அவுட்லயர்ஸ்
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 47

மாரிட்டா தன்னுடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை. இவள் பெற்றோரில் அம்மா மட்டுமே உடன் வசித்து வருகிறார். அம்மா கல்லூரி சென்றது கிடையாது. இவர்கள் இருவரும் பிரான்க்ஸில் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்டில் தங்கியிருந்தார்கள். மாரிட்டா வின் அம்மா கிப் பள்ளிக்கூடம் பற்றி அறிவதற்கு முன்பு, அவள் வேறொரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தாள்.
துபற்றி மாரிட்டா, 'நான் நான்காவது கிரேடில் இருக்கும் போது நானும் எனது தோழி தன்யாவும் கிப் பள்ளிக்கு விண்ணப்பித்தோம். எனக்கு இன்றைக்கும் மிஸ் ஓவன்ஸ் பற்றி நினைவிருக்கிறது. அவர்தான் என்னை இன்டர்வியூ செய்தார். அந்த நேரத்தில் அவர் என்னிடம் கூறியதைக் கேட்டபோது, நாம் ஏதோ ஜெயிலுக்குள் போகிறோமோ என்கிற எண்ணம்தான் வந்தது. அவர்கள் என்னிடம், 'இத்தனை கட்டுப்பாடுகளுக்கும் உடன்பட இஷ்டமிருந்தால் நீ கையெழுத்து போடு. இல்லையென்றால் உடனே திரும்பிப் போகலாம்' என்று கூறினார்கள். ஆனால், என் அம்மா என் பக்கத்திலேயே இருந்ததால் வேறு வழியில்லாமல் தான் அப்போது நான் கையெழுத்து போட்டேன். அந்த தருணத்திலிருந்து எனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது'' என்றபடி, மேலும் உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தாள். 'நான் அதிகாலை 5.45-க்கு எழுந்திருப்பதிலிருந்து எனது வேலைகள் தொடங்கும். எழுந்தபின் பல் தேய்த்துவிட்டு குளிப்பேன். நான் மாலை 5 மணிக்குப் பள்ளியைவிட்டுக் கிளம்புவேன்; வேறெந்த வேலையும் இல்லையெனில், வீட்டிற்கு 5.30-க்கெல்லாம் வந்துவிடுவேன். அம்மாவுக்கு ஒரு 'ஹாய்’ சொல்லிவிட்டு வீட்டுப் பாடம் செய்ய ஆரம்பித்து விடுவேன். அதிகமாக வீட்டுப் பாடங்கள் இல்லையெனில் 9 மணிக்கெல்லாம் முடித்து விடுவேன். கொஞ்சம் அதிகமாக இருந்தால் 10 அல்லது 10.30 கூட ஆகும். அம்மா வற்புறுத்தலைத் தொடர்ந்து இரவு 8 மணி போல டின்னருக்காக சிறிய பிரேக் எடுத்துக் கொள்வேன். டின்னருக்குப் பிறகு, எங்கு விட்டிருந்தேனோ அதிலிருந்து வேக வேகமாகத் தொடர ஆரம்பிப்பேன். 11 மணிக்கு நான் படுக்கச் செல்ல வேண்டும். அப்போதுதானே மறுநாள் அதிகாலை எழ முடியும்? அடுத்த நாளைக்குத் தேவையான எல்லாவற்றையும் தயாராக வைத்துவிட்டு படுக்கச் செல்வேன். நான் அம்மாவிடம் அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் நடந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். 'உம்' கொட்டிக் கொண்டே வரும் அம்மா, தூக்கத்தின் விளிம்புக்குப் போய்விட்டார் என்றால், இரவு மணி 11.15 என்று அர்த்தம். அதற்குப் பிறகு நானும் தூங்கிவிடுவேன். பிறகு மறுநாள் காலையில், முன்தினத்தின் அதே செயல்பாடுகள் தொடரும்'' என்றாள் மாரிட்டா.
அவள் விவரித்ததைப் பார்த்தால், அமெரிக்காவில் குழந்தைகள் எந்த மாதிரியான வழக்கமற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். ஆனால், இந்த மாதிரி நாம் இருக்கிறோம் என்பதையே அவர்கள் உணர்வதில்லை. ஒரு வக்கீல் தனக்கு பார்ட்னராக ஒருவரை ஆக்கிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரமும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரமும், இவள் செலவிடும் நேரமும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால், அவளிடம் இல்லாதது - கண்களுக்குக் கீழே கருவளையமும், கையில் சுடச்சுட காபியும்தான். காரணம், பாதிக்கப்படுவதற்கோ, உற்சாக ஊக்கி தேடுவதற்கோ தேவையில்லாத வயசு அது!
மாரிட்டாவின் வாழ்க்கை அவளைப்போல் 12 வயதில் இருந்த மற்ற பள்ளிகளின் குழந்தைகள்போல இல்லை. அந்த வயதில் ஒரு சிறுமியினுடைய வாழ்க்கை இவ்வளவு கடுமையானதாக இருக்க வேண்டும் என நாம் விரும்பவும் இல்லை. குழந்தைகளுக்கு விளையாடவும், கனவு காணவும், தூங்கவும் தேவையான நேரம் வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். ஆனால், மாரிட்டாவிற்கு அடுக்கடுக்காக கல்விப் பொறுப்புகள் இருந்தன.
கொரியன் பைலட்டுகளிடம் என்ன கேட்கப்பட்டதோ, அதேதான் மாரிட்டாவிடமும் கேட்கப்பட்டது. அவர்கள் வெற்றிபெற வேண்டுமெனில் அவர்கள் தங்களுக்கென்று உள்ள கலாசாரம் சம்பந்தப்பட்ட அடையாளத்தை கொஞ்சம்விட வேண்டும். ஏனெனில் கலாசார மரபுரிமை விமானத்தின் காக்பிட்டில் எடுபடவில்லை. அதேபோல மாரிட்டாவின் கலாசார மரபுரிமையும் அவள் எதிர்காலத்தில் வாழ்ந்தாக வேண்டிய போட்டி சமூகத்தின் சூழ்நிலைக்கு சரிப்படாது. அவளுக்குத் தேவையான வற்றை அவள் சார்ந்த சமூகம் அளிக்கவில்லை. அதற்காக அவள் என்ன பண்ண வேண்டும்? அவள் மாலை வேளைகளையும், வார இறுதிநாட்களையும், நண்பர்களையும் ஒதுக்கி வைத்தாக வேண்டும். இதற்குப் பதில், அவள் கிப் பள்ளி தருகிற இடைவிடாத பயிற்சிகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.
''நான் ஐந்தாவது கிரேடு சேர்ந்த புதிதில் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தவுடன் நேராக எனது பழைய பள்ளிக்கூடத்தில் படித்த தோழியின் வீட்டிற்குச் செல்வேன். எனது அம்மா வேலையிலிருந்து வரும் வரை அங்கேயே இருப்பேன். அந்த நேரத்தில் நான் வீட்டுப் பாடங்கள் செய்துவிடுவேன். தோழியின் பள்ளியில் எந்த விதமான வீட்டுப் பாடங்களும் கிடையாது. அவள், 'நீ எங்க பள்ளிக்கூடத்திலேயே படித்து இருக்கலாம்’ என்பாள். நான், 'எல்லோரும் கிப் கடினம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், உனக்கு அதன்மேல் ஒரு பிடிப்பு வந்துவிட்டால் கடினமாகவே தெரியாது' என்றேன். அவளோ, 'நீ ஸ்மார்ட்’ என்றாள்.
அதற்கு நான், 'அதெப்படி..? எங்கள் பள்ளியில் சேருகிற எல்லோரும் ஸ்மார்ட்டாக இருக்க முடியாது' என்றேன். அவள் வீட்டில் இருந்த ஒருநாள், நாங்கள் அதிகாலை ஐந்து மணி வரை விழித்திருந்தோம். அதுவே அவளை டிஸ்கரேஜ் செய்திருக்கும். அவளிடம் நான், 'இந்த மாதிரி அதிகமாக வீட்டுப் பாடங்கள் செய்வது வகுப்பறையில் ஈஸியாக பாடத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது' என்றதற்கு... 'உன்னுடைய எல்லா லெக்சரை யும் என்னால் கேட்க முடியாது' என்றாள் தோழி!'' என்று விளக்கினார் மாரிட்டா.

ஆக, இந்தத் தொடரில் நாம் இதுவரை படித்ததில் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. வெற்றி என்பது எதிர்பார்த்த ஒரு வழியில் தொடர்ந்து செல்லும் என்பதுதான் அது. மிகவும் புத்திசாலியாக இருப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பதில்லை. அப்படியென்றால் கிறிஸ் லாங்கன் நிச்சயமாக ஐன்ஸ்டீனுடன் உயரத்துக்குப் போய்... உலகப் புகழ் அடைந்திருக்க வேண்டும்.
வெற்றி என்பது நாம் எடுக்கும் சமயோசிதமான முடிவுகள் மற்றும் முயற்சிகள் மட்டும் சேர்ந்ததல்ல. அது சில சூழ்நிலைகளாலும், சுற்றுப்புற மனிதர்களாலும், முன்னோரின் வாழ்க்கை முறையாலும் நமக்கு அமைகிற ஒரு வரப்பிரசாதம். அப்படி அமைகிற அந்த வித்தியாசமான சூழல்களையும் வாய்ப்புகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் 'அவுட்லயர்'களிடம் இருந்தது.
குறிப்பிட்ட சில நாடுகளின் தேர்வு முறையின் காரணமாக, ஹாக்கி மற்றும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஜனவரி மாதம் பிறந்தது வாய்ப்பாக அமைந்தது. பீட்டில்ஸ் இசைக் குழுவிற்கு கடுமையாகப் பயிற்சி செய்வதற்கு ஒரு ஹாம்பர்க் வாய்ப்பு கிடைத்தது. பில்கேட்ஸ் பள்ளியில் படிக்கும்போது கம்ப்யூட்டர் டெர்மினல் என்கிற அதிர்ஷ்டம் சரியான சமயத்தில் அவருக்கு அமைந்தது. ஜோ ஃபிளோம் போன்ற சட்ட நிபுணர்களுக்கு அற்புதமான ஒரு காலகட்டம் அவர்கள் வக்கீல் தொழிலுக்குள் நுழையும்போது அமைந்தது. அவர்கள் சரியான சமயத்தில், வாய்ப்பான பெற்றோருக்கு, சரியான சமூகத்தில் பிறந்ததினால், 'டேக் ஓவர்’ சம்பந்தப்பட்ட பிராக்டீஸில் மற்றவர்கள் ஈடுபடுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் ஈடுபட்டனர்.
வெற்றியின் ரகசியம் குறித்து இதுவரை கற்றுக் கொண்ட பாடங்கள் எளிமையானவை தான். ஆனால், இவையெல்லாம் எப்படி சரியாகக் கவனிக்கப் படாமல் போனது என்பதுதான் ஆச்சரியமானது. நாமும் மிகவும் சிறந்த, அறிவுக்கூர்மையான, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட 'அவுட்லயர்'கள் எல்லோரும் இயற்கையிலேயே உருவானவர்கள் என்கிற மாயையில் இருக்கிறோம். ஒரு பில்கேட்ஸுக்கு கிடைத்த வாய்ப்பு போலவே - 1968-ம் வருட காலத்தில் - ஆர்வமுள்ள பல மில்லியன் மாணவர்களுக்கு தேவையான அளவுக்கு 'டைம் ஷேரிங் டெர்மினலை’ பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தால்..? இந்நேரம் எத்தனை மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் உருவாகியிருக்குமோ..!
அதேபோல், ஆண்டின் இறுதி ஆறு மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கென்று கனடாவில் இன்னும் ஒரு சிறப்பான ஹாக்கி லீக் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு இருக்கக்கூடிய ஹாக்கி வீரர்களை போல இரண்டு மடங்கு வீரர்கள் இந்நேரம் உருவாகியிருப்பார் கள். இப்படி ஒவ்வொரு துறையிலும், தொழிலிலும் திடீரென்று உண்டாகும் திறமைகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் இந்த உலகம் இப்பொழுது இருப்பதைவிட மிகவும் அற்புதமாக இருந்திருக்கும்.
மாரிட்டாவிற்கு விசாலமான, விளையாடுவதற்கு அதிக இடமுள்ள புதிய பள்ளிக்கூடம் தேவையில்லை. அவளுக்கு லேப் டாப் தேவையில்லை; பி.எச்.டி படித்த ஆசிரியர் அல்லது பெரிய அபார்ட்மென்ட் என எதுவும் வேண்டாம். அவளுக்கு கிறிஸ் லாங்கன் போன்ற வேகமாகச் சிந்திக்கக்கூடிய மனமோ அல்லது அதிக ஐ.க்யூவோ தேவையில்லை. இவை எல்லாம் இருந்தால் இன்னும் நல்லதுதான்.
மாரிட்டாவிற்குத் தேவைப் பட்டது கிப் பள்ளியில் சேரும் ஒரு வாய்ப்பு. அவளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பாருங்கள்! யாரோ ஒருவர் நெற்பயிர் விளைச்சலுக்கும் கணக்கு அறிவுக்கும் உள்ள தொடர்பை பற்றிய செய்தியை தெற்கு பிரான்க்ஸ் பகுதிக்குக் கொண்டு வந்து கிப் பள்ளி மூலமாக இவளைப் போன்ற மாணவர்களுக்கு அளித்து, அர்த்தமுள்ள, கடுமையான வேலையால் கிடைக்கும் அற்புதத்தை விளக்கியிருக்கிறார்கள்!
(விதை விருட்சமாகும்)
Copyright © 2008 by Malcolm Gladwell
Copyright © 2008 by Malcolm Gladwell
No comments:
Post a Comment