அவுட்லயர்ஸ்
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - 15
முதல் உலகப்போருக்குப் பின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மனோதத்துவத் துறை பேராசிரியர் லீவிஸ் டெர்மேன் ஒரு சிறுவனை தற்செயலாகச் சந்தித்தார். அவன் பெயர் ஹென்றி கோவல்.
அவன் ஏழ்மைக்கே உரிய பல சோதனைகள், குழப்பங்களுக் கிடையே வளர்ந்தவன். மற்ற குழந்தைகளுடன் சரியாகப் பழக முடியாமல் போனவன். அவன் தனது ஏழாவது வயதிலிருந்து பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது.
லீவிஸ் டெர்மேன் பேராசிரிய ராக இருந்த ஸ்டான்ஃபோர்டு காம்பஸுக்கு அருகில் 'ஒற்றை அறை பள்ளிக்கூடம்’ ஒன்று இயங்கி வந்தது. அதில் ஹென்றி கோவல் 'கேர்டேக்கர்’ வேலை பார்த்து வந்தான். சில வேளைகளில் வேலைக்கு 'டிமிக்கி’ கொடுத்துவிட்டு, அந்தப் பள்ளிக் குள் இருந்த பியானோவில் வாசிக்கப் பழகினான் அவன். அப்படி அவன் வாசித்த இசை மிகவும் ரம்மியமாக இருந்தது.
டெர்மேனின் தனித் திறமையே மனிதர்களின் புத்திசாலித்தனத்தை அளவிடுவதுதான். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களின் 'ஐ.க்யூ'-வைப் பரிசோதிக்கப் பயன்பட்டுவந்த 'ஸ்டான் ஃபோர்டு பைனெட்’ என்ற ஃபார்முலா இவருடைய உருவாக்கம்தான். அவர் அந்தச் சிறுவன் ஹென்றி கோவலின் ஐ.க்யூ-வையும் சோதித்துப் பார்க்கத் தீர்மானித்தார்.
அந்தச் சிறுவன் புத்திசாலி யாகத்தான் இருக்கவேண்டும் என தன் அனுபவத்தால் அவர் உறுதியாக நம்பினார். சோதித்த போது அது முற்றிலும் நிஜம். அவன் ஐ.க்யூ. 140-க்கும் அதிகமாக இருந்தது. இது கிட்டத்தட்ட மேதாவிகள் என அறியப்பட்ட வர்களுக்கு உரிய ஐ.க்யூ. அளவு! டெர்மேன் மிகவும் பரவசமானார். இன்னும் பட்டை தீட்டப்படாத வைரங்கள் எத்தனை உள்ளதோ? அதையெல்லாம் எப்படிக் கண்டறிவது? வசதி, வாய்ப்புகள் இல்லாமலே மேதாவிகளாக சிலர் உருவெடுப்பதற்கான காரணத்தை எப்படி அறிவது? இதில் அவர் மிக ஆர்வம் கொண்டார்.
அவர் இந்தச் சிறுவனை மாதிரியே குப்பையில் கிடக்கும் மாணிக்கங்களைத் தேட ஆரம்பித்தார். அப்படி ஒரு சிறுமி கிடைத்தாள். அவள் 19 மாதக் குழந்தையாக இருக்கும்போதே ஆங்கில எழுத்துக்களை அட்சர சுத்தமாகத் தெரிந்து வைத்தி ருந்தாள். இன்னொரு சிறுமி தனது நான்காவது வயதில் ஷேக்ஸ்பியரையும், டிக்கன்ஸையும் ஜம்மென்று படித்திருந்தாள். இதைவிட பெரிய கூத்து... மிக நீண்ட வாக்கியங்களையும், மிக நுணுக்கமான பல வார்த்தைகளையும் கொண்ட சட்டக் கருத்துக்களை துளிகூட தவறில்லாமல் அப்படியே ஒப்புவித்த ஒரு மாணவனை சட்டக் கல்லூரியை விட்டே வெளியேற்றியிருப்பதையும் லீவிஸ் டெர்மேன் சந்திக்க நேர்ந்தது. 'இப்படி யெல்லாம் ஒரு மனிதனால் அசாத்தியமான சட்டவடிவுகளை பாரா பாராவாக ஒப்பிப்பது நடக்காத காரியம். இந்தப் பையனிடம் ஏதோ ஒரு பெரிய மோசடி டெக்னிக் இருக்கிறது' என்பதே அவனை வெளியேற்றிய பேராசிரியர்கள் கற்பித்த காரணம்!
நிஜத்தில் அந்த இளைஞன் நம்ப முடியாத அளவுக்கான மேதாவித்தனம் கொண்டிருந்தான் என்பதை லீவிஸ் டெர்மேனால் உறுதி செய்துகொள்ள முடிந்தது.
1921-ல், டெர்மேன் இந்த மாதிரியான அருள் பெற்ற மனிதர்களைப் பற்றி ஆய்வு செய்வதை தனது வாழ்க்கை நெடுகிற்குமான ஒரு வேலையாக எடுத்துக் கொண்டார். இந்த ஆய்விற்கு அவருக்கு காமன்வெல்த் ஃபவுண்டேஷனில் இருந்து போது மான நிதியுதவி கிடைத்தது.
அவர் பல கள ஆய்வாளர்களை நியமனம் செய்து, அவர்களையெல்லாம் கலிஃபோர்னியாவில் உள்ள பல ஆரம்பப் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பினார். அந்தப் பள்ளி ஆசிரியர்களிடம், 'உங்கள் வகுப்பிலேயே மிகவும் புத்திசாலியான மாணவர்களை எங்கள் ஆய்வுக்கு அடையாளம் காட்டுங்கள்' என்று கேட்கப்பட்டது. அப்படி வகை பிரித்து அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதற்காக லீவிஸ் டெர்மேனின் பிரதிநிதிகள் ஒரு தேர்வு நடத்தினார்கள்.
அதில் முதல் 10 சதவிகிதத்துக்குள் வந்த மாணவர்களுக்கு இரண்டாவது கட்ட அறிவுத் திறன் போட்டி நடத்தப்பட்டது. அதில் 130-க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மூன்றாவது சுற்றுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த மூன்றிலும் சிறந்து, மிகவும் புத்திசாலியாக தேறி வந்த மாணவர்களை டெர்மேன் தன் பார்வைக்குள் கொண்டு வந்தார். இந்த ஆய்வுகள் நடந்து கொண்டிருந்த அதேநேரத்தில், டெர்மேன் 2,50,000 ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ரெகார்டுகளை அலசி ஆராய்ந்து சராசரியாக 1,470 குழந்தைகளைக் கண்டறிந்து முடித்திருந்தார். இவர்களின் ஐ.க்யூ, சராசரியாக 140-லிருந்து 200 வரை இருந்தது. இந்த இளம் மேதாவிகள் கொண்ட குழுவுக்கு 'டெர்மைட்ஸ்’ (Termite) என்று பெயர் சூட்டப்பட்டது. இவர்கள்தான் பின்னாளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனவியல் ஆய்வில் முக்கிய கதாபாத்திரங்களாக இருந்தார்கள்.
இதற்குப் பிறகு, டெர்மேன் தனது மீதியுள்ள வாழ்நாள் முழுவதும் இவர்களை ஒரு தாய்க்கோழி தனது குஞ்சுகளைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டார். அவர்கள் எங்கே போய் செட்டில் ஆகி, என்னவாக வாழ்ந்தபோதும்... அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவர்கள் அவ்வப்போது தேர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் முடிவுகள் சீரான இடைவெளி களில் அலசி ஆராயப்பட்டன.
அவர்களுடைய கல்வி சம்பந்தப்பட்ட வளர்ச்சிகள் குறித்துக் கொள்ளப்பட்டன. அவர்களுக்கு எப்பொழுது திருமணம் நடந்தது என்பது குறித்துக் கொள்ளப்பட்டது. அவர்களுக்கு எப்போதெல்லாம், என்னவிதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டன என்பதும் பட்டியிலிடப்பட்டது. மனவியல் ஆரோக்கியமும், அவர்களுடைய வேலையில் அவர்கள் அடைந்த முன்னேற்றங் களும், வேலை மாற்றங்களும் பக்காவாக ரெகார்டு செய்யப் பட்டது. இவர்களில் சிலர் கல்லூரி யில் சேர்வதற்கும், வேலையில் சேர்வதற்கும் டெர்மேன் தன் கைப்பட பரிந்துரை கடிதங்கள் கொடுத்தார். தவிர, அவர்களுக்குத் தொடர்ந்து அறிவுரையும், ஆலோசனையும் கொடுத்தபடி இருந்தார். இவையனைத்தையும் அவர் சிவப்பு கலர் கொண்ட 'ஜெனிடிக் ஸ்டடிஸ் ஆஃப் ஜீனியஸ்’ எனப் பெயரிட்டப்பட்ட நோட்டில் குறித்துக் கொண்டே இருந்தார்.
''தனியரு நபரைப் பொறுத்த வரை வேறெதையும் விட ஐ.க்யூ.தான் முக்கியம். ஒருவேளை ஒருவருடைய நல்லொழுக்கம் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் என்று ஒரு முறை டெர்மேன் குறிப்பிட்டார். யாருக்கு ஐ.க்யூ. அதிகமிருக்கிறதோ அவர்கள் எந்தவொரு துறைக்குப் போனாலும் அங்கே 'தலைவர்கள்' ஆவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். பொதுவாக விஞ்ஞானம், கலை, அரசாங்கம், கல்வி மற்றும் சமூகநலம் ஆகிய துறை களை முன்னெடுத்துச் செல்பவர் களாகவே இருப்பார்கள்.
டெர்மேன் கண்காணித்து வந்த கதாபாத்திரங்கள் வளர்ந்து வருகையில், அவர்களுடைய அசாதாரண சாதனைகளையும் பட்டியலிட்டுக் கொள்வார். 'கலிஃபோர்னியா மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொள்ளும் போட்டிகள் அல்லது வேறு ஏதாவது செயல்பாடுகள் பற்றி பத்திரிகையில் படிக்கும்போது, அதில் இந்த அருள் பெற்ற குழுவைச் சேர்ந்தவர்களும் கட்டாயம் இடம் பெற்றிருந்தார்கள்'' என்று பெருமையோடு கூறுகிறார் டெர்மேன். அந்தக் குழுவில் கலைத்துறையில் ஆர்வமா யிருந்தவர்கள் எழுதியவற்றை டெர்மேன் பிரபலமான விமர்சகர்களிடம் கொடுத்து, அந்த காலத்தில் புகழ் பெற்றிருந்த சில எழுத்தாளர்களின் ஆரம்ப கால எழுத்துக்களோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அதிலிருந்த புத்திசாலித்தனத்துக்கு இணையாகவே இந்த அருள் பெற்றவர்களின் எழுத்துக்களும் இருந்தன!
இன்றைக்கும், நாம் வெற்றிக்கான தகுதிகள் பற்றி அலசப் புகுந்தால், டெர்மேன் சொல்லி வைத்திருக்கும் பல யோசனைகளை மையமாகக் கொண்டே அவை இருக்கும். அருள் பெற்ற மாணவர்களுக்கென்று பள்ளிக்கூடங்களிலும் சில புரோகிராம்கள் உள்ளன. மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பு அறிவுக்கூர்மையைச் சோதிப்பதற்கான தேர்வுகள் நடத்துவதுண்டு.
உதாரணம், அமெரிக்கன் ஸ்காலஸ்டிக் ஆப்டியூட் டெஸ்ட். அதுபோல தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் அல்லது மைக்ரோசாஃப்ட் போன்றவைகளும் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உணர்ந்தறிதல் (Cognitive) திறனை அறிந்து கொள்வதற்காக இந்த அடிப்படை யைத்தான் பின்பற்றுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் அறிந்து கொள்வது, அதிக ஐ.க்யூ, உள்ளவர்களிடம், தோண்டி எடுக்கப்படாத பல திறமைகள் இருக்கும் என்பதுதான்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர்களிடம் அவர்களின் 'ஸ்மார்ட்’னெஸைத் தெரிந்து கொள்வதற்காக பல கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. அப்படிக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி: 'ஏன் சாக்கடைக் குழியை அடைக்கும் மூடிகள் வட்டவடிவத்தில் உள்ளன?' என்பது. மைக்ரோ சாஃப்டில் சேருகிறீர்களோ இல்லையோ... பதிலை சற்று யோசித்துப் பாருங்கள்.
இதற்கான விடை: 'சாக்க டையை அடைக்கும் மூடிகள் வட்டவடிவமாக இருப்பதற்குக் காரணம், அதை எந்த பக்கம் திருப்பி னாலும் குழிக்குள் விழாது. இதுவே வேறு வடிவத்தில் இருந்தால், பக்கவாட்டில் திருப்பினால் உள்ளே விழுந்துவிடும்' என்பது!
எதற்காக இதையெல்லாம் இங்கே விவரித்தேன் என்றால்... கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பேராசிரியர் டெர்மேன், அந்தச் சிறுவன் ஹென்றி கோவெலைச் சந்தித்தபோது அவருக்கு எப்படியிருந்ததோ... அது போலதான் நமக்கும் கிறிஸ் லாங்கென் பற்றிக் கேள்விப்படும்போது இருக்கிறது. அதாவது அவர்களைப் பற்றி நமக்குள் பாரட்டுணர்வுடன் கூடிய ஒரு மதிப்பு உணர்வு ஏற்படுகிறது. மேதாவிகள்தான் 'அவுட்லயர்’களின் உச்சம் என்றும் தங்கள் துறையின் உச்சத்துக்கு அவர்கள் வந்து சேருவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நினைக்கத் தோன்றுகிறது, அல்லவா!
ஆனால், இது மட்டுமே முழுமையான உண்மையா?
இதுவரை நாம் 'அவுட்லயர்’ களில் பார்த்தது, திறமை எவ்வளவுதான் இருந்தாலும்... சரியான வாய்ப்பும், சூழ்நிலையால் அமையும் சில வரங்களும் கிடைத்தால்தான் அந்த திறமையாளர்கள் 'அவுட்லயர்'களாக வர முடியும் என்பதைத்தானே! அந்த வகையில் பார்க்கும்போது லீவிஸ் டெர்மேன்கூட 'ஐ.க்யூ'-வையும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை யும் இணைத்துப் பார்க்கும் விஷயத்தில் தவறு செய்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. அவர் அவருடைய அருள் பெற்ற 'டெர்மைட்ஸ்’ குழுவினரைப் பற்றிய அளவீடுகளை மட்டுமே வைத்துக் கொண்டு, கிறிஸ் லாங்கென் பற்றி அளவிட்டுப் பார்க்க முடியுமா? கடந்த அத்தியாயத்தில் தொலைக் காட்சிப் போட்டியில் இடம் பெற்றாரே... அவரைத்தான் சொல்கிறேன். அந்த கிறிஸ்லாங்கென் தனது பதினாறா வது வயதில் 'பிரின்ஸ்பியா மேதமேட்டிகா’ (principia mathematica) பற்றி வேலை செய்து கொண்டிருந்தார் என்பதை டெர்மேன் அறிந்திருந்தால்... கிறிஸ் லாங்கென் விஷயத்தில் ஒரு தவறான முடிவுக்கு வந்திருப்பார்.டெர்மேனைப் பொறுத்தவரை மேதாவிகள் யார் என்று அவருக்கு அடையாளம் காணத் தெரிந்தது. ஆனால், உண்மையான 'அவுட்லயர்’ யார் என்பதை எடை போடத் தெரியவில்லை என்பதே என் கருத்து. அதே தவறைதான் நம்மில் பலரும்கூட மனிதர்களை எடை போடும் விஷயத்தில் இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்கிறேன். எப்படியா...? தொடர்ந்து பார்ப்போம்...!
2 comments:
Dear Mr. Siddharthan Sundaram,
I want to buy this book where can I find it in chennai.
With Regards
PALANIVELRAJAN
9940203825
Dear Mr. Siddharthan Sundaram,
I want to buy this book where can I find it in chennai.
With Regards
PALANIVELRAJAN
9940203825
Post a Comment