Saturday, October 1, 2011

அவுட்லயர்ஸ்!

அவுட்லயர்ஸ் (நாணயம் விகடன், அக்டோபர் 9, 2011)
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 45

நியூயார்க் நகரத்தில் உள்ள லோ கெரிக் ஜூனியர் ஹை ஸ்கூலின் நான்காவது மாடியில்தான் இந்த 'கிப் அகாடமி' இயங்கியது. கே.ஐ.பி.பி. என்ற ஆங்கில எழுத்துச் சுருக்கத்தின் நீட்டம் - நாலெட்ஜ் இஸ் பவர் புரோகிராம் என்பது! இது ஒப்பீட்டளவில் ஏழ்மையான பகுதி ஒன்றில் அமைந்திருந்த ஏரியா. இந்த ஏரியாவில் சாம்பல் நிறத்திலான 1960-களை நினைவூட்டும் கட்டடங்களைப் பார்க்கலாம். அதற்கு எதிர்வரிசையில் மங்கலாகத் தோற்றமளிக்கக்கூடிய பல உயரமான கட்டடங்கள் இருந்தன.



அதற்கு சில கட்டடங்கள் தள்ளி கிராண்ட் கான்கோர்ஸ் இருந்தது. இது, அந்தப் பகுதியின் முக்கியமான பகுதியாகும். இரவில் இந்தத் தெருக்களில் நீங்கள் நினைப்பதுபோல நிம்மதியாக நடந்து செல்ல முடியாது.

'கிப்' ஒரு இடைநிலைப் பள்ளி. வகுப்பறைகள் மிகவும் பெரியவை. ஐந்தாவது கிரேடில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் முப்பத்தைந்து மாணவர்கள் என இரண்டு வகுப்பறைகள் இருந்தன. இந்தப் பள்ளியில் சேருவதற்கு நுழைவுத் தேர்வோ அல்லது மற்ற எதுவுமோ தேவையில்லை. மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக் கப்பட்டார்கள். சவுத் புரோன்க்ஸில் வசித்து வரும் நான்காவது கிரேட் மாணவர்கள் யார் வேண்டுமென்றாலும் விண்ணப்பிக்கலாம். இதில் பாதி மாணவர்கள் ஆப்பிரிக்காவி லிருந்து வந்து குடியேறிய அமெரிக்கர்கள். மீதியில் பெரும்பாலும் ஹிஸ்பானிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 90 சதவிகிதம் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அரசாங்கத்தின் பங்களிப்பில் வழங்கப்படும் சாப்பாட்டைச் சாப்பிட தகுதி பெற்றவர்கள்.

'கிப் அகாடமி’ நடத்தும் பள்ளிக்கூடங்களை பார்க்கும் கல்வியாளர்கள் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையற்ற தன்மை வந்துவிடும். இது அவர்கள் அங்கு நுழையும் முதல் பார்வையில் மட்டும்தான். அதற்குப் பிறகு அது ஒரு வித்தியாசமான இடம் என்று தெரிந்துவிடும். அங்கு மாணவர்கள் வராந்தாவில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில்தான் வகுப்புக்குச் செல்வார்கள். வகுப்பறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு 'எஸ்.எஸ்.எல்.ஏ.எல்.டி.' என்ற பொது விதி அளிக்கப்பட்டது. இதைத் தமிழில் சொல்வதானால்... 'புன்னகையோடு இரு... நிமிர்ந்து அமர்... ஊன்றி கவனி... கேள்விகள் கேள்... உன்னை நோக்கி யாரும் பேசும்போது ஆமோதிப்பதை உணர்த்து... கண்களால் எதிராளியின் பேச்சுக்கு கவனம் காட்டு!’

ஆரம்பித்த பத்தே வருடங் களில், இந்த 'கிப் அகாடமி' பள்ளி என்பது நியூயார்க் நகர பெற்றோர்கள் ஆர்வத்தோடு நாடக்கூடிய பப்ளிக் ஸ்கூல்களில் ஒன்றாக மாறியது. குறிப்பாக, 'கிப்' கணிதத்திற்கு மிகவும் பெயர் பெற்றுவிட்டது. சவுத் புரான்க்ஸில் உள்ள எல்லா இடைநிலைப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களில் 16 சதவிகிதத்தினர் மட்டும் கணிதத்தில் அவர்கள் படிக்கக் கூடிய வகுப்பிற்கேற்றபடி அல்லது அதைவிட சற்று தூக்கலாகவோ இருந்தனர்.

ஆனால், கிப்பில் ஐந்தாம் கிரேடு படித்த மாணவர்களில் பெரும் பாலானோர் கணிதம்தான் தங்களது விருப்பமான பாடம் என்றார்கள் உற்சாகமாக. மிகவும் ஒதுக்கப்பட்ட, குறைந்த வருமானம் கொண்ட, குருவிக்கூடு போன்ற வீட்டில் வசிக்கக்கூடிய, மிகவும் மோசமான பகுதியைச் சார்ந்த, கல்லூரி வாசலையே மிதிக்காத பெற்றோர்களைக் கொண்ட அந்தச் சிறுவர்கள் கணிதத்தில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். இது அமெரிக்காவின் செல்வம் கொழிக்கும் புறநகர் பகுதியில் உள்ள எட்டாவது கிரேடு படிக்கும் மாணவர்களுக்கு இணையான திறமையாக இருந்தது.


இன்றைக்கு அமெரிக்காவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட 'கிப்’ பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியின் கிளைகள் இன்னும் பல ஆரம்பிக்கப்பட உள்ளன. அவ்வளவு ஏன்... அமெரிக்காவில் இந்த 'கிப் புரோகிராம்’ கல்வி புதிய ஒரு தத்துவமாகவே மாறி இருக்கிறது. 'கலாசார மரபுரிமை' என்ற ஐடியாதான் இந்த வெற்றிக்கு முக்கிய அடிப்படை.


இது எப்படி சாத்தியமானது என்பதை புரிந்துகொள்வதற்கு, அமெரிக்க பள்ளிக்கூடங்கள் செயல்படும் முறை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில சீர்திருத்தவாதிகள் அமெரிக்காவில் பொதுக் கல்வியைச் சீர்திருத்துவதில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பொதுப் பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் ஒரு ஒழுங்கற்றத் தன்மை நிலவியது. அதாவது, ஒரு அறை மட்டும் கொண்ட பள்ளிகளும், அதிக மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகளும் நாடு முழுவதும் இயங்கி வந்தன. கிராமப்புறங்களில் இயங்கிவந்த பள்ளிகள் கோடை காலத்தில் மட்டுமே இயங்கின. பயிரிடும் காலத்திலும், அறுவடை காலத்திலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உதவியாக குழந்தைகள் இருப்பார்கள் என்பதால் அப்போது பள்ளிகள் நடக்கவில்லை.


நகர் பகுதிகளில் இயங்கி வந்த பள்ளிகளும் அங்கு படித்து வந்த குழந்தைகளின் பெற்றோர்களின் வேலை நேரத்தைப் பொறுத்து அமைந்திருந்தது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. நாடு முழுவதும் எல்லோருக்கும் பூர்ணமான கல்வி கிடைக்க வேண்டும், குழந்தைகள் அனைவருக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், அடிப்படை கணிதம் தெரிந்திருக்க வேண்டும், அவர்கள் சமூகத்திற்கு உதவும்படி ஒரு நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்று சீர்திருத்த வாதிகள் விரும்பினர்.


இதுகூட பரவாயில்லை... 1871-ல் அமெரிக்காவில் கல்வித்துறை கமிஷனராக இருந்த எட்வர்ட் ஜார்விஸ் என்பவர் 'கல்வியும், மனநிலை குறைவுக்குமான தொடர்பு’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அவர் மனநலம் குன்றிய 1,741 பேரை தனது ஆய்விற்கு எடுத்துக் கொண்டதாகச் சொன்னார்: 'அதிகமாகப் படித்ததினால்’ 205 பேர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்றார். 'மனநிலை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு முக்கிய அடித்தளம் கல்விதான்’ என்றார் அவர்!

கல்வி கற்கும்போது மனதை அதிகம் தூண்டுவதினால் குழந்தைகளின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது என்றும்... அவர்களை அதிக பளுவிற்கு உட்படுத்துவதாலும் இயற்கையிலேயே அவர்களுக்கு அமைந்த திறமைகள் பாதிக்கப் படுகின்றன என்றும் கல்வி பற்றிய பல கட்டுரைகளிலே குறிப்பிடப்பட்டன!


கோல்ட் இதுபற்றி எழுதும் போது, ''அன்றைய கல்வி சீர்திருத்தவாதிகள், குழந்தைகள் பாடம் படிக்கக்கூடிய நேரத்தைக் குறைப்பதுதான் நல்லது என்று நினைத்தார்கள். சனிக்கிழமை நடத்தப்படக் கூடிய வகுப்புகளை நிறுத்துதல், பள்ளி நாட்களை குறைத்தல், விடுமுறை தினங்களை அதிகரித்தல் போன்ற மாற்றங்கள் 19-ம் நூற்றாண்டில் நடந்தன.



மாணவர்கள் மனம் ஒன்றிப் படிக்க வேண்டுமெனில், அவர்கள் அதிகநேரம் ஒரே இடத்தில் அடைபட்டு, சக்தி அனைத் தையும் இழந்த நிலையிலோ அல்லது மனது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலோ இருக்கக்கூடாது என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. உரிய அளவிற்கு ஓய்வு கொடுத்தால் அவர்களின் உள்ளார்ந்த திறனும், அலசி ஆராயக்கூடிய திறமையும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும் எனக் கருதப்பட்டது'' என்கிறார்.



அமெரிக்காவில் கல்வி பற்றி நடைபெறும் எந்தவொரு விவாதத்திலும், இப்போதும்கூட கோடைவிடுமுறை என்பது மிகவும் அரிதாக இடம் பெறக்கூடிய தலைப்பாகும். பள்ளி வாழ்க்கையில் கால் பந்தாட்டம், ஆண்டு இறுதியில் நடைபெறும் நடன நிகழ்ச்சி போன்றவைகளை எப்படி தவிர்க்க முடியாதோ... அதுபோல நீண்ட கோடை விடுமுறையும் தவிர்க்க முடியாத ஒன்று.



ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் அலெக்ஸாண்டர் செய்த ஓர் ஆய்வின் முடிவில் சில விஷயங்கள் தெரிய வந்தன. இவர் பால்டிமோர் பொதுப் பள்ளிக்கூட பாடத் திட்டத்தின் கீழ், முதல் கிரேடில் படித்து வரும் 650 மாணவர்களின் கணிதம் மற்றும் படிக்கும் ஆற்றலை பரிசோதிக்கும் 'கலிஃபோர்னியா அச்சீவ்மென்ட் டெஸ்ட்’டை தொடர்ந்து கண்காணித்து வந்தார். படிக்கும் திறனுக்காக ஆரம்பப் பள்ளியில் முதல் ஐந்து கிரேடுகளில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களை கவனமாக ஆராய்ந்தார். அதிலும், சமூக - பொருளாதார அடிப்படையில் கீழ்மட்ட, நடுத்தர வர்க்க மற்றும் மேல்தட்டு ஆகிய மூன்று வகை மாணவர்களை வகை பிரித்துக் கொண்டு ஆராய்ந்தார் கார்ல் அலெக்ஸாண்டர்.



அதன்படி பார்த்தால், முதல் கிரேடில் அறிவாற்றல் மற்றும் திறமை சார்ந்த மதிப்பெண்களில் இந்த மூன்று பிரிவினரிடையே குறிப்பிட்டுச் சொல்லும்படி வித்தியாசம் எதுவுமில்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த முதல் கிரேடு மாணவர்கள் பால்டிமோரில் உள்ள ஏழ்மையான (ஏழ்மை யென்றால் அப்படியரு ஏழ்மை!) குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களைக் காட்டிலும் 32 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தனர். ஐந்தாவது கிரேடு மதிப்பெண்களுடன் ஒப்பிட்டால், ஆரம்பத்தில் இருந்த இடைவெளியைவிட நான்கு ஆண்டுகளில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த மாணவர் களுக்கும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கும் இடையேயான இடைவெளி கிட்டத்தட்ட இரண்டு மடங் குக்கும் அதிகமாகியிருப்பது தெரியவரும்.



பால்டிமோரில் உள்ள பள்ளிக் கூடங்களில் கலிஃபோர்னியா அச்சீவ்மெண்ட் டெஸ்ட் என்பது பள்ளிக்கூட படிப்பின் இறுதி மாதமான ஜூனில் மட்டும் நடத்தப்படுவதில்லை. மாறாக, கோடை விடுமுறைக்குப் பிறகு செப்டம்பரிலும் நடத்தப்பட்டு வந்தது. நீண்ட விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் மறுபடி ஆரம்பிக்கும் மாதமான செப்டம்பரில் நடத்தப்பட்ட தேர்வில் வாங்கிய மதிப்பெண்ணுடன், அதற்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வாங்கிய மதிப்பெண்களை ஒப்புமைப்படுத்தி பார்க்கும் போது மாணவர்கள் பள்ளிக்கூடம் நடக்கக்கூடிய காலகட்டத்தில் (அதாவது செப்டம்பர் முதல் ஜூன் வரை) எவ்வளவு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்தது. அதுபோல் ஜூன் மாதத்தில் எடுத்த மதிப்பெண்ணிற்கும், செப்டம்பரில் எடுத்த மதிப்பெண்ணிற்கும் உள்ள வித்தியாசத்திலிருந்து அவர்கள் கோடை காலத்தில் எவ்வளவு கற்றுக் கொண்டிருப்பார்கள் என அறிந்து கொள்ள முடிந்தது.



இதையே வேறு வகையில் சொல்வதென்றால் பள்ளிக் கூடம் நடைபெறும் நாட்களில் நடந்த நிகழ்வுகளும், விடுமுறை நாட்களில் நடந்த நிகழ்வுகளும் 'அச்சீவ்மென்ட் இடை வெளி’யில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவருக்கு உதவியது.



இதையே வெவ்வேறு கோணங்களில் அலசிப் பார்த்தால் விளைவுகள் எப்படி மாறுகிறது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்...!

No comments: