்றும் எம்.பி.க்கள் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தோலினுடைய நிறத்தைப் பொறுத்தது. 'ஒயிட் அண்ட் லைட்’ வகையைச் சேர்ந்தவர்கள் ஒன்று முழுவதுமாக வெள்ளை இனத்தினர் அல்லது கொஞ்சம் கறுப்பின பாரம்பரியம் கொண்டவர்கள். 'ஆலிவ்’ நிறத்தவர்கள் ஒயிட்டிற்கு ஒரு படி கீழே... 'லைட் பிரௌன்’ நிறத்தவர்கள் ஆலிவ் நிறத்தவர்களுக்கு ஒரு படி கீழே (ஆனால், இந்த இரண்டு நிறத்தவர்களையும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்வது ஜமைக்கர் களைத் தவிர மற்றவர்களுக்குக் கடினம்.)

அட்டவணையைப் பார்க்கும்போது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், 1950-களில் ஜமைக்கா மக்கள் தொகையில் கறுப்பினத்தவர்கள் 80 சதவிகிதத்தினர். இது 5-க்கு 1 என்கிற விகிதாசாரத்தில் இருந்த மற்ற எல்லா நிறத்தினரையும்விட மிக அதிகம்.

கொஞ்சம் வெள்ளை நிறம் சேர்ந்ததினால் 'கலர்டு’ மைனாரிட்டிக்கு ஏற்பட்ட அசாதாரண நன்மையைப் பாருங்கள். வயலில் வேலை பார்க்காமல் வீட்டில் மட்டும் வேலை பார்த்தவர்களுக்கு 1826-லியே சிவில் உரிமைகள் கிடைத்தன. அவர்கள் மதிப்பு மிக்கவர்களாக கருதப்பட்டார் கள். கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்காமல் அறிவு மற்றும் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ள வேலையில் ஈடுபட்டனர். இவையனைத்தும் அவர்கள் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் கழித்து தொழில் ரீதியில் பெற்ற பெரும் வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்த வழியில் வந்த எனது மூதாதையர் குடும்பம் மட்டும் எப்படி வேறுவிதமாக இருந்திருக்க முடியும்?

(அடுத்த இதழுடன் நிறைவு பெறும்)

Copyright © 2008 by Malcolm Gladwell

Saturday, October 22, 2011

Outliers_48, Nanayam Vikatan_Oct 30, 2011

அவுட்லயர்ஸ் :


ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 48





அது 1931-ம் வருடம், செப்டம்பர் 9-ம் தேதி...



டெய்ஸி நேஷன் என்கிற இளவயது பெண்ணொருத்தி இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். மத்திய ஜமைக்காவில் ஹாரேவுட் என்கிற கிராமத்தைச் சேர்ந்த செயின்ட் கேதரின் தேவாலய மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணும் அவளது கணவர் டொனால்டும் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தார்கள். பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் ஃபெயித், ஜாய்ஸ் என்று பெயரிட்டனர்.



நேஷன் குடும்பத்தினர் ஹாரேவுட்டில் இருந்த, இங்கிலாந்து நாட்டு திருச்சபையைச் சார்ந்த தேவாலயத்தில் இருந்த ஒரு காட்டேஜில் வசித்து வந்தனர். அவர்கள் வேலை பார்த்து வந்த பள்ளிக்கூடம் அதற்கு அருகிலேயே இருந்தது. சில சமயங்களில் ஒரு அறையில் முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் மற்ற அறைகளில் இரண்டு டஜனுக்கும் குறைவான குழந்தைகளும் இருப்பார்கள். குழந்தைகள் மிகவும் சத்தமாகப் படிக்கவோ அல்லது வாய்ப்பாட்டை மனனம் செய்தபடியோ இருப்பார்கள்.



ஸ்லேட்டில்தான் எழுது வார்கள். சில நேரங்களில் தேவைப்பட்டால் வெளியே மாமரத்திற்குக் கீழே வகுப்புகள் நடக்கும். குழந்தைகளைக் கட்டுப்படுத்த டொனால்ட் நேஷன் அந்த அறையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஒரு குச்சியை சுழற்றிக் கொண்டே நடப்பார். குழந்தைகளும் இதைப் பார்த்தவுடன் சட்டென்று அடங்கிவிடுவார்கள்.

இவர் அடக்கமானவர், மற்றவர்களால் மதிக்கப் பட்டவர். புத்தகங்களின் மீது தீராத காதல் கொண்டவர். இவருடைய சிறிய நூலகத்தில் கவிதை, தத்துவம், நாவல்கள் என தரமான பல புத்தகங்கள் இருந்தன. ஒவ்வொரு நாளும் இவர் மிகவும் கவனத்துடன் பத்திரிகையைப் படித்து உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வார். ஜமைக்காவின் பிரச்னைகள் குறித்து நண்பர்களுடன் அலசிக் கொண்டிருப்பார்.



டொனால்டின் மனைவி செயின்ட் எலிசபெத் தேவாலயத்தைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு முன் அவருடைய பெயர் ஃபோர்ட். அவருடைய அப்பா ஒரு சிறிய பலசரக்குக் கடை வைத்திருந்தார். இவரையும் சேர்த்து மூன்று பெண்கள். இது இவ்வாறு இருக்க... பிறந்து வளர்ந்த இரட்டையர்களுக்குப் பதினொரு வயதில் நார்த் கோஸ்ட்டில் உள்ள செயின்ட் ஹில்டா பள்ளிக்கூடத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.


இது மிகவும் பழமையான ஒரு ஆங்கிலப்பள்ளி. செயின்ட் ஹில்டாவிலிருந்து அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்கள். அங்கும் அவர்களுக்கு அட்மிஷன் கிடைத்தது.அதற்குப்பின், ஜாய்ஸ் 21 வயது நிரம்பிய ஆங்கில கணிதவியலாளரான கிரஹாமின் பிறந்தநாள் விருந்துக்குச் சென்றிருந்தார். அவர் எழுந்து ஒரு பாடலை பாட ஆரம்பித்து இடையில் சில வரிகள் மறந்து போனதால் அப்படியே நிறுத்திவிட்டார். இதன்பிறகு ஜாய்ஸும், கிரஹாமும் காதலில் விழ... அது அவர்களின் கல்யாணத்தில் முடிந்தது.



அதற்குப் பிறகு அவர்கள் கனடாவிற்குச் சென்றார்கள். ஜாய்ஸ் மிகவும் பிரபலமான எழுத்தாளரும், குடும்ப தெரப்பிஸ்ட்டும் ஆனார். அவர்களுக்கு மூன்று மகன்கள். நகரத்தை விட்டு தள்ளி குன்றின் மீது அழகான வீடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கிரஹாமின் பின்பாதிப் பெயர் கிளாட்வெல். அது வேறு யாருமல்ல... எனது அப்பா. புரிந்ததா..? ஜாய்ஸ் கிளாட்வெல் வேறு யாருமல்ல... மால்கம் கிளாட்வெல் ஆகிய என் அம்மா!

ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரின் மகளான என் அம்மா வெற்றிகரமானவராக மாறியது எப்படி? என்பதைத் தெரிந்து கொள்ள அவருக்கு கிடைத்த வாய்ப்புகளையும், அவர் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் கலாசார மரபுரிமை பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


ஆண்டு 1935... எனது அம்மாவுக்கும் அவருடைய சகோதரி ஃபெய்த்துக்கும் வயது நான்கு. அப்போது வரலாற்றாசிரியர் வில்லியம் எம்.மேக்மில்லன் ஜமைக்காவிற்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் அவர் தென் ஆப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்த யுனிவர்சிட்டி ஆஃப் விட்வாட்டர்ஸ்ராண்ட்டில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மேக்மில்லன் அவர் காலத்திற்கு முன்னால் உள்ள தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் சம்பந்தப்பட்ட சமூகப் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தி வந்தவர். அவர் தென் ஆப்பிரிக்காவில் என்ன விவாதம் செய்தாரோ... அதையே இந்த கரிபியன் நாட்டிலும் செய்ய வந்தார்.


அனைத்து சமூகப் பிரச்னை களிலும் தலையாயதாக மேக்மில்லன் கருதியது - ஜமைக்காவின் கல்வித் திட்டம். ஜமைக்காவில் பப்ளிக் பள்ளிக்கூடங்களோ அல்லது பல்கலைக்கழகங்களோ இல்லை. உயர்படிப்பு படிக்க வேண்டு மென்ற ஆர்வம் உள்ளவர்கள், பள்ளியிலேயே தலைமை ஆசிரியரிடம் தங்களுடைய டீன் ஏஜ் பருவத்தில் அதிகப்படியான வகுப்புகள் எடுத்துக் கொள்வார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களுக்கான கல்லூரியில் சேர்வார்கள். இன்னும் அதிகப்படியான ஆசை உள்ளவர்கள், எப்படியோ பிரைவேட் பள்ளிக் கூடத்தில் சேர்ந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அங்கிருந்து அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்.



மிகவும் குறைவான ஸ்காலர்ஷிப்கள்தான் உண்டு; அதுவும் கிடைப்பது அரிது. பிரைவேட் பள்ளிக் கூடங்களில் படிப்பதற்கு செலவு அதிகம் ஆகும். எனவே, அதில் ஒரு சிலர்தான் சேர்ந்து படிக்க முடியும். இங்குள்ள கல்விமுறை, சமூகத்தில் நலிந்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறிய மேக்மில்லன், இந்தப் பள்ளிக் கூடங்கள் சமூகத்தில் வேற்றுமையை இன்னும் அதிகப்படுத்தினாலோ, அரசாங்கம் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கா விட்டாலோ வெகு சீக்கிரமே சமூகக் கிளர்ச்சிகள் உருவாகும் எனவும் எச்சரித்தார்.

மேக்மில்லனுடைய புத்தகம் வெளியானதற்குப் பிறகு... அவர் கணித்தது போலவே கரிபியனில் குழப்பங்களும், போராட்டங்களும் வெடித்தன. இதனால் டிரினிடாட்டில் 14 பேர் கொல்லப்பட்டார்கள். பார்படோஸில் 14 பேர்கள் கொல்லப்பட்டார்கள். ஜமைக்காவில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்தன. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.


இதையெல்லாம் பார்த்து பயம் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், மேக்மில்லனின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனையை தீவிரமாக எடுத்துக் கொண்டது. மற்ற சீர்திருத்தங்களுடன், அந்த தீவு முழுவதும் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு வேண்டிய ஸ்காலர்ஷிப் வழங்குவதாகவும் அவசரமாக அறிவித்தது. ஸ்காலர்ஷிப்புகள் 1941-லிருந்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டுதான் என்னுடைய அம்மாவும், அவருடைய சகோதரியும் ஸ்காலர்ஷிப்பிற்கான தேர்வு எழுதினார்கள். இப்படியாகத்தான் அவர் களுக்கு உயர்நிலைப்பள்ளிக் கல்வி கிடைத்தது.




இப்போது நினைத்துப் பாருங்கள்... அவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருந்தால்... குறிப்பிட்ட வயதை அடையும்போது ஸ்காலர்ஷிப் அறிவிப்பே இருந்திருக்காது. அவர்களுக்குப் படிப்புக்கான உதவி கிடைத்திருக்காது. என் அம்மாவும் அவர் சகோதரியும் முழுக் கல்வியைப் பெற்றிருக்க இயலாது.




தவிர, எனது பாட்டி டெய்ஸி நேஷன் எடுத்த சில முடிவுகளும் மிக முக்கியமானவை. என் அம்மாவையும் சித்தியையும் ஹாரேவுட்டை விட்டு செயின்ட் ஹில்டாவிற்குப் படிக்க அனுப்பினார். என் தாத்தாவுக்கு தன் மகள்கள் பற்றி ஏதாவது குறிக்கோள் இருந்திருந்தாலும் அவரிடம் அதை நிறைவேற்றுவதற்கான பரந்த பார்வையும், சக்தியும், தீர்க்கதரிசனமும் இல்லை. ஆனால், என் பாட்டியிடம் அது இருந்தது. பாட்டிக்கு செயின்ட் ஹில்டா பற்றிய யோசனை வந்ததற்கான காரணம் - அந்தப் பகுதியைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தினர் தங்களுடைய மகள்களை அங்குதான் அனுப்பியிருந்தனர். அவருடைய மகள்கள் கிராமத்தில் இருந்த மற்ற குழந்தைகளுடன் விளையாடு வதற்குப் பதில் லத்தீன், அல்ஜீப்ரா போன்ற பாடங்களைக் கற்க முன்வந்தனர். அவை உயர்நிலைப் பள்ளிக்கு மிகவும் அவசியம்.




எனவேதான் அதற்கென்றே தனியாக பாடம் கற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார் பாட்டி. அவருடைய குறிக்கோள் எல்லாம், ''பெரிய படிப்புக்கு வாய்ப்பு இல்லாத இந்த இடத்திலிருந்து வெளியேறுவதுதான்'' என்றுகூட அவர் சொல்லி இருப்பார்.





ஸ்காலர்ஷிப் தேர்விற்கான முடிவு வந்தபோது சித்திக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் கிடைத்ததாம். ஆனால், அவர்கள் ஒரு மகளை தங்களிடமே வைத்துக் கொண்டு இன்னொரு மகளை மட்டும் எப்படி அனுப்புவார்கள்? பாட்டியைப் பொறுத்தவரை கண்டிப்பாக இருவரையும் அனுப்ப வேண்டும் என்றே விரும்பினார். பள்ளிக் கூடத்தின் முதல் டேர்ம் முடியும்போது, அந்தப் பள்ளியில் படித்த இன்னொரு மாணவிக்கு இரண்டு ஸ்காலர்ஷிப்புகள் கிடைத்திருந்தன. இந்த இரண்டாவது ஸ்காலர்ஷிப்பை என் அம்மாவிடம் தந்தனர்.




அதேபோல், பல்கலைக் கழகம் செல்லக்கூடிய சமயம் வரும் போது சித்திக்கு 'சென்ட்னரி ஸ்காலர்ஷிப்’ கிடைத்தது. இதில் உள்ள 'சென்ட்னரி’ என்ற சொல், ஜமைக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு நூறாண்டுகளுக்குப் பிறகு நிறுவியதால் வந்தது. இந்த ஸ்காலர்ஷிப், பொது ஆரம்பப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்த பட்டதாரிகளுக்குக் கொடுக்கப் பட்டது. இந்த ஸ்காலர்ஷிப் தீவு முழுவதிலுமுள்ள மாணவர்கள் நூறு பேர்களுக்கு வழங்கப்படும்.




முதலாவதாக வரும் மாணவி, மாணவன் என மாறி மாறி இந்தப் பரிசு வழங்கப்படும். எனது சித்தி இதற்கு விண்ணப்பித்த வருடம் - ஒரு மாணவிக்கு அந்த வாய்ப்பைத் தரவேண்டிய வருடம். ஆக, ஒரு வருடம் முந்தியோ பிந்தியோ என் சித்தி பிறந்திருந்தால்... இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. அதேசமயம், இரட்டையரில் ஒருவராகப் பிறந்திருந்த என்னுடைய அம்மாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை.




என்னுடைய அம்மா இங்கிலாந்து செல்வதற்கு, அறை வாடகை, அன்றாட செலவு மற்றும் கல்விக் கட்டணம் என எல்லாவற்றிற்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அம்மா யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனில் சேர்ந்திருந்தார். அங்கே செலவழித்த தொகை, என் தாத்தா, பாட்டி ஆகியோர் ஆண்டு முழுவதும் சம்பாதித்த வருமானத்திற்குச் சமமானது! அப்போதெல்லாம் மாணவர் களுக்கென்று படிப்புக்கு கடன் தரும் வழக்கம் இல்லை.



அப்புறம் என்னதான் செய்தார்?




பக்கத்திலிருந்த ஒரு சீன வியாபாரியின் கடைக்குச் சென்றார். 19 -ம் நூற்றாண்டி லிருந்து ஜமைக்காவில் சீன மக்கள் கொஞ்சம் கணிசமான அளவில் இருந்தனர். பெரும்பாலோர் வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருந்தனர். ஐமைக்காவில் சீனர்களுடைய கடைக்கு 'சின்னி ஷாப்’ என்று பெயர். என் பாட்டி அந்த மாதிரியான ஒரு 'சின்னி ஷாப்’பிற்கு சென்றார். அதை நிர்வகித்து வந்தவர் மிஸ்டர் சான்ஸிடம் கடனுக்குப் பணம் வாங்கி வந்தார். அவர் தன் சக்திக்கும் மீறிய ஒரு தொகையை கடனாக வாங்கினார். ஆனால், வாங்கிய கடனுக்கான தவணையை தவறாமல் கட்டி வந்தார். அதற்கும் மேலே சொல்ல வேண்டுமானால், என் பாட்டி டீச்சராக இருந்த பள்ளியில்தான் சான்ஸின் குழந்தைகள் படித்தார்கள்.





தன் கடந்த காலம் பற்றி அம்மா என்னிடம் தொடர்ந்து நினைவு கூரும்போது, 'அது எப்படியோ நடந்தது... நான் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தேன். எனக்கு இடம் கிடைத்தது. நான் எனது அம்மாவின் மேல் உள்ள நம்பிக்கையால் தொடர்ந்து பாடுபட்டுப் படித்தேன்' என்றார்.



இந்த வெற்றிக்கதைக்கு உரமாக அமைந்த அற்புதமான சிறப்புக் காரணிகள் அதோடு முடிந்துவிடவில்லை...





(விதை விருட்சமாகும்)


Copyright © 2008 by Malcolm Gladwell