Saturday, November 5, 2011

Outliers_50_Nanyam Vikatan

அவுட்லயர்ஸ் (தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்)
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 50

என் பாட்டிக்கு தனது மகள்களை ஜமைக்காவை விட்டு வெளியே அனுப்பி பிரமாதமாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற உந்துதலும், தீர்க்க தரிசனமும் வேறெங்கிருந்தும் வரவில்லை... அவர் இந்த அனுகூலமான மரபுரிமை என்கிற பாரம்பரியத்தில் வந்தவர். அவருடைய மூத்த சகோதரர் ருஃபூஸ் ஒரு ஆசிரியர். இன்னொரு சகோதரர் கார்லோஸ் கியூபாவிற்குச் சென்று, பிறகு அங்கிருந்து ஜமைக்காவுக்கே வந்து ஒரு கார்மென்ட் தொழிற்சாலையை நிறுவினார். என் அப்பாவின் தந்தையான சார்லஸ் ஃபோர்ட் ஒரு மொத்த வியாபாரி. அவருடைய அம்மாவும்கூட நன்கு படித்தவர். பணக்கார 'கலர்டு’ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

என்னுடைய பாட்டி மிகவும் தனிச்சிறப்பு மிக்க சிந்தனைகள் கொண்டவர் என்று சொல்லியிருந்தேன். இதில் முக்கியமாக நினைவு கூறத்தக்கது என்னவெனில், ஃபோர்ட் குடும்பத்தினர் அதுவரை அடைந்து வந்த நிலையான வளர்ச்சி. இதன் ஆரம்பம் என்னவோ ஒழுக்க வரையறைகளை மீறக்கூடிய மிகவும் சிக்கலான விஷயத்திலிருந்துதான் ஆரம்பித்தது. அதாவது, என்னுடைய அம்மாவின் கொள்ளு தாத்தாவான வில்லியம் ஃபோர்ட் தன் துணையை - அதாவது என் கொள்ளுப் பாட்டியை அடிமைகள் சந்தையில் அலிகேட்டர் பாண்ட்டில் வாங்கினார்.
இந்த மாதிரி விருப்பப்பட்டு விலைக்கு வராத அடிமைகளின் வாழ்க்கை சந்தோஷம் அற்றதாக இருந்தது. ஜமைக்காவில் இருந்த தோட்ட முதலாளிகள் தங்களுடைய 'மனிதச் சொத்தான’ அடிமைகளிடம் எவ்வளவு தூரம் வேலை வாங்க முடியுமோ வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு வயதான பிறகு அல்லது அவர்கள் இறந்த பிறகு இன்னொரு சுற்று அடிமைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த அடிமைகள் மூலம் பெற்ற குழந்தைகளுடன் கொஞ்சி கும்மாளம் போடும் அதே நேரம், அந்த அடிமையை தனது சொத்தாகப் பாவிப்பது பற்றி அவர்கள் துளியளவும் கவலைப்படவில்லை.

திஸ்ஸிவுட் என்கிற (தனது பாலியல் விவகாரங்களை டயரி யில் குறித்து வைத்திருந்தவர்) தோட்ட முதலாளி தனது வாழ்நாள் முழுவதும் ஃபிபா என்கிற அடிமையுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் அவளை மிகவும் நல்ல நிலையில் வைத்திருந்தார். அவள் மூலம் அவருக்கு ஒரு மகன் உண்டு. ஆனால், அவர் தோட்டத்தில் வேலை பார்க்கும் மற்ற அடிமைகளைப் பொறுத்தவரை அவர் ஒரு 'மான்ஸ்டர்’... அதாவது, மிருகம் போன்றவர். அவரை விட்டுவிட்டு ஓட நினைப்பவர்களுக்கு அவர் கொடுக்கும் தண்டனைக்குப் பெயர் 'டெர்பி டோஸ்’. ஓட முயற்சிப்பவர்களை நன்கு அடித்து, அந்தப் புண்களில் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, மிளகுத்தூள் போன்றவற்றை நன்கு தேய்த்தெடுப்பார்கள். வேறொரு அடிமையின் கழிவை, ஓடிப் போக முயற்சித்த அடிமையின் வாயில் ஊற்றச் சொல்லி ரசிப்பார்கள். கழிவு ஊற்றப்பட்ட வாயை நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு கட்டுப் போட்டு மூடிவிடுவார்கள்.

இதனால், கோதுமை நிறத்தினர் தங்களை அதிகார பலம் மிக்கவர்களாகவும், இதுபோன்ற கொடுமைகள் இல்லாமல் வாழக்கூடிய சந்தோஷத்தை அனுபவிப்பவர் களாகவும் இருந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. இது அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. அவர்கள் ஒவ்வொருவருடைய தோலின் நிறத்தை வைத்துக் கொண்டு கொடூரமாக வெள்ளையர்களைப் போல விளையாடினார்கள். 'ஒரே குடும்பத்தில் பல நிறத்தை உடையவர்கள் இருந்ததும் உண்டு. இது அங்கே சாதாரணமாக பெரும்பாலான குடும்பங்களில் காணப்பட்டது. அவர்களுடைய நிலை பற்றி சமூகவியலாளர் ஃபெர்னாண்டோ ஹென்றிக்ஸ் என்பவர்,
''மிகவும் 'லைட்’ கலர் கொண்டவர்களுக்குத் தனிச் சலுகைகள் கிடைத்தன. அவர்களின் இளமைக் காலம் அல்லது திருமணம் ஆகும் வரை 'லைட் கலர்’ கொண்டவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வந்தால் 'டார்க்’ கலர் கொண்டவர்களை அந்த சந்தர்ப்பங்களில் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. 'லைட் கலர்’ கொண்ட குழந்தைதான் அந்த குடும்பத்தின் கலர் என்று பிரகடனப்படுத்தபட்டார்கள். இதன் மூலம் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குக் குறுக்காக எதையும் வர அனுமதிப்பதில்லை.

'லைட் கலர்’ கொண்ட குடும்பத்தினர் தங்களுடைய 'டார்க் கலர்’ கொண்ட உறவினர்களின் தொடர்பை துண்டிக்கவும்கூட தயங்குவதில்லை... அதுபோல 'டார்க் கலர்’ கொண்ட நீக்ரோ குடும்பத்தினர், தங்களிலேயே கொஞ்சம் வெளுப்பாக இருப்பவர்கள் போய், வெள்ளையர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வதை ஊக்குவித்தனர். இந்த மாதிரி நிறத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்பத்திற்குள் ஏற்பட்ட உறவுமுறைகளே பின்பு பொது வாழ்விலும் வெளிப்படத் தொடங்கியது'' என்கிறார்.

எனது குடும்பம் இதற்கெல் லாம் பழக்கப்பட்டதில்லை. டெய்ஸி தன்னைவிட தனது கணவர் 'லைட் கலர்’ என்பதில் பெருமிதம் கொண்டவர். 'டெய்ஸி நல்லவள்தான். ஆனால், கொஞ்சம் கறுப்பு'’ என அவருடைய மாமியார் அவரைப் பற்றி கிண்டலாகச் சொல்வாராம்.

எனது அம்மா வழி உறவில் ஒருவர் உண்டு. அவரை நான் ஜோன் அத்தை என அழைப்பேன். அவர் 'ஒயிட் லைட்’ நிற வகையைச் சேர்ந்தவர். ஆனால், அவருடைய கணவர் ஜமைக்காவில் 'இன் ஜூன்’ என அழைக்கப்படும் கறுப்பு நிறமும், நீளமாகவும் நேராகவும் வளர்ந்து நிற்கும் முடியையும் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவர்களுடைய மகள்களும் அப்பாவைப் போலவே கறுப்பு. அவர் இறந்த பிறகு ஒருநாள் அத்தை ஜோன் தனது மகளைப் பார்ப்பதற்காக ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த 'லைட் கலர்’ தோலைக் கொண்ட ஒருவரின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அம்மாவிடம் கூறியிருக்கிறார்.

அது மிகவும் கேவலமான ஒன்று... என் அத்தை ரயிலிலிருந்து இறங்கும்போது அந்த 'லைட் கலர்’ ஆசாமியும் பின்னாடியே இறங்கியிருக்கிறார். உடனே அத்தை தனக்காக அங்கே காத்திருந்த தனது மகளைப் பார்த்தும் பார்க்காதது போல்... யாரோ போல மெள்ள நகர்ந்து சென்றுவிட்டார். காரணம், தனது மகள் இவ்வளவு கறுப்பாக இருக்கிறாள் என்று தன்னுடன் பயணம் செய்த அந்த யாரோ ஒருவருக்கு தெரியக் கூடாதாம்!

1960-ம் ஆண்டு என்னுடைய அம்மா தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். அதன் பெயர், 'பிரௌன் ஃபேஸ், பிக் மாஸ்டர்'! இதில் பிரௌன் ஃபேஸ் என்பது அவரையும், பிக் மாஸ்டர் என்பது ஜமைக்கன் பேச்சு வழக்குப்படி கடவுளையும் குறிப்பதாகும். திருமணத்திற்குப் பிறகு லண்டனில் வசித்து வந்த எனது பெற்றோர் தங்குவதற்காக அபார்ட்மென்ட் தேடியிருக்கிறார்கள். அப்போது நான் பிறக்கவில்லை.
எனது மூத்த சகோதரர் குழந்தையாக இருந்தார். கடைசியாக என் அப்பா ஒரு நல்ல அபார்ட்மென்டை பார்த்து குடியேறிய இரண்டாவது நாளில் அந்த வீட்டுக்காரப் பெண்மணி என் அப்பாவிடம், ''நீங்கள் ஏன் உங்கள் மனைவி ஜமைக்காவைச் சேர்ந்தவர் என முதலிலேயே சொல்லவில்லை? வீட்டை உடனே காலி செய்யுங்கள்'' என கோபாவேசத்துடன் கூறியதாக அம்மா அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அம்மா தனது புத்தகத்தில் இந்த மாதிரியான அவமானங்களுக்கு அர்த்தம் என்னவென்று கண்டுபிடிக்க போராடியிருக்கிறார். இறுதியில் அவர் 'இதுதான் நடைமுறை' என்று ஒப்பு கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 'கலர்டு’ ஜமைக்கன்கள் தலைமுறை, தலைமுறையாக இந்த நிற வேற்றுமையினால் நன்மை அடைந்திருக்கிறார்கள். எனவே, அவர் இன்னொருவரிடம் போய், 'தோலின் நிறத்தை வைத்து வேற்றுமைப்படுத்திப் பார்க்காதீர்கள்' என்று கடிந்து கொள்ள முடியாது.
நாம் எங்கிருந்து வந்தோம் என்கிற உண்மையைச் சொல்லிக் கொள்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல. பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து வெற்றி பெற்ற அம்மா தன்னை அந்த மாதிரி காட்டிக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை.

அதாவது, ஜோ ஃபுளோமைப் பார்த்து மிகச் சிறந்த வக்கீல் என்று சொல்வதுபோல, அவருடைய தனிப்பட்ட சாதனைகள் அவருடைய இனம், தலைமுறை, கார்மென்ட் தொழில் மற்றும் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த சட்ட நிறுவனங்களுக்கு உண்டான சிறப்புத் தகுதிகள் ஆகியவற்றுடன் நினைக்க முடியாத அளவிற்கு பின்னிப் பினைந்து இருந்தாலும் கூட!

சூப்பர் ஸ்டார் வக்கீல்களாக இருக்கட்டும், கணித மேதைகளாகட்டும், மென்பொருள் தொழில் முனைவோர்களாகட்டும்... அவர்கள் இது தங்களுக்கு இயல்பாகவே அமைந்த வெற்றி என்று கூறுவார்கள். ஆனால், அது அப்படியல்ல என்பதே உண்மை. அவர்கள் எல்லோரும் வரலாறு மற்றும் சமூகம், வாய்ப்புகள் மற்றும் மரபுரிமை போன்றவற்றின் சாதகங்களையும் சேர்த்தே எடுத்து கொண்டு மற்றவர் களைவிட வேகமாக வளர்ந்தவர் கள்! இவர்களுடைய வெற்றி அதிசயமானதோ, மர்மமானதோ இல்லை. இவர்களுடைய வெற்றிக்குக் காரணம் சாதகமான சூழ்நிலை கள் மற்றும் பாரம்பரியம்.
சிலர் இந்த வெற்றிக்கு தகுதி படைத்தவர்களாக தங்களை ஆக்கிக் கொண்டார்கள். சிலர் அந்த சூழ்நிலைகள் அமைந்தும் கோட்டைவிட்டார்கள். சிலர் கடினமாக உழைத்தவர்கள், சிலருக்கு அதிர்ஷ்டம் வாய்த்தது. ஆனால், இவை யெல்லாம் அவர்கள் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையை அடைய உதவிய காரணிகள் என்பதை மறுக்கவே முடியாது.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது 'அவுட்லயர்’கள் எல்லாம் 'அவுட்லயர்’களே அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்..

என்னுடைய பாட்டிக்கு பாட்டி அலிகேட்டர் பாண்ட்டில் அடிமையாக வாங்கப்பட்டவர். இதனால் அவருடைய மகன் ஜானுக்கு அவருடைய நிறத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. அதுவே அன்றைய காலகட்டத்தில் அவருக்கு அனுகூலமாக அமைந்தது. இதனால் அவர் அடிமை வேலை செய்யும் வாழ்க்கையிலிருந்து தப்பித்தார்.

டெய்ஸி ஃபோர்ட் என்கிற என் பாட்டி பின்பற்றிய 'முடியும்’ என்கிற கலாசாரக் கோட்பாடு அவருடைய மகள்களின் சார்பாக செயலாற்ற உதவியது. அதுபோல எனது அம்மாவின் படிப்பிற்குக் காரணம் மேக் மில்லனின் எச்சரிக்கையும், 1937-ல் ஏற்பட்ட கலகமும், மிஸ்டர் சான்ஸ் மூலமாக கிடைத்த பண உதவியும்தான்.

இவையெல்லாம் சரித்திரத் தின் நிகழ்வுகள்; எனது குடும்பத்திற்குக் கொடுத்த பரிசுகள். பல சரக்குக் கடைக்காரரிடமிருந்த வளமும், கலகத்தினால் ஏற்பட்ட பலனும், முடியும் என்கிற கலாசாரம் தழுவிய வாழ்வும், தோல் நிறத்தினால் ஏற்பட்ட அனுகூலமும் என் பெற்றோரின் வளர்ச்சி மூலமாக எனக்குக் கிடைத்தது போல மற்றவர்களுக்கும் கிடைத்திருந்தால்... இன்னும் எத்தனைபேர் முழுமையான வாழ்வைப் பெற்று இன்றைக்குக் குன்றின் மீது அழகான ஒரு வீடு கட்டிக் கொண்டு சந்தோஷம் பொங்க வசித்துக் கொண்டிருப்பார்கள்!

(நிறைந்தது)



Sunday, October 30, 2011

Outliers_49_Nanayam Vikatan

அவுட்லயர்ஸ் : தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 49

என் பாட்டி டெய்ஸி நேஷன் ஜமைக்காவின் வடமேற்கிலிருந்து வந்தவர். அவருடைய தாத்தாவின் அப்பா பெயர் வில்லியம் ஃபோர்ட். அவர் அயர்லாந்திலிருந்து ஜமைக்காவிற்கு 1784-ல் வந்தவர். அதற்குப் பிறகு அங்கு ஒரு காப்பித் தோட்டம் வாங்கினார். சில நாட்கள் கழித்து ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி தன்னுடைய ஆசைநாயகியாக ஆக்கிக் கொண்டார்.
அந்தப் பெண்ணை அலிகேட்டர் பாண்ட் என்கிற ஒரு மீனவ கிராமத்தில்தான் பார்த்தார். அவள் மேற்கு ஆப்பிரிக்க மலைஜாதி வம்சமான இக்போ இனத்தைச் சேர்ந்தவள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அவர்கள் ஜான் என பெயரிட்டார்கள். அவன் ஒரு 'முலாட்டோ’... அதாவது 'நிறம் கொண்டவன்’ என்று பொருள். அந்த காலகட்டத்திலிருந்து வில்லியம் ஃபோர்ட் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் ஜமைக்கன் 'கலர்டு’ வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள்.

அதே காலகட்டத்தில் தென் அமெரிக்காவில், வெள்ளையர் ஒருவர் அடிமை ஒருத்தியுடன் அனைவரும் அறியும்படி உறவு வைத்திருப்பது என்பதே மிகவும் அரிதான தாகும். வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் இடையேயான செக்ஸ் உறவு ஒழுக்கக் குற்றம் என கருதப்பட்ட காலம் அது. இதற்காக சட்டம்கூட அமலாக்கப்பட்டது. இது 1967 வரை அமலில் இருந்தது.

ஒரு தோட்டத்தின் அதிபர், ஒரு அடிமையுடன் அனைவருக்கும் தெரியும் வகையில் குடும்பம் நடத்தி வந்தால் அவர் சமூகத்தால் தள்ளி வைக்கப்படுவார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லோரும் அடிமை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

ஆனால், ஜமைக்காவிலோ இதற்கான அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. அந்த கரீபிய நாடு கிட்டத்தட்ட ஒரு அடிமைகளின் காலனி போலதான் இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு 1 வெள்ளையர் என்கிற விகிதாசாரம்... அதாவது, கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்தனர். அதனால், திருமண வயதில் இருந்த வெள்ளை யின பெண்கள் மிக, மிகக் குறைவு. இதனால் வெள்ளையர்களில் பெரும்பாலானோர் கறுப்பு அல்லது கோதுமை நிறத்திலிருக்கும் பெண்களை தங்களின் 'துணையாக’ வைத்துக் கொண்டனர்.

ஒரு பிரிட்டிஷ் தோட்ட அதிபர் அவருடைய பாலியல் அனுபவம் பற்றி தனது டயரியில் குறித்து வைத்திருந்தார். அதன்படி அவர் அங்கிருந்த 37 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 138 பெண்களுடன் உறவு கொண்டிருந்தார்.

வெள்ளையர்கள் ஒரு கட்டத்தில் 'முலாட்டோ’க்களை தங்களது கூட்டாளிகளாக கருத ஆரம்பித்தனர். காரணம், இவர்கள் எல்லோரும் வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் பிறந்தவர்கள். இதனால் முலாட்டோ பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே கிராக்கி இருந்தது. இவர் களுடைய குழந்தைகள் கறுப்பினக் குழந்தைகளைவிட நிறத்தில் கொஞ்சம் 'தூக்கலாக’ இருந்தனர். இதனால் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தில் கொஞ்சம் உயரத்தில் இருந்தனர்.

வயலில் பாடுபட்டு வேலை பார்க்கும் முலாட்டோக்களைப் பார்ப்பது மிகவும் அரிது. அவர்களுடைய வாழ்க்கை எளிதாக இருந்தது. அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பதோடு சரி. அவர்கள் மிகவும் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். வெள்ளையினத்தைச் சேர்ந்த தோட்ட அதிபர்கள் தங்களுடைய உயிலில் தங்களது 'முலாட்டோ’ துணைகளுக்கு அதிகமான சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றனர். இதை அறிந்த ஜமைக்கா அரசாங்கம் இந்த சொத்துக்கள் அதிகபட்சமாக 2,000 பவுண்டுகள்தான் (அந்தக் காலத்திற்கு இந்தத் தொகையே மிக மிக அதிகம்) இருக்கலாம் என சட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டு வந்தது.

18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் தனது குறிப்பில், 'மேற்கிந்திய தீவுகளுக்கு வரும் ஐரோப்பியர்கள் அங்கு அதிக நாட்கள் தங்க உத்தேசிக்கும் வேளையில், அவர்களுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு 'ஹவுஸ்கீப்பர்’ அல்லது 'துணை’ தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்கு கறுப்பினத்தவர், டானே, முலாட்டோ அல்லது மெஸ்டி என பல இனத்தைச் சேர்ந்தவர்கள் 100 அல்லது 150 ஸ்டெர்லிங்கிற்குக் கிடைத்தார்கள். நிற வேற்றுமை கொண்ட சந்ததிகளின் குழந்தைகளுக்கு சமூகத்தில் உயர் அந்தஸ்து கிடைத்தது. இவர்களில் பெரும்பாலோர் அவர்களுடைய மூன்றாவது அல்லது நான்காவது வயதில் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர்' என்று கூறுகிறார்.

இந்த மாதிரியான காலகட்டத் தில்தான் என் பாட்டியின் தந்தை டெய்ஸினுடைய தாத்தா ஜான் பிறந்து வளர்ந்தார். இவர் சுதந்திரமாகவும், கல்விக்கான அனைத்து வசதிகளும் பெற்றிருந்தார். இவர் ஒரு முலாட்டோவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் ஐரோப்பியர் ஒருவருக்கும், ஆராவக் என்கிற ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர். இவர்களுக்கு 7 குழந்தைகள் இருந்தனர்.

'இவர்களுக்கு இந்த இடைப்பட்ட நிறத்தைக் கொண்டவர்கள் சமூகத்தில் அந்தஸ்து அதிகமாக இருந்தது' என ஜமைக்காவைச் சேர்ந்த ஓர்லாண்டோ பாட்டர்ஸன் என்கிற சமூகவியலாளர் கூறுகிறார். மேலும் அவர், '1826-க்கு முன்பே அவர்களுக்கு முழுமையான சிவில் லிபர்டி இருந்தது. அதாவது, அந்த நேரத்தில் ஜமைக்காவில் யூதர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்ததோ, அவ்வளவு அதிகாரம் இவர்களுக்கும் இருந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை இருந்தது. வெள்ளை இனத்தவர்கள் செய்த அத்தனை விஷயங்களையும் இவர்கள் செய்தார்கள். ஜமைக்கா அடிமைச் சமூக அமைப்பைக் கொண்டிருந்த வேளையில்கூட அவர்களுக்கு இது சாத்தியமாக இருந்தது.

ஜமைக்காவில் அதிகமாக கரும்புத் தோட்டங்கள் இருந்தன. இது தென் அமெரிக்காவில் இருந்த பருத்தி தோட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. செடியிலிருந்து பருத்தியை எடுத்து பிராஸஸ் செய்வதற்கு லங்காஷைர் அல்லது வடக்கில் உள்ள மற்ற இடங்களுக்கு அனுப்புவார்கள். ஆனால், கரும்பு பயிரிடும்போது இதற்கு தொழிற்சாலை பக்கத்திலேயே இருக்க வேண்டும். காரணம், வயலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரும்பு அதில் உள்ள சர்கோஸ்ஸை இழந்துவிடும். கரும்பு பிழியும் தொழிற்சாலை அருகேயே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கரும்புத் தொழிற்சாலைக்குப் பல்வேறுபட்ட தொழில் தெரிந்தவர்கள் தேவைப்பட்டது. பேரல் தயாரிப்பவர்கள், பாய்லர் வேலை தெரிந்தவர்கள், தச்சு வேலை செய்பவர்கள் என பலவகையான தொழில் தெரிந்தவர்கள் தேவைப் பட்டனர். இந்த வேலைகளை கறுப்பினத்தவர்கள் செய்து வந்தனர்.

ஜமைக்காவில் வாழ்ந்து வந்த ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள் போல நாட்டை வளப்படுத்துவதில் அதிகமாக அக்கறை காட்டவில்லை. அவர்கள் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பிப் போகவே விருப்பப்பட்டனர். அவர்கள் ஜமைக்காவிலேயே தொடர்ந்து வசிக்க விரும்ப வில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு கலகக்கார நாடாகவே இருந்தது. இதனால் புதிய சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு புதிதாக உருவான மற்ற இனத்தவர்களின் மேல் விழுந்தது.

1850 வாக்கில் ஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டன்னுக்கு வேறொரு 'நிறம்' கொண்டவர் மேயர் ஆனார். அதேபோல் ஜமைக்கா நாட்டின் 'டெய்லி கிளெனர்’ என்கிற பிரபல தினசரியின் ஸ்தாபகரும் வேறு நிறத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இதுபோல பல புரபஷனல் துறைகளில் இவர்கள் தலை தூக்க ஆரம்பித்தனர். வெள்ளையர்கள் பிஸினஸ்மேன்களாகவோ அல்லது தோட்ட அதிபர் களாகவோ இருந்தார்கள். மற்ற நிறத்தைச் சார்ந்தவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள், ஆசிரியர்களாக ஆனார்கள்.
கடந்த அத்தியாயத்தில் நான் சொன்ன கிங்ஸ்டன் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் கோதுமை நிறத்தைச் சார்ந்தவர். இவரும் இவர் நிறத்தைச் சார்ந்தவர்களும் பொருளாதார ரீதியில் உயர்ந்த அந்தஸ்தில் இல்லை என்றாலும், கலாசார ரீதியில் நல்ல அந்தஸ்தில் இருந்தனர்.

மேலே உள்ள அட்டவணையில் 1950-களில் இருந்த இரண்டு வகையான ஜமைக்கன் புரபஷனல்கள்... அதாவது, வக்கீல்கள் மற்றும் எம்.பி.க்கள் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தோலினுடைய நிறத்தைப் பொறுத்தது. 'ஒயிட் அண்ட் லைட்’ வகையைச் சேர்ந்தவர்கள் ஒன்று முழுவதுமாக வெள்ளை இனத்தினர் அல்லது கொஞ்சம் கறுப்பின பாரம்பரியம் கொண்டவர்கள். 'ஆலிவ்’ நிறத்தவர்கள் ஒயிட்டிற்கு ஒரு படி கீழே... 'லைட் பிரௌன்’ நிறத்தவர்கள் ஆலிவ் நிறத்தவர்களுக்கு ஒரு படி கீழே (ஆனால், இந்த இரண்டு நிறத்தவர்களையும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்வது ஜமைக்கர் களைத் தவிர மற்றவர்களுக்குக் கடினம்.)

அட்டவணையைப் பார்க்கும்போது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், 1950-களில் ஜமைக்கா மக்கள் தொகையில் கறுப்பினத்தவர்கள் 80 சதவிகிதத்தினர். இது 5-க்கு 1 என்கிற விகிதாசாரத்தில் இருந்த மற்ற எல்லா நிறத்தினரையும்விட மிக அதிகம்.

கொஞ்சம் வெள்ளை நிறம் சேர்ந்ததினால் 'கலர்டு’ மைனாரிட்டிக்கு ஏற்பட்ட அசாதாரண நன்மையைப் பாருங்கள். வயலில் வேலை பார்க்காமல் வீட்டில் மட்டும் வேலை பார்த்தவர்களுக்கு 1826-லியே சிவில் உரிமைகள் கிடைத்தன. அவர்கள் மதிப்பு மிக்கவர்களாக கருதப்பட்டார் கள். கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்காமல் அறிவு மற்றும் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ள வேலையில் ஈடுபட்டனர். இவையனைத்தும் அவர்கள் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் கழித்து தொழில் ரீதியில் பெற்ற பெரும் வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்த வழியில் வந்த எனது மூதாதையர் குடும்பம் மட்டும் எப்படி வேறுவிதமாக இருந்திருக்க முடியும்?

(அடுத்த இதழுடன் நிறைவு பெறும்)

Copyright © 2008 by Malcolm Gladwell

Saturday, October 22, 2011

Outliers_48, Nanayam Vikatan_Oct 30, 2011

அவுட்லயர்ஸ் :


ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 48





அது 1931-ம் வருடம், செப்டம்பர் 9-ம் தேதி...



டெய்ஸி நேஷன் என்கிற இளவயது பெண்ணொருத்தி இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். மத்திய ஜமைக்காவில் ஹாரேவுட் என்கிற கிராமத்தைச் சேர்ந்த செயின்ட் கேதரின் தேவாலய மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணும் அவளது கணவர் டொனால்டும் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தார்கள். பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் ஃபெயித், ஜாய்ஸ் என்று பெயரிட்டனர்.



நேஷன் குடும்பத்தினர் ஹாரேவுட்டில் இருந்த, இங்கிலாந்து நாட்டு திருச்சபையைச் சார்ந்த தேவாலயத்தில் இருந்த ஒரு காட்டேஜில் வசித்து வந்தனர். அவர்கள் வேலை பார்த்து வந்த பள்ளிக்கூடம் அதற்கு அருகிலேயே இருந்தது. சில சமயங்களில் ஒரு அறையில் முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் மற்ற அறைகளில் இரண்டு டஜனுக்கும் குறைவான குழந்தைகளும் இருப்பார்கள். குழந்தைகள் மிகவும் சத்தமாகப் படிக்கவோ அல்லது வாய்ப்பாட்டை மனனம் செய்தபடியோ இருப்பார்கள்.



ஸ்லேட்டில்தான் எழுது வார்கள். சில நேரங்களில் தேவைப்பட்டால் வெளியே மாமரத்திற்குக் கீழே வகுப்புகள் நடக்கும். குழந்தைகளைக் கட்டுப்படுத்த டொனால்ட் நேஷன் அந்த அறையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஒரு குச்சியை சுழற்றிக் கொண்டே நடப்பார். குழந்தைகளும் இதைப் பார்த்தவுடன் சட்டென்று அடங்கிவிடுவார்கள்.

இவர் அடக்கமானவர், மற்றவர்களால் மதிக்கப் பட்டவர். புத்தகங்களின் மீது தீராத காதல் கொண்டவர். இவருடைய சிறிய நூலகத்தில் கவிதை, தத்துவம், நாவல்கள் என தரமான பல புத்தகங்கள் இருந்தன. ஒவ்வொரு நாளும் இவர் மிகவும் கவனத்துடன் பத்திரிகையைப் படித்து உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வார். ஜமைக்காவின் பிரச்னைகள் குறித்து நண்பர்களுடன் அலசிக் கொண்டிருப்பார்.



டொனால்டின் மனைவி செயின்ட் எலிசபெத் தேவாலயத்தைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு முன் அவருடைய பெயர் ஃபோர்ட். அவருடைய அப்பா ஒரு சிறிய பலசரக்குக் கடை வைத்திருந்தார். இவரையும் சேர்த்து மூன்று பெண்கள். இது இவ்வாறு இருக்க... பிறந்து வளர்ந்த இரட்டையர்களுக்குப் பதினொரு வயதில் நார்த் கோஸ்ட்டில் உள்ள செயின்ட் ஹில்டா பள்ளிக்கூடத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.


இது மிகவும் பழமையான ஒரு ஆங்கிலப்பள்ளி. செயின்ட் ஹில்டாவிலிருந்து அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்கள். அங்கும் அவர்களுக்கு அட்மிஷன் கிடைத்தது.அதற்குப்பின், ஜாய்ஸ் 21 வயது நிரம்பிய ஆங்கில கணிதவியலாளரான கிரஹாமின் பிறந்தநாள் விருந்துக்குச் சென்றிருந்தார். அவர் எழுந்து ஒரு பாடலை பாட ஆரம்பித்து இடையில் சில வரிகள் மறந்து போனதால் அப்படியே நிறுத்திவிட்டார். இதன்பிறகு ஜாய்ஸும், கிரஹாமும் காதலில் விழ... அது அவர்களின் கல்யாணத்தில் முடிந்தது.



அதற்குப் பிறகு அவர்கள் கனடாவிற்குச் சென்றார்கள். ஜாய்ஸ் மிகவும் பிரபலமான எழுத்தாளரும், குடும்ப தெரப்பிஸ்ட்டும் ஆனார். அவர்களுக்கு மூன்று மகன்கள். நகரத்தை விட்டு தள்ளி குன்றின் மீது அழகான வீடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கிரஹாமின் பின்பாதிப் பெயர் கிளாட்வெல். அது வேறு யாருமல்ல... எனது அப்பா. புரிந்ததா..? ஜாய்ஸ் கிளாட்வெல் வேறு யாருமல்ல... மால்கம் கிளாட்வெல் ஆகிய என் அம்மா!

ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரின் மகளான என் அம்மா வெற்றிகரமானவராக மாறியது எப்படி? என்பதைத் தெரிந்து கொள்ள அவருக்கு கிடைத்த வாய்ப்புகளையும், அவர் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் கலாசார மரபுரிமை பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


ஆண்டு 1935... எனது அம்மாவுக்கும் அவருடைய சகோதரி ஃபெய்த்துக்கும் வயது நான்கு. அப்போது வரலாற்றாசிரியர் வில்லியம் எம்.மேக்மில்லன் ஜமைக்காவிற்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் அவர் தென் ஆப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்த யுனிவர்சிட்டி ஆஃப் விட்வாட்டர்ஸ்ராண்ட்டில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மேக்மில்லன் அவர் காலத்திற்கு முன்னால் உள்ள தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் சம்பந்தப்பட்ட சமூகப் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தி வந்தவர். அவர் தென் ஆப்பிரிக்காவில் என்ன விவாதம் செய்தாரோ... அதையே இந்த கரிபியன் நாட்டிலும் செய்ய வந்தார்.


அனைத்து சமூகப் பிரச்னை களிலும் தலையாயதாக மேக்மில்லன் கருதியது - ஜமைக்காவின் கல்வித் திட்டம். ஜமைக்காவில் பப்ளிக் பள்ளிக்கூடங்களோ அல்லது பல்கலைக்கழகங்களோ இல்லை. உயர்படிப்பு படிக்க வேண்டு மென்ற ஆர்வம் உள்ளவர்கள், பள்ளியிலேயே தலைமை ஆசிரியரிடம் தங்களுடைய டீன் ஏஜ் பருவத்தில் அதிகப்படியான வகுப்புகள் எடுத்துக் கொள்வார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களுக்கான கல்லூரியில் சேர்வார்கள். இன்னும் அதிகப்படியான ஆசை உள்ளவர்கள், எப்படியோ பிரைவேட் பள்ளிக் கூடத்தில் சேர்ந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அங்கிருந்து அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்.



மிகவும் குறைவான ஸ்காலர்ஷிப்கள்தான் உண்டு; அதுவும் கிடைப்பது அரிது. பிரைவேட் பள்ளிக் கூடங்களில் படிப்பதற்கு செலவு அதிகம் ஆகும். எனவே, அதில் ஒரு சிலர்தான் சேர்ந்து படிக்க முடியும். இங்குள்ள கல்விமுறை, சமூகத்தில் நலிந்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறிய மேக்மில்லன், இந்தப் பள்ளிக் கூடங்கள் சமூகத்தில் வேற்றுமையை இன்னும் அதிகப்படுத்தினாலோ, அரசாங்கம் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கா விட்டாலோ வெகு சீக்கிரமே சமூகக் கிளர்ச்சிகள் உருவாகும் எனவும் எச்சரித்தார்.

மேக்மில்லனுடைய புத்தகம் வெளியானதற்குப் பிறகு... அவர் கணித்தது போலவே கரிபியனில் குழப்பங்களும், போராட்டங்களும் வெடித்தன. இதனால் டிரினிடாட்டில் 14 பேர் கொல்லப்பட்டார்கள். பார்படோஸில் 14 பேர்கள் கொல்லப்பட்டார்கள். ஜமைக்காவில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்தன. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.


இதையெல்லாம் பார்த்து பயம் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், மேக்மில்லனின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனையை தீவிரமாக எடுத்துக் கொண்டது. மற்ற சீர்திருத்தங்களுடன், அந்த தீவு முழுவதும் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு வேண்டிய ஸ்காலர்ஷிப் வழங்குவதாகவும் அவசரமாக அறிவித்தது. ஸ்காலர்ஷிப்புகள் 1941-லிருந்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டுதான் என்னுடைய அம்மாவும், அவருடைய சகோதரியும் ஸ்காலர்ஷிப்பிற்கான தேர்வு எழுதினார்கள். இப்படியாகத்தான் அவர் களுக்கு உயர்நிலைப்பள்ளிக் கல்வி கிடைத்தது.




இப்போது நினைத்துப் பாருங்கள்... அவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருந்தால்... குறிப்பிட்ட வயதை அடையும்போது ஸ்காலர்ஷிப் அறிவிப்பே இருந்திருக்காது. அவர்களுக்குப் படிப்புக்கான உதவி கிடைத்திருக்காது. என் அம்மாவும் அவர் சகோதரியும் முழுக் கல்வியைப் பெற்றிருக்க இயலாது.




தவிர, எனது பாட்டி டெய்ஸி நேஷன் எடுத்த சில முடிவுகளும் மிக முக்கியமானவை. என் அம்மாவையும் சித்தியையும் ஹாரேவுட்டை விட்டு செயின்ட் ஹில்டாவிற்குப் படிக்க அனுப்பினார். என் தாத்தாவுக்கு தன் மகள்கள் பற்றி ஏதாவது குறிக்கோள் இருந்திருந்தாலும் அவரிடம் அதை நிறைவேற்றுவதற்கான பரந்த பார்வையும், சக்தியும், தீர்க்கதரிசனமும் இல்லை. ஆனால், என் பாட்டியிடம் அது இருந்தது. பாட்டிக்கு செயின்ட் ஹில்டா பற்றிய யோசனை வந்ததற்கான காரணம் - அந்தப் பகுதியைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தினர் தங்களுடைய மகள்களை அங்குதான் அனுப்பியிருந்தனர். அவருடைய மகள்கள் கிராமத்தில் இருந்த மற்ற குழந்தைகளுடன் விளையாடு வதற்குப் பதில் லத்தீன், அல்ஜீப்ரா போன்ற பாடங்களைக் கற்க முன்வந்தனர். அவை உயர்நிலைப் பள்ளிக்கு மிகவும் அவசியம்.




எனவேதான் அதற்கென்றே தனியாக பாடம் கற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார் பாட்டி. அவருடைய குறிக்கோள் எல்லாம், ''பெரிய படிப்புக்கு வாய்ப்பு இல்லாத இந்த இடத்திலிருந்து வெளியேறுவதுதான்'' என்றுகூட அவர் சொல்லி இருப்பார்.





ஸ்காலர்ஷிப் தேர்விற்கான முடிவு வந்தபோது சித்திக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் கிடைத்ததாம். ஆனால், அவர்கள் ஒரு மகளை தங்களிடமே வைத்துக் கொண்டு இன்னொரு மகளை மட்டும் எப்படி அனுப்புவார்கள்? பாட்டியைப் பொறுத்தவரை கண்டிப்பாக இருவரையும் அனுப்ப வேண்டும் என்றே விரும்பினார். பள்ளிக் கூடத்தின் முதல் டேர்ம் முடியும்போது, அந்தப் பள்ளியில் படித்த இன்னொரு மாணவிக்கு இரண்டு ஸ்காலர்ஷிப்புகள் கிடைத்திருந்தன. இந்த இரண்டாவது ஸ்காலர்ஷிப்பை என் அம்மாவிடம் தந்தனர்.




அதேபோல், பல்கலைக் கழகம் செல்லக்கூடிய சமயம் வரும் போது சித்திக்கு 'சென்ட்னரி ஸ்காலர்ஷிப்’ கிடைத்தது. இதில் உள்ள 'சென்ட்னரி’ என்ற சொல், ஜமைக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு நூறாண்டுகளுக்குப் பிறகு நிறுவியதால் வந்தது. இந்த ஸ்காலர்ஷிப், பொது ஆரம்பப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்த பட்டதாரிகளுக்குக் கொடுக்கப் பட்டது. இந்த ஸ்காலர்ஷிப் தீவு முழுவதிலுமுள்ள மாணவர்கள் நூறு பேர்களுக்கு வழங்கப்படும்.




முதலாவதாக வரும் மாணவி, மாணவன் என மாறி மாறி இந்தப் பரிசு வழங்கப்படும். எனது சித்தி இதற்கு விண்ணப்பித்த வருடம் - ஒரு மாணவிக்கு அந்த வாய்ப்பைத் தரவேண்டிய வருடம். ஆக, ஒரு வருடம் முந்தியோ பிந்தியோ என் சித்தி பிறந்திருந்தால்... இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. அதேசமயம், இரட்டையரில் ஒருவராகப் பிறந்திருந்த என்னுடைய அம்மாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை.




என்னுடைய அம்மா இங்கிலாந்து செல்வதற்கு, அறை வாடகை, அன்றாட செலவு மற்றும் கல்விக் கட்டணம் என எல்லாவற்றிற்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அம்மா யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனில் சேர்ந்திருந்தார். அங்கே செலவழித்த தொகை, என் தாத்தா, பாட்டி ஆகியோர் ஆண்டு முழுவதும் சம்பாதித்த வருமானத்திற்குச் சமமானது! அப்போதெல்லாம் மாணவர் களுக்கென்று படிப்புக்கு கடன் தரும் வழக்கம் இல்லை.



அப்புறம் என்னதான் செய்தார்?




பக்கத்திலிருந்த ஒரு சீன வியாபாரியின் கடைக்குச் சென்றார். 19 -ம் நூற்றாண்டி லிருந்து ஜமைக்காவில் சீன மக்கள் கொஞ்சம் கணிசமான அளவில் இருந்தனர். பெரும்பாலோர் வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருந்தனர். ஐமைக்காவில் சீனர்களுடைய கடைக்கு 'சின்னி ஷாப்’ என்று பெயர். என் பாட்டி அந்த மாதிரியான ஒரு 'சின்னி ஷாப்’பிற்கு சென்றார். அதை நிர்வகித்து வந்தவர் மிஸ்டர் சான்ஸிடம் கடனுக்குப் பணம் வாங்கி வந்தார். அவர் தன் சக்திக்கும் மீறிய ஒரு தொகையை கடனாக வாங்கினார். ஆனால், வாங்கிய கடனுக்கான தவணையை தவறாமல் கட்டி வந்தார். அதற்கும் மேலே சொல்ல வேண்டுமானால், என் பாட்டி டீச்சராக இருந்த பள்ளியில்தான் சான்ஸின் குழந்தைகள் படித்தார்கள்.





தன் கடந்த காலம் பற்றி அம்மா என்னிடம் தொடர்ந்து நினைவு கூரும்போது, 'அது எப்படியோ நடந்தது... நான் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தேன். எனக்கு இடம் கிடைத்தது. நான் எனது அம்மாவின் மேல் உள்ள நம்பிக்கையால் தொடர்ந்து பாடுபட்டுப் படித்தேன்' என்றார்.



இந்த வெற்றிக்கதைக்கு உரமாக அமைந்த அற்புதமான சிறப்புக் காரணிகள் அதோடு முடிந்துவிடவில்லை...





(விதை விருட்சமாகும்)


Copyright © 2008 by Malcolm Gladwell

Saturday, October 15, 2011

Outliers_47_23rd Oct, Nanayam Vikatan

அவுட்லயர்ஸ்


ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 47

மாரிட்டா தன்னுடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை. இவள் பெற்றோரில் அம்மா மட்டுமே உடன் வசித்து வருகிறார். அம்மா கல்லூரி சென்றது கிடையாது. இவர்கள் இருவரும் பிரான்க்ஸில் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்டில் தங்கியிருந்தார்கள். மாரிட்டா வின் அம்மா கிப் பள்ளிக்கூடம் பற்றி அறிவதற்கு முன்பு, அவள் வேறொரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தாள்.
துபற்றி மாரிட்டா, 'நான் நான்காவது கிரேடில் இருக்கும் போது நானும் எனது தோழி தன்யாவும் கிப் பள்ளிக்கு விண்ணப்பித்தோம். எனக்கு இன்றைக்கும் மிஸ் ஓவன்ஸ் பற்றி நினைவிருக்கிறது. அவர்தான் என்னை இன்டர்வியூ செய்தார். அந்த நேரத்தில் அவர் என்னிடம் கூறியதைக் கேட்டபோது, நாம் ஏதோ ஜெயிலுக்குள் போகிறோமோ என்கிற எண்ணம்தான் வந்தது. அவர்கள் என்னிடம், 'இத்தனை கட்டுப்பாடுகளுக்கும் உடன்பட இஷ்டமிருந்தால் நீ கையெழுத்து போடு. இல்லையென்றால் உடனே திரும்பிப் போகலாம்' என்று கூறினார்கள். ஆனால், என் அம்மா என் பக்கத்திலேயே இருந்ததால் வேறு வழியில்லாமல் தான் அப்போது நான் கையெழுத்து போட்டேன். அந்த தருணத்திலிருந்து எனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது'' என்றபடி, மேலும் உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

'நான் அதிகாலை 5.45-க்கு எழுந்திருப்பதிலிருந்து எனது வேலைகள் தொடங்கும். எழுந்தபின் பல் தேய்த்துவிட்டு குளிப்பேன். நான் மாலை 5 மணிக்குப் பள்ளியைவிட்டுக் கிளம்புவேன்; வேறெந்த வேலையும் இல்லையெனில், வீட்டிற்கு 5.30-க்கெல்லாம் வந்துவிடுவேன். அம்மாவுக்கு ஒரு 'ஹாய்’ சொல்லிவிட்டு வீட்டுப் பாடம் செய்ய ஆரம்பித்து விடுவேன். அதிகமாக வீட்டுப் பாடங்கள் இல்லையெனில் 9 மணிக்கெல்லாம் முடித்து விடுவேன். கொஞ்சம் அதிகமாக இருந்தால் 10 அல்லது 10.30 கூட ஆகும். அம்மா வற்புறுத்தலைத் தொடர்ந்து இரவு 8 மணி போல டின்னருக்காக சிறிய பிரேக் எடுத்துக் கொள்வேன். டின்னருக்குப் பிறகு, எங்கு விட்டிருந்தேனோ அதிலிருந்து வேக வேகமாகத் தொடர ஆரம்பிப்பேன். 11 மணிக்கு நான் படுக்கச் செல்ல வேண்டும். அப்போதுதானே மறுநாள் அதிகாலை எழ முடியும்? அடுத்த நாளைக்குத் தேவையான எல்லாவற்றையும் தயாராக வைத்துவிட்டு படுக்கச் செல்வேன். நான் அம்மாவிடம் அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் நடந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். 'உம்' கொட்டிக் கொண்டே வரும் அம்மா, தூக்கத்தின் விளிம்புக்குப் போய்விட்டார் என்றால், இரவு மணி 11.15 என்று அர்த்தம். அதற்குப் பிறகு நானும் தூங்கிவிடுவேன். பிறகு மறுநாள் காலையில், முன்தினத்தின் அதே செயல்பாடுகள் தொடரும்'' என்றாள் மாரிட்டா.

அவள் விவரித்ததைப் பார்த்தால், அமெரிக்காவில் குழந்தைகள் எந்த மாதிரியான வழக்கமற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். ஆனால், இந்த மாதிரி நாம் இருக்கிறோம் என்பதையே அவர்கள் உணர்வதில்லை. ஒரு வக்கீல் தனக்கு பார்ட்னராக ஒருவரை ஆக்கிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரமும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரமும், இவள் செலவிடும் நேரமும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால், அவளிடம் இல்லாதது - கண்களுக்குக் கீழே கருவளையமும், கையில் சுடச்சுட காபியும்தான். காரணம், பாதிக்கப்படுவதற்கோ, உற்சாக ஊக்கி தேடுவதற்கோ தேவையில்லாத வயசு அது!

மாரிட்டாவின் வாழ்க்கை அவளைப்போல் 12 வயதில் இருந்த மற்ற பள்ளிகளின் குழந்தைகள்போல இல்லை. அந்த வயதில் ஒரு சிறுமியினுடைய வாழ்க்கை இவ்வளவு கடுமையானதாக இருக்க வேண்டும் என நாம் விரும்பவும் இல்லை. குழந்தைகளுக்கு விளையாடவும், கனவு காணவும், தூங்கவும் தேவையான நேரம் வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். ஆனால், மாரிட்டாவிற்கு அடுக்கடுக்காக கல்விப் பொறுப்புகள் இருந்தன.
கொரியன் பைலட்டுகளிடம் என்ன கேட்கப்பட்டதோ, அதேதான் மாரிட்டாவிடமும் கேட்கப்பட்டது. அவர்கள் வெற்றிபெற வேண்டுமெனில் அவர்கள் தங்களுக்கென்று உள்ள கலாசாரம் சம்பந்தப்பட்ட அடையாளத்தை கொஞ்சம்விட வேண்டும். ஏனெனில் கலாசார மரபுரிமை விமானத்தின் காக்பிட்டில் எடுபடவில்லை. அதேபோல மாரிட்டாவின் கலாசார மரபுரிமையும் அவள் எதிர்காலத்தில் வாழ்ந்தாக வேண்டிய போட்டி சமூகத்தின் சூழ்நிலைக்கு சரிப்படாது. அவளுக்குத் தேவையான வற்றை அவள் சார்ந்த சமூகம் அளிக்கவில்லை. அதற்காக அவள் என்ன பண்ண வேண்டும்? அவள் மாலை வேளைகளையும், வார இறுதிநாட்களையும், நண்பர்களையும் ஒதுக்கி வைத்தாக வேண்டும். இதற்குப் பதில், அவள் கிப் பள்ளி தருகிற இடைவிடாத பயிற்சிகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்.

''நான் ஐந்தாவது கிரேடு சேர்ந்த புதிதில் வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தவுடன் நேராக எனது பழைய பள்ளிக்கூடத்தில் படித்த தோழியின் வீட்டிற்குச் செல்வேன். எனது அம்மா வேலையிலிருந்து வரும் வரை அங்கேயே இருப்பேன். அந்த நேரத்தில் நான் வீட்டுப் பாடங்கள் செய்துவிடுவேன். தோழியின் பள்ளியில் எந்த விதமான வீட்டுப் பாடங்களும் கிடையாது. அவள், 'நீ எங்க பள்ளிக்கூடத்திலேயே படித்து இருக்கலாம்’ என்பாள். நான், 'எல்லோரும் கிப் கடினம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், உனக்கு அதன்மேல் ஒரு பிடிப்பு வந்துவிட்டால் கடினமாகவே தெரியாது' என்றேன். அவளோ, 'நீ ஸ்மார்ட்’ என்றாள்.
அதற்கு நான், 'அதெப்படி..? எங்கள் பள்ளியில் சேருகிற எல்லோரும் ஸ்மார்ட்டாக இருக்க முடியாது' என்றேன். அவள் வீட்டில் இருந்த ஒருநாள், நாங்கள் அதிகாலை ஐந்து மணி வரை விழித்திருந்தோம். அதுவே அவளை டிஸ்கரேஜ் செய்திருக்கும். அவளிடம் நான், 'இந்த மாதிரி அதிகமாக வீட்டுப் பாடங்கள் செய்வது வகுப்பறையில் ஈஸியாக பாடத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது' என்றதற்கு... 'உன்னுடைய எல்லா லெக்சரை யும் என்னால் கேட்க முடியாது' என்றாள் தோழி!'' என்று விளக்கினார் மாரிட்டா.
ஒரு பள்ளிக் குழந்தை இந்தளவு கஷ்டப்பட்டு வேலை பார்ப்பது அதிகமில்லையா? அதிகம்தான். ஆனால், நீங்கள் மாரிட்டா இடத்தில் இருந்து பாருங்கள். வசதியற்ற குடும்பச் சூழலின் காரணமாக, அவளாக விரும்பித்தான் கிப் பள்ளியில் சேர்ந்தாள். அந்தப் பள்ளியின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டாள். எனவே, அதை மனம் விரும்பி நிறைவேற்றினாள். அதற்கான பலன் கிடைத்தது. அப்படியிருக்க, இதை எப்படி மோசம் என்று சொல்ல முடியும்?

ஆக, இந்தத் தொடரில் நாம் இதுவரை படித்ததில் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. வெற்றி என்பது எதிர்பார்த்த ஒரு வழியில் தொடர்ந்து செல்லும் என்பதுதான் அது. மிகவும் புத்திசாலியாக இருப்பவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பதில்லை. அப்படியென்றால் கிறிஸ் லாங்கன் நிச்சயமாக ஐன்ஸ்டீனுடன் உயரத்துக்குப் போய்... உலகப் புகழ் அடைந்திருக்க வேண்டும்.

வெற்றி என்பது நாம் எடுக்கும் சமயோசிதமான முடிவுகள் மற்றும் முயற்சிகள் மட்டும் சேர்ந்ததல்ல. அது சில சூழ்நிலைகளாலும், சுற்றுப்புற மனிதர்களாலும், முன்னோரின் வாழ்க்கை முறையாலும் நமக்கு அமைகிற ஒரு வரப்பிரசாதம். அப்படி அமைகிற அந்த வித்தியாசமான சூழல்களையும் வாய்ப்புகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் 'அவுட்லயர்'களிடம் இருந்தது.

குறிப்பிட்ட சில நாடுகளின் தேர்வு முறையின் காரணமாக, ஹாக்கி மற்றும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஜனவரி மாதம் பிறந்தது வாய்ப்பாக அமைந்தது. பீட்டில்ஸ் இசைக் குழுவிற்கு கடுமையாகப் பயிற்சி செய்வதற்கு ஒரு ஹாம்பர்க் வாய்ப்பு கிடைத்தது. பில்கேட்ஸ் பள்ளியில் படிக்கும்போது கம்ப்யூட்டர் டெர்மினல் என்கிற அதிர்ஷ்டம் சரியான சமயத்தில் அவருக்கு அமைந்தது. ஜோ ஃபிளோம் போன்ற சட்ட நிபுணர்களுக்கு அற்புதமான ஒரு காலகட்டம் அவர்கள் வக்கீல் தொழிலுக்குள் நுழையும்போது அமைந்தது. அவர்கள் சரியான சமயத்தில், வாய்ப்பான பெற்றோருக்கு, சரியான சமூகத்தில் பிறந்ததினால், 'டேக் ஓவர்’ சம்பந்தப்பட்ட பிராக்டீஸில் மற்றவர்கள் ஈடுபடுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையோடும் ஈடுபட்டனர்.
வெற்றியின் ரகசியம் குறித்து இதுவரை கற்றுக் கொண்ட பாடங்கள் எளிமையானவை தான். ஆனால், இவையெல்லாம் எப்படி சரியாகக் கவனிக்கப் படாமல் போனது என்பதுதான் ஆச்சரியமானது. நாமும் மிகவும் சிறந்த, அறிவுக்கூர்மையான, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட 'அவுட்லயர்'கள் எல்லோரும் இயற்கையிலேயே உருவானவர்கள் என்கிற மாயையில் இருக்கிறோம். ஒரு பில்கேட்ஸுக்கு கிடைத்த வாய்ப்பு போலவே - 1968-ம் வருட காலத்தில் - ஆர்வமுள்ள பல மில்லியன் மாணவர்களுக்கு தேவையான அளவுக்கு 'டைம் ஷேரிங் டெர்மினலை’ பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தால்..? இந்நேரம் எத்தனை மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் உருவாகியிருக்குமோ..!

அதேபோல், ஆண்டின் இறுதி ஆறு மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கென்று கனடாவில் இன்னும் ஒரு சிறப்பான ஹாக்கி லீக் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், இன்றைக்கு இருக்கக்கூடிய ஹாக்கி வீரர்களை போல இரண்டு மடங்கு வீரர்கள் இந்நேரம் உருவாகியிருப்பார் கள். இப்படி ஒவ்வொரு துறையிலும், தொழிலிலும் திடீரென்று உண்டாகும் திறமைகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் இந்த உலகம் இப்பொழுது இருப்பதைவிட மிகவும் அற்புதமாக இருந்திருக்கும்.
மாரிட்டாவிற்கு விசாலமான, விளையாடுவதற்கு அதிக இடமுள்ள புதிய பள்ளிக்கூடம் தேவையில்லை. அவளுக்கு லேப் டாப் தேவையில்லை; பி.எச்.டி படித்த ஆசிரியர் அல்லது பெரிய அபார்ட்மென்ட் என எதுவும் வேண்டாம். அவளுக்கு கிறிஸ் லாங்கன் போன்ற வேகமாகச் சிந்திக்கக்கூடிய மனமோ அல்லது அதிக ஐ.க்யூவோ தேவையில்லை. இவை எல்லாம் இருந்தால் இன்னும் நல்லதுதான்.

மாரிட்டாவிற்குத் தேவைப் பட்டது கிப் பள்ளியில் சேரும் ஒரு வாய்ப்பு. அவளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பாருங்கள்! யாரோ ஒருவர் நெற்பயிர் விளைச்சலுக்கும் கணக்கு அறிவுக்கும் உள்ள தொடர்பை பற்றிய செய்தியை தெற்கு பிரான்க்ஸ் பகுதிக்குக் கொண்டு வந்து கிப் பள்ளி மூலமாக இவளைப் போன்ற மாணவர்களுக்கு அளித்து, அர்த்தமுள்ள, கடுமையான வேலையால் கிடைக்கும் அற்புதத்தை விளக்கியிருக்கிறார்கள்!

(விதை விருட்சமாகும்)
Copyright © 2008 by Malcolm Gladwell



Saturday, October 8, 2011

Outliers_46

அவுட்லயர்ஸ்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 46

பள்ளிக்கூட நாட்களில் ஏழைக் குழந்தைகள் வசதியான குடும்பத்து குழந்தைகளைவிட நன்றாகப் படித்தாலும், கோடை விடுமுறையினால் பின்தங்கி விடுகிறார்கள்!

சதிக்கும் வறுமைக்கும் இடையே அமெரிக்காவின் கோடை விடுமுறை நாட்கள் எப்படி எல்லாம் படிப்பில் விளைவுகளை உண்டாக்குகிறது என்பதற்கான புள்ளி விவரங் களைத் திரட்டியபோது ஆச்சரி யமான முடிவுகள் கிடைத்தன. 
வசதியான குடும்பத்தில் பிறந்த மாணவர்களுடைய படிக்கும் திறன் செப்டம்பர் மாதத் தேர்வில் 15 புள்ளி களுக்கும் மேலாக இருக்கிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களின் படிக்கும் திறன் விடுமுறையிலிருந்து திரும்பும் போது 4 புள்ளிகள் குறைந்து விட்டன. ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கூட நாட்களில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்களைவிட நன்றாகவே படித்திருந்தார்கள். ஆனால், கோடை விடுமுறையில் அவர்கள் மிகவும் பின்தங்கிவிடுகிறார்கள். அதாவது, பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் ஏழை மாணவர்கள் படிப்பு அல்லது கல்வி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மிக மிகக் குறைவு என்பது தெரிய வருகிறது.

கிறிஸ் லாங்கன் பற்றி நாம் பார்த்த அத்தியாயத்தில், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்முறை பற்றி படித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். வளர்ப்பு முறையில் உள்ள வேறுபாடுகள் கல்வி சம்பந்த மான விஷயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் 9வயதானஅலெக்ஸ் வில்லியம்ஸ் பற்றி படித்ததை நினைவூட்டிக் கொள்ளுங்கள். அவனுடைய பெற்றோர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட்ட வளர்ப்பு முறையில் நம்பிக்கை வைத்திருந்தனர். அதன்படி அவனை மியூசியத்திற்கு அழைத்துச் சென்றார்கள்; பிரத்யேகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்தார்கள்; கோடைகால சிறப்பு முகாம்களில் பங்குபெற வைத்தார்கள். இதனால் அலெக்ஸ் கோடை விடுமுறையில் எவ்வளவு நன்றாக கணிதப் பாடம் படித்தி ருப்பான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?  

ஆனால், இதேபோல் நாம் முன்பே பார்த்த கேட்டி பிரிண்ட்லின் கதை இதற்கு நேர்மாறு. அவளைக் கோடைகால முகாம்களுக்கு அனுப்ப பெற்றோரிடம் போதுமான பணமில்லை. அவளை அவளுடைய அம்மா எந்தவொரு பிரத்யேக வகுப்பிற்கும் காரில் அழைத்துச் சென்றதில்லை; அவளுக்குப் போரடித்தால் படிக்க வீடெங்கும் புத்தகங்கள் பரப்பிக் கிடக்கவில்லை. ஒருவேளை, அதிகபட்சம் தொலைகாட்சிப் பெட்டி இருந்திருக்கலாம். அவளுடைய கோடை விடுமுறை புதிய நண்பர்களுடன் தொடர்பு, விளையாட்டு, திரைப்படம் என கழிந்தது. ஆனால், இது அவளுடைய கணிதம் மற்றும் படிக்கும் திறனை மேம்படுத்த  உதவவில்லை. இந்த இரண்டு விஷயங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோடை விடுமுறையும் அவளை அலெக்ஸிற்குப் பின்னேயே தள்ளியது. அலெக்ஸ் கேட்டியை விட ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவன் அவளைவிட நன்கு படிக்கிறான், அவ்வளவுதான்.  

அலெக்ஸாண்டருடைய ஆய்விலிருந்து தெரிய வருவது, அமெரிக்காவில் கல்வித் துறை பற்றிய விவாதம் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதுதான். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை  குறைப்பது, பாடத் தொகுப்பை மாற்றி அமைப்பது, ஒவ்வொரு மாணவனுக்கும் புதிய லாப்டாப் வாங்குவது, பள்ளிக்கூடத்திற்குச் செலவிடும் தொகையை (ஃபண்ட்) அதி கரிப்பது என்பவை பற்றிதான் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து பள்ளிக்கூடங் களின் செயல் பாட்டைப் பொறுத்தவரை அடிப்படையில் எங்கோ தவறு இருக்கிறது என்பது புரிகிறது.
இதைக் கருத்தில் கொண்டு அலெக்ஸாண்டர் பால்டிமோர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருடம் முழுவதும் பள்ளிக்குச் சென்றால் எப்படியிருக்கும் என ஒரு கணம் யோசித்துப் பார்த்தார். அவருடைய கணக்குப்படி, ஏழை மற்றும் பணக்கார மாணவர்களின் கணிதம் மற்றும் படிக்கும் திறனுக்கான மதிப்பெண்கள் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதுதான்.
  
இதன் மூலம் ஆசிய நாட்டினர் எப்படி கணிதத்தில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்கான காரணங்களை இன்னும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆசிய நாட்டில் உள்ள மாணவர் களுடைய கோடை விடுமுறை அதிக நாட்கள் இல்லை. ஏன்?
பள்ளி இருந்தாலும், இல்லா விட்டாலும் சீதோஷ்ண நிலையின்படி வருடத்திற்கு 360 நாட்கள் அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள் அவர்கள். தங்களுடைய குழந்தைகளுக்குத் தொடர்ந்து மூன்று மாதம் கோடை விடுமுறை இருப்பதைப் பெரும்பாலான ஆசிய நாடுகளில் அனுமதிப்பது இல்லை. இது அவர்கள் கலாசாரம். அமெரிக்காவில் வருடத்திற்கு மொத்தமே 180 நாட்கள்தான் பள்ளிக்கூடம். தென் கொரியாவில் 220 நாட்கள், ஜப்பானிலோ 243 நாட்கள்!

உலகம் தழுவிய அளவில் சமீபத்தில் நடந்த தேர்வில் பங்கு கொண்ட மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் அல்ஜீப்ரா, கால்குலஸ் மற்றும் ஜியாமிட்டரி பற்றிய கேள்விகளில் எத்தனை கேள்விகள் அவர்கள் ஏற்கெனவே படித்திருக்கிறார்கள் என்பதுவும் ஒன்று. ஜப்பானில் 12-வது கிரேடு படிக்கும் மாண வர்கள் '92%’ பேர் ஏற்கெனவே படித்திருப்பதாக பதிலளித்தனர். இதுதான் வருடத்திற்கு 243 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில் கிடைக்கும் பயன். நீங்கள் எவ்வளவு படிக்க வேண்டுமோ அவ்வளவிற்கு நேரம் இருக்கிறது. படித்ததை மறப்பதற்கான கால இடைவெளி குறைவு! அதே கேள்விக்கு அமெரிக்கர்களில் '54%' பேர்தான் ஏற்கெனவே படித்திருப்பதாகச் சொன்னார்கள்.  ஏழை மாணவர்களைப் பொறுத்த வரை அமெரிக்காவில் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிப்பது என்பது பெரிய பிரச்னை இல்லை. ஆனால், கோடை விடுமுறை அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இருந்தது.

அப்பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ஆரம்பிக்கப் பட்டதுதான் நாம் பார்த்த 'கிப்' பள்ளிகள். 'நெற்பயிர் வயல்கள்’ கற்றுக் கொடுத்த பாடத்தை அமெரிக்காவில் சிறிய நகரங்களுக்கு கொண்டு வர முடிவு செய்தனர்.  
கிப் பள்ளிகள் குறித்து, 'பிரான்க்ஸ் கிப் அகாடமி'யைச் சேர்ந்த டேவிட் லெவின் என்பவர் கூறும்போது, ''பள்ளிக்கூடம் காலை 7.25-க்கெல்லாம் ஆரம்பித்துவிடும். மாணவர் களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்காக 7.55 வரை நடத்தப்படும் ஒரு கோர்ஸில் கலந்து கொள்வார்கள். அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஐந்தாம் கிரேடு தவிர்த்து மற்றவர்களுக்கு 90 நிமிடங்கள் ஆங்கிலம், 90 நிமிடங்கள் கணிதப் பாடங்கள் நடத்தப்படும்.
ஐந்தாம் கிரேடு மாணவர் களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கணிதப் பாடம் நடத்தப்படும். ஒரு மணி நேரம் அறிவியல், ஒரு மணி நேரம் சோஷியல் சயின்ஸ், வாரத்திற்கு இரண்டு முறை ஒரு மணி நேரத்திற்கு இசைப் பயிற்சி... இதற்கும் மேல் ஆர்கெஸ்ட்ரா பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் ஆர்கெஸ்ட்ராவில் பங்கு பெற்றாக வேண்டும்'' என்று விளக்குகிறார்.  

தினமும் பள்ளிக்கூடம் காலை 7.25-லிருந்து மாலை 5 மணி வரை நடக்கும். அதற்குப் பிறகு வீட்டுப் பாடம், விளையாட்டு போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். இரவு 7 மணி வரையில் மாணவர்கள் பள்ளியிலேயே இருப்பார்கள். மதிய சாப்பாடு, இடைவேளை என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் வழக்கமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட இவர்கள் 50-லிருந்து 60 சதவிகித நேரம் அதிக நேரம் படிக்கிறார்கள்!  

கிப் பள்ளிகள் பற்றி என்னிடம் அறிமுகப்படுத்திய டேவிட் லெவினை நான் பார்க்கப்போனபோது, அந்தப் பள்ளிக் கூடத்தின் பிரதான வராந்தாவில் நின்று கொண்டிருந்தார். அப்போது மதிய சாப்பாட்டு வேளை என்பதால் மாணவர்கள் அமைதியாக, சீருடை  அணிந்த படி வரிசையாக வந்தார்கள். சரியாக சட்டை அணியாத ஒரு மாணவியை லெவின் நிறுத்தி, அறிவுறுத்தி அனுப்பினார்.  

''சனிக்கிழமைகளில் இவர்கள் இங்கு காலை 9 முதல் மதியம் 1 மணி வரை இருப்பார்கள். கோடை காலத்தில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இருப்பார்கள். கோடை காலம் முடிவதற்குள் அவர்கள் மற்றவர்களைவிட மூன்று வாரங்கள் அதிகமாகப் பள்ளியில் செலவிடுவார்கள். இவர்கள் எல்லோரும் மிகவும் குறைவான வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்தான் கோடை விடுமுறை அதிக நாட்களின்போது படிப் புடனான தொடர்பை இழப்பவர்கள். இதனால் கிப் அகாடமியில் அதிக நாட்களுக்கு கோடை விடுமுறை விடுவதில்லை'' என்று டேவிட் லெவின் விளக்கினார்.
'ஆரம்பத்தில் மாணவர் களுக்கு இது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், போகப் போக அவர்களுக்கு உழைப்பின் மகத்துவம் புரிந்தது. இங்கு நாங்கள் அதிகமாகப் பேசுவதே மனஉறுதி பற்றி மற்றும் சுயகட்டுப்பாடு பற்றித்தான். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நன்றாகவே புரியும்'' என்றார் அவர்.

லெவின் எட்டாவது கிரேடு கணித வகுப்பை நோக்கி நடந்து சென்று ஆரோன் என்கிற மாணவனுக்குப் பின்னால் போய் நின்றார். அவன் சிந்தனைத் திறன் சம்பந்தப்பட்ட கணக்கு ஒன்றைப் போட்டுக் கொண்டிருந்தான். எல்லா கிப் மாணவர்களும் இதைத் தினமும் காலையில் செய்ய வேண்டும். போனிடெயிலுடன் கிட்டத் தட்ட முப்பது வயது மதிக்கத்தக்க வகையில் இருந்த ஆசிரியர் ஃபிராங் கோர்கோரன் அவ்வப்போது அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்று அந்த மாணவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.  
இந்த மாதிரியான காட்சியை நீங்கள் அமெரிக்காவில் உள்ள வகுப் பறைகளில் பொதுவாகவே பார்க்க முடியும்தான். ஆனால் இங்கே அதில் ஒரு வித்தியாசம் - ஆரோன் வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு முன்னால் உட்கார்ந்து கணக்கு ஒன்றை மிகவும் முறையாக, கவனமாக வகுப்பில் உள்ளவர்களின் கவனிப்போடு கடந்த இருபது
நிமிடமாகச் செய்து கொண்டி ருந்தான். அந்த கணக்குக்கு விடை கண்டுபிடிப்பதுடன், விடை கண்டுபிடிக்க ஒரு வழிக்கு மேலும் வேறு இருக்கிறதா என்கிற கேள்வியையும் தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தான், விடா முயற்சியுடன். வகுப்பு முடிந்தவுடன் கோர்கோரன் கூறினார். 'என்னைப் பொறுத்தவரை கணக்குப் பாடம் என்பது 'மூழ்கு அல்லது நீந்து’ என்கிற அப்ரோச்தான். எல்லாம் அதிவேகச் சுற்றுதான். யார் முதலில் விடையைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவர் களுக்கு பரிசு கொடுக்கப்படும்.
 இந்த இடத்தில்தான் கணக்கு பாடத்தை நன்றாகச் செய்யக்கூடியவர்கள் மற்றும் செய்ய இயலாதவர்கள் என்கிற உணர்வுகள் ஏற்படுகிறது. அதிகமான நேரம் கொடுக்கப் படுவதால் ஆசிரியர் கணக்கை விளக்கிச் சொல்லவும்,

மாணவர்கள் உட்கார்ந்து அதை மனதில் உள்வாங்கிக் கொள்ளவும், திரும்பச் செய்து பார்க்கவும் உதவுகிறது.

இதனால் நேரம் அதிகமாகச் செலவானாலும் அதிகமான வர்கள் நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. நானும் 'விளக்கம் கொடுப்பதால் நேரம் செலவாகிறதே' எனக் கவலைப் படுவதில்லை' என்றார்.
அந்த வகுப்பறையில் நியூயார்க் ஸ்டேட் ரீஜென்ட்ஸ் தேர்வில் கோர்கோரனின் மாணவர்கள் முதல் வகுப்பில் தேறியதற்கான சான்றிதழ்கள் டஜன் கணக்கில் தொங்கவிடப் பட்டிருந்தன. 'இந்த வகுப்பில் ஒரு மாணவி இருந்தாள். அவள் ஐந்தாம் கிரேடில் இருக்கும்போது கணக்கில் படுமோசம். ஒவ்வொரு சனிக் கிழமையும் நாங்கள் பயிற்சி கொடுக்கும்போது அவள் வெறுத்துப் போய் அழுது கொண்டு இருப்பாள். கண்ணீர் மாலை, மாலையாகக் கொட்டும். படித்து முடித்துப் போய்விட்ட அவள் எனக்கு இரண்டு வாரங் களுக்கு முன்பு இ-மெயில் அனுப்பியிருந்தாள். அதில் அவள் 'அக்கவுன்ட்ஸ்’ஸை பிரதான பாடமாக எடுத்துக் கல்லூரியில் படிப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தாள்' என்றார் பயிற்சியாளர் கோர்கோரன்.  

தோல்வியடைந்தவர்களை எல்லாம் வெற்றியடையச் செய்யும் இந்தப் பள்ளியின் அற்புதம் அமெரிக்காவில் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு புத்தகம் எப்படியெல்லாம் 'இன்ஸ்பிரேஷன்’-யை உண்டாக்குகிறதோ, அது போலத் தான் இதுவும். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் கிப் போன்ற இடங்கள் புத்தகத் தையும் சினிமாவையும் விட மிகவும் கவர்ச்சிகரமானது ஆகும்.

மாரிட்டா சொல்வதைக் கேட்டால் அந்தக் கவர்ச்சியின் வீரியம் புரியும்..!

Saturday, October 1, 2011

அவுட்லயர்ஸ்!

அவுட்லயர்ஸ் (நாணயம் விகடன், அக்டோபர் 9, 2011)
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 45

நியூயார்க் நகரத்தில் உள்ள லோ கெரிக் ஜூனியர் ஹை ஸ்கூலின் நான்காவது மாடியில்தான் இந்த 'கிப் அகாடமி' இயங்கியது. கே.ஐ.பி.பி. என்ற ஆங்கில எழுத்துச் சுருக்கத்தின் நீட்டம் - நாலெட்ஜ் இஸ் பவர் புரோகிராம் என்பது! இது ஒப்பீட்டளவில் ஏழ்மையான பகுதி ஒன்றில் அமைந்திருந்த ஏரியா. இந்த ஏரியாவில் சாம்பல் நிறத்திலான 1960-களை நினைவூட்டும் கட்டடங்களைப் பார்க்கலாம். அதற்கு எதிர்வரிசையில் மங்கலாகத் தோற்றமளிக்கக்கூடிய பல உயரமான கட்டடங்கள் இருந்தன.



அதற்கு சில கட்டடங்கள் தள்ளி கிராண்ட் கான்கோர்ஸ் இருந்தது. இது, அந்தப் பகுதியின் முக்கியமான பகுதியாகும். இரவில் இந்தத் தெருக்களில் நீங்கள் நினைப்பதுபோல நிம்மதியாக நடந்து செல்ல முடியாது.

'கிப்' ஒரு இடைநிலைப் பள்ளி. வகுப்பறைகள் மிகவும் பெரியவை. ஐந்தாவது கிரேடில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் முப்பத்தைந்து மாணவர்கள் என இரண்டு வகுப்பறைகள் இருந்தன. இந்தப் பள்ளியில் சேருவதற்கு நுழைவுத் தேர்வோ அல்லது மற்ற எதுவுமோ தேவையில்லை. மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக் கப்பட்டார்கள். சவுத் புரோன்க்ஸில் வசித்து வரும் நான்காவது கிரேட் மாணவர்கள் யார் வேண்டுமென்றாலும் விண்ணப்பிக்கலாம். இதில் பாதி மாணவர்கள் ஆப்பிரிக்காவி லிருந்து வந்து குடியேறிய அமெரிக்கர்கள். மீதியில் பெரும்பாலும் ஹிஸ்பானிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 90 சதவிகிதம் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அரசாங்கத்தின் பங்களிப்பில் வழங்கப்படும் சாப்பாட்டைச் சாப்பிட தகுதி பெற்றவர்கள்.

'கிப் அகாடமி’ நடத்தும் பள்ளிக்கூடங்களை பார்க்கும் கல்வியாளர்கள் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையற்ற தன்மை வந்துவிடும். இது அவர்கள் அங்கு நுழையும் முதல் பார்வையில் மட்டும்தான். அதற்குப் பிறகு அது ஒரு வித்தியாசமான இடம் என்று தெரிந்துவிடும். அங்கு மாணவர்கள் வராந்தாவில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில்தான் வகுப்புக்குச் செல்வார்கள். வகுப்பறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு 'எஸ்.எஸ்.எல்.ஏ.எல்.டி.' என்ற பொது விதி அளிக்கப்பட்டது. இதைத் தமிழில் சொல்வதானால்... 'புன்னகையோடு இரு... நிமிர்ந்து அமர்... ஊன்றி கவனி... கேள்விகள் கேள்... உன்னை நோக்கி யாரும் பேசும்போது ஆமோதிப்பதை உணர்த்து... கண்களால் எதிராளியின் பேச்சுக்கு கவனம் காட்டு!’

ஆரம்பித்த பத்தே வருடங் களில், இந்த 'கிப் அகாடமி' பள்ளி என்பது நியூயார்க் நகர பெற்றோர்கள் ஆர்வத்தோடு நாடக்கூடிய பப்ளிக் ஸ்கூல்களில் ஒன்றாக மாறியது. குறிப்பாக, 'கிப்' கணிதத்திற்கு மிகவும் பெயர் பெற்றுவிட்டது. சவுத் புரான்க்ஸில் உள்ள எல்லா இடைநிலைப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களில் 16 சதவிகிதத்தினர் மட்டும் கணிதத்தில் அவர்கள் படிக்கக் கூடிய வகுப்பிற்கேற்றபடி அல்லது அதைவிட சற்று தூக்கலாகவோ இருந்தனர்.

ஆனால், கிப்பில் ஐந்தாம் கிரேடு படித்த மாணவர்களில் பெரும் பாலானோர் கணிதம்தான் தங்களது விருப்பமான பாடம் என்றார்கள் உற்சாகமாக. மிகவும் ஒதுக்கப்பட்ட, குறைந்த வருமானம் கொண்ட, குருவிக்கூடு போன்ற வீட்டில் வசிக்கக்கூடிய, மிகவும் மோசமான பகுதியைச் சார்ந்த, கல்லூரி வாசலையே மிதிக்காத பெற்றோர்களைக் கொண்ட அந்தச் சிறுவர்கள் கணிதத்தில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். இது அமெரிக்காவின் செல்வம் கொழிக்கும் புறநகர் பகுதியில் உள்ள எட்டாவது கிரேடு படிக்கும் மாணவர்களுக்கு இணையான திறமையாக இருந்தது.


இன்றைக்கு அமெரிக்காவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட 'கிப்’ பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியின் கிளைகள் இன்னும் பல ஆரம்பிக்கப்பட உள்ளன. அவ்வளவு ஏன்... அமெரிக்காவில் இந்த 'கிப் புரோகிராம்’ கல்வி புதிய ஒரு தத்துவமாகவே மாறி இருக்கிறது. 'கலாசார மரபுரிமை' என்ற ஐடியாதான் இந்த வெற்றிக்கு முக்கிய அடிப்படை.


இது எப்படி சாத்தியமானது என்பதை புரிந்துகொள்வதற்கு, அமெரிக்க பள்ளிக்கூடங்கள் செயல்படும் முறை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில சீர்திருத்தவாதிகள் அமெரிக்காவில் பொதுக் கல்வியைச் சீர்திருத்துவதில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பொதுப் பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் ஒரு ஒழுங்கற்றத் தன்மை நிலவியது. அதாவது, ஒரு அறை மட்டும் கொண்ட பள்ளிகளும், அதிக மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகளும் நாடு முழுவதும் இயங்கி வந்தன. கிராமப்புறங்களில் இயங்கிவந்த பள்ளிகள் கோடை காலத்தில் மட்டுமே இயங்கின. பயிரிடும் காலத்திலும், அறுவடை காலத்திலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உதவியாக குழந்தைகள் இருப்பார்கள் என்பதால் அப்போது பள்ளிகள் நடக்கவில்லை.


நகர் பகுதிகளில் இயங்கி வந்த பள்ளிகளும் அங்கு படித்து வந்த குழந்தைகளின் பெற்றோர்களின் வேலை நேரத்தைப் பொறுத்து அமைந்திருந்தது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. நாடு முழுவதும் எல்லோருக்கும் பூர்ணமான கல்வி கிடைக்க வேண்டும், குழந்தைகள் அனைவருக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், அடிப்படை கணிதம் தெரிந்திருக்க வேண்டும், அவர்கள் சமூகத்திற்கு உதவும்படி ஒரு நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்று சீர்திருத்த வாதிகள் விரும்பினர்.


இதுகூட பரவாயில்லை... 1871-ல் அமெரிக்காவில் கல்வித்துறை கமிஷனராக இருந்த எட்வர்ட் ஜார்விஸ் என்பவர் 'கல்வியும், மனநிலை குறைவுக்குமான தொடர்பு’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அவர் மனநலம் குன்றிய 1,741 பேரை தனது ஆய்விற்கு எடுத்துக் கொண்டதாகச் சொன்னார்: 'அதிகமாகப் படித்ததினால்’ 205 பேர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்றார். 'மனநிலை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு முக்கிய அடித்தளம் கல்விதான்’ என்றார் அவர்!

கல்வி கற்கும்போது மனதை அதிகம் தூண்டுவதினால் குழந்தைகளின் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது என்றும்... அவர்களை அதிக பளுவிற்கு உட்படுத்துவதாலும் இயற்கையிலேயே அவர்களுக்கு அமைந்த திறமைகள் பாதிக்கப் படுகின்றன என்றும் கல்வி பற்றிய பல கட்டுரைகளிலே குறிப்பிடப்பட்டன!


கோல்ட் இதுபற்றி எழுதும் போது, ''அன்றைய கல்வி சீர்திருத்தவாதிகள், குழந்தைகள் பாடம் படிக்கக்கூடிய நேரத்தைக் குறைப்பதுதான் நல்லது என்று நினைத்தார்கள். சனிக்கிழமை நடத்தப்படக் கூடிய வகுப்புகளை நிறுத்துதல், பள்ளி நாட்களை குறைத்தல், விடுமுறை தினங்களை அதிகரித்தல் போன்ற மாற்றங்கள் 19-ம் நூற்றாண்டில் நடந்தன.



மாணவர்கள் மனம் ஒன்றிப் படிக்க வேண்டுமெனில், அவர்கள் அதிகநேரம் ஒரே இடத்தில் அடைபட்டு, சக்தி அனைத் தையும் இழந்த நிலையிலோ அல்லது மனது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலோ இருக்கக்கூடாது என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. உரிய அளவிற்கு ஓய்வு கொடுத்தால் அவர்களின் உள்ளார்ந்த திறனும், அலசி ஆராயக்கூடிய திறமையும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும் எனக் கருதப்பட்டது'' என்கிறார்.



அமெரிக்காவில் கல்வி பற்றி நடைபெறும் எந்தவொரு விவாதத்திலும், இப்போதும்கூட கோடைவிடுமுறை என்பது மிகவும் அரிதாக இடம் பெறக்கூடிய தலைப்பாகும். பள்ளி வாழ்க்கையில் கால் பந்தாட்டம், ஆண்டு இறுதியில் நடைபெறும் நடன நிகழ்ச்சி போன்றவைகளை எப்படி தவிர்க்க முடியாதோ... அதுபோல நீண்ட கோடை விடுமுறையும் தவிர்க்க முடியாத ஒன்று.



ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் அலெக்ஸாண்டர் செய்த ஓர் ஆய்வின் முடிவில் சில விஷயங்கள் தெரிய வந்தன. இவர் பால்டிமோர் பொதுப் பள்ளிக்கூட பாடத் திட்டத்தின் கீழ், முதல் கிரேடில் படித்து வரும் 650 மாணவர்களின் கணிதம் மற்றும் படிக்கும் ஆற்றலை பரிசோதிக்கும் 'கலிஃபோர்னியா அச்சீவ்மென்ட் டெஸ்ட்’டை தொடர்ந்து கண்காணித்து வந்தார். படிக்கும் திறனுக்காக ஆரம்பப் பள்ளியில் முதல் ஐந்து கிரேடுகளில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களை கவனமாக ஆராய்ந்தார். அதிலும், சமூக - பொருளாதார அடிப்படையில் கீழ்மட்ட, நடுத்தர வர்க்க மற்றும் மேல்தட்டு ஆகிய மூன்று வகை மாணவர்களை வகை பிரித்துக் கொண்டு ஆராய்ந்தார் கார்ல் அலெக்ஸாண்டர்.



அதன்படி பார்த்தால், முதல் கிரேடில் அறிவாற்றல் மற்றும் திறமை சார்ந்த மதிப்பெண்களில் இந்த மூன்று பிரிவினரிடையே குறிப்பிட்டுச் சொல்லும்படி வித்தியாசம் எதுவுமில்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த முதல் கிரேடு மாணவர்கள் பால்டிமோரில் உள்ள ஏழ்மையான (ஏழ்மை யென்றால் அப்படியரு ஏழ்மை!) குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களைக் காட்டிலும் 32 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தனர். ஐந்தாவது கிரேடு மதிப்பெண்களுடன் ஒப்பிட்டால், ஆரம்பத்தில் இருந்த இடைவெளியைவிட நான்கு ஆண்டுகளில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த மாணவர் களுக்கும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கும் இடையேயான இடைவெளி கிட்டத்தட்ட இரண்டு மடங் குக்கும் அதிகமாகியிருப்பது தெரியவரும்.



பால்டிமோரில் உள்ள பள்ளிக் கூடங்களில் கலிஃபோர்னியா அச்சீவ்மெண்ட் டெஸ்ட் என்பது பள்ளிக்கூட படிப்பின் இறுதி மாதமான ஜூனில் மட்டும் நடத்தப்படுவதில்லை. மாறாக, கோடை விடுமுறைக்குப் பிறகு செப்டம்பரிலும் நடத்தப்பட்டு வந்தது. நீண்ட விடுமுறைக்குப் பின் பள்ளிக்கூடம் மறுபடி ஆரம்பிக்கும் மாதமான செப்டம்பரில் நடத்தப்பட்ட தேர்வில் வாங்கிய மதிப்பெண்ணுடன், அதற்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வாங்கிய மதிப்பெண்களை ஒப்புமைப்படுத்தி பார்க்கும் போது மாணவர்கள் பள்ளிக்கூடம் நடக்கக்கூடிய காலகட்டத்தில் (அதாவது செப்டம்பர் முதல் ஜூன் வரை) எவ்வளவு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்தது. அதுபோல் ஜூன் மாதத்தில் எடுத்த மதிப்பெண்ணிற்கும், செப்டம்பரில் எடுத்த மதிப்பெண்ணிற்கும் உள்ள வித்தியாசத்திலிருந்து அவர்கள் கோடை காலத்தில் எவ்வளவு கற்றுக் கொண்டிருப்பார்கள் என அறிந்து கொள்ள முடிந்தது.



இதையே வேறு வகையில் சொல்வதென்றால் பள்ளிக் கூடம் நடைபெறும் நாட்களில் நடந்த நிகழ்வுகளும், விடுமுறை நாட்களில் நடந்த நிகழ்வுகளும் 'அச்சீவ்மென்ட் இடை வெளி’யில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவருக்கு உதவியது.



இதையே வெவ்வேறு கோணங்களில் அலசிப் பார்த்தால் விளைவுகள் எப்படி மாறுகிறது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்...!

Sunday, July 17, 2011

அவுட்லயர்ஸ்_34




ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 34

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம். (நாணயம் விகடன், ஜூலை 2011)


விமான விபத்துகள் என்பவை படங்களில் நடப்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் எப்போதாவது அரிதாக நடக்கக் கூடியவைதான். ஆனால், என்ஜினுடைய பகுதிகள் திடீரென்று வெடித்துச் சிதறுவதில்லை. இதனுடைய சுக்கான்களும் டேக்ஆஃப் ஆகும்போது ஒரு கணத்தில் காரணமின்றி முறிந்து விழுவதில்லை. விபத்துகளுக்குக் காரணம் - பெரும்பாலும் சிறிய, சிறிய பிரச்னைகளின் மொத்த ரூபமாகவோ அல்லது அற்பமான சில தவறுகளின் தொடர்ச்சியான விளைவாகவோதான் இருக்கும்.

இது விமான விபத்துகளுக்கு மட்டும் பொருந்துவதில்லை. எல்லாவிதமான தொழிற்சாலை விபத்துகளுக்கும் இது மாதிரியான விஷயங்கள்தான் காரணமாக இருக்கும். உலக வரலாற்றில் மிகவும் பிரபலமான விபத்து 1979-ல் பென்சில்வேனியாவில் த்ரீ மைல் ஐலேண்டில் உள்ள அணுசக்தி நிலையத்தில் ஏற்பட்டது. இதுபற்றி சமூகவியலாளர் சார்லஸ் பெர்ரோ தனது 'நார்மல் ஆக்ஸிடென்ட்ஸ்’ என்கிற புத்தகத்தில் சொல்லும்போது, 'அந்த அணுசக்தி நிலையத்தில் அமைந்துள்ள 'வாட்டர் ஃபில்டரி’ல் வழக்கமாக ஏற்படக்கூடிய அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பினால் ஏற்பட்ட ஈரப்பதம் அந்த நிலையத்தில் உள்ள காற்று அமைப்பில் கசியத் தொடங்கியது. இதனால், வெந்நீர் கொதிகலனுக்குச் செல்லும் குளிர்ந்த நீர் செல்லக்கூடிய பைப்பின் இரண்டு வால்வுகள் செயலிழந்து போயின. மற்ற அணுசக்தி நிலையங்கள் போல த்ரீ மைல் ஐலேண்டிலிருந்த நிலையத்திலும் 'பேக் அப்’ (ஙிணீநீளீuஜீ) குளிர் அமைப்பு இருக்கவே செய்தது. ஆனால், அன்றைக்கென்று பார்த்து அதனுடைய வால்வும் வேலை செய்யவில்லை. இதற்கான காரணம் என்னவென்று பிற்பாடு ஆராய்ந்தபோது யாருக்கும் புரியவில்லை. யாராவது அந்த வால்வை மூடியிருக்க வேண்டும். ஏனென்றால், கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு பிரிவில் ஆராய்ந்தபோது, இது மூடப்பட்டிருப்பதாகக் காட்டியது. அந்த அணு உலை இன்னொரு 'பேக் அப்’ அமைப்பையும் நம்பி இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டம் அன்றைக்கு அதுவும் வேலை செய்யவில்லை! அது மூட வேண்டிய வேளைவரும்போது அதை மூட முடியவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. இந்த வேலையில் ஈடுபட்டிருந்த ஆபரேட்டர்களுக்கு ரிலீஃப் வால்வும்கூட வேலை செய்யவில்லை என்பதை உணர்த்த வேண்டிய கருவியும் அன்று வேலை செய்யவில்லை. இதையெல்லாம் அங்குள்ள என்ஜினீயர்கள் உணர்ந்து ஒரு நிலைக்கு வருவதற்குள் அங்குள்ள ரியாக்டர் 'மெல்ட் டவுன்’ நிலைமையை நெருங்கிவிட்டது'' என்கிறார்.

இப்போது விமானத்துக்கு வருவோம்... மோசமான வானிலை, சரியான நேரத்திற்கு புறப்பட முடியாமல் தாமதம் ஏற்படுவது போன்றவை விமான விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்கிறது ஓர் ஆய்வு. விமானிகள் 12 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்கு முழித்திருந்தால் அதனால் ஏற்பட்ட அயர்வினால் 52 சதவிகிதமான விபத்துகள் நடந்ததாகச் சொல்கிறது இன்னொரு ஆய்வு. 44 சதவிகித சந்தர்ப்பங்களில் விமானத்தைச் செலுத்தும் இரண்டு விமானிகள் அதற்கு முன்பு ஒன்றாகச் சேர்ந்து விமானிகளாகப் பயணித்ததில்லை. அதனால் அவர்களுக்குள் ஒரு முன் பழக்கமோ, சகஜமான நிலைமையோ இருக்கவில்லை என்றும் சொல்கிறது அந்த ஆய்வு.

இப்படி ஆரம்பிக்கும் தவறுகள் ஒரு தவறோடு நிற்பதில்லை. ஒரு விபத்து என்று எடுத்துக் கொண்டால் அதற்குக் காரணம் - மனிதர்களால் அடுத்தடுத்து வரிசையாகச் செய்யப்படும் ஏழு தவறுகள் பின்னால் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த தவறுகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துதான் தவிர்க்கவோ, சரிசெய்யவோ முடியாத மிகப் பெரிய விபரீதத்தை உருவாக்குகின்றன.

இந்த ஏழு தவறுகளும் விமானம் செலுத்துவதில் உள்ள திறமைக் குறைவினாலோ அல்லது அது பற்றிய போதுமான ஞானம் இல்லாத காரணத்தாலோ ஏற்படக்கூடியவை அல்ல. விமானிகள் விமானத்தை ஓட்டிச் செல்வது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த நினைத்து, அது செயல்படாமல் போனதால் ஏற்படக்கூடியதும் அல்ல. விமான விபத்துகள் பெரும்பாலும் 'டீம் ஒர்க்’ மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் குளறுபடிகளால் நிகழ்பவைதான்.

சில விஷயங்கள் மிகவும் முக்கியம் என்று ஒரு விமானிக்குத் தெரியும். ஆனால், அவரோடு டியூட்டியில் உள்ள மற்ற விமானிகளிடம் இதை பல சமயங்களில் பகிர்ந்து கொள்ள மாட்டார். ஒரு விமானி ஏதாவது ஒன்றைத் தவறுதலாகப் பண்ணும்போது அந்தத் தவறை மற்ற விமானி கவனிக்காமல் அக்கடா என்று இருந்து விடுவதும் உண்டு. இதைத் தவிர்ப்பதற்குத் தேவை - விமானிகளிடையே ஒருங்கிணைந்து செயல்படும் பக்குவம். ஆனால், ஒருங்கிணைந்து செயல்படுவதில் விமானிகள் சில சமயங்களில் தவறு செய்து விடுகிறார்கள் என்பதும் வேதனையான உண்மை.

'விமானத்தில் உள்ள 'டெக் டிசைனை’ இரண்டு பேர் இணைந்து இயக்க வேண்டும். ஒருவர் இயக்கும்போது அதை மற்றொருவர் சரி பார்த்தாலோ அல்லது இருவரும் இணைந்து செயல்பட விரும்பினாலோ அந்த இயக்கம் சிறப்பாகச் செயல்படும்' என்கிறார் ஏர்ல் வீனர். இவர் போயிங் விமான நிறுவனத்தில் பாதுகாப்பு பகுதியில் தலைமை என்ஜினீயராக இருந்தவர். விமானங்களைப் பொறுத்தவரை, நீங்கள் அதை சரியாக இயக்கவில்லை என்றால் அது உங்களை 'மன்னிக்காது’. ஒருவர் மட்டும் விமானத்தை இயக்குவதும், மற்றொருவர் அவருக்கு அது முடியாத பட்சத்தில் மட்டுமே உதவ வருவதும் பாதுகாப்புத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடியது என்பதுதான் ஏர்ல் வீனரின் முக்கிய கருத்து.

உதாரணத்திற்கு, 1990 ஜனவரியில் நடந்த கொலம்பியன் ஏர்லைனர் ஏவியான்கா விமான விபத்தை எடுத்துக் கொள்வோம். இந்த விமானத்திற்கு என்ன நடந்ததோ... அதுபோலவே ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு - முந்தைய அத்தியாயத்தில் நாம் பார்த்தோமே - குவாமிலும் நடந்தது. எனவே, மர்மமான கொரியன் விமான பத்துகள் பற்றிய நம்முடைய விசாரணையை இங்கிருந்தே ஆரம்பிக்கலாம்.

கொலம்பிய விமானத்தின் கேப்டன் லாரினோ கேவிடெஸ். அவருடைய முதன்மை அதிகாரி மௌரிஷியோ கிளோட்ஷ். அவர்கள் கொலம்பியாவில் உள்ள மெடெலினிலிருந்து நியூயார்க் கென்னடி ஏர்போர்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அன்றைக்கு மாலை வேளையில் காலநிலை மிகவும் மோசமாக இருந்தது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அடர்த்தியான பனியும், பலமான காற்றும் இருந்தது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து போவதில் தாமதம் ஏற்பட்டது. ஏவியான்கா விமானம் கென்னடி ஏர்போர்ட்டில் தரையிறங்க ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் மூன்று முறை தடுத்து நிறுத்தியது. எனவே, அந்த விமானம் கிட்டத்தட்ட 107 நிமிடம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டே இருந்தது. பிறகு ஒரு வழியாக விமானத்தை தரையிறக்க அனுமதிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கும் நிலையில் மீண்டுமொரு பலமான காற்றை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த தருணத்தில் விமானிகள் கொஞ்சம் அதிகப்படியான சக்தியைக் கொடுத்து விமானத்தை கீழே இறக்க ஆரம்பித்தனர். அடுத்த தருணத்தில் அந்த பலமான காற்று திடீரென்று சக்தியை இழந்தது. ஆனால், விமானமோ மிகவும் வேகத்துடன் ரன்வேயில் வந்து கொண்டிருந்தது. வழக்கமாக இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் விமானம் 'ஆட்டோ பைலட்’ இயக்க முறையில்தான் இயக்கப்படும். அப்படி இயக்கப்பட்டால் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அதனால் உடனே தன் வேகத்தைச் சரிப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால், அன்றைக்கு அந்த விமானத்தில் 'ஆட்டோ பைலட்’ சரியாக வேலை செய்யவில்லை என்பதால் அது ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

கடைசி நேரத்தில் விமானி விமானத்தை தரை இறக்காமல் உடனே மேலிழுத்து 'கோ அரவுண்ட்’ செய்தார். அப்படி மேலெழுந்த விமானம் லாங்க் ஐலேண்டிற்கு மேல் பெரிய வட்டம் ஒன்று அடித்துவிட்டு மீண்டும் கென்னடி ஏர்போர்ட்டை நோக்கி வரத் தொடங்கியது. அந்த நேரம் பார்த்து திடீரென்று விமானத்தின் ஒரு என்ஜினில் பழுது ஏற்பட்டது. அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இன்னொரு என்ஜினும் பழுதானது. எப்படியாவது பாதுகாப்பாக தரையிறங்கி விடலாம் என்பதற்காக 'ரன்வேயைக் காட்டுங்கள்' என விமானி கத்தினார். ஆனால், ஏர்போர்ட்டுக்கு இன்னும் 16 மைல்கள் இருந்தன.

இந்த 707 விமானம், ஓயிஸ்டர் பேயில் உள்ள ஒரு எஸ்டேட்டின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்திலிருந்த 158 பயணிகளில் 73 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள்! விமானத்தில் 'போதிய' எரிபொருள் இல்லாததுதான் விமானம் விழுந்து நொறுங்கக் காரணம் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள் பிறகு. இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட நேரம் ஒரே ஒரு நாள்தான். விமானத்தில் எந்தவிதக் கோளாறும் இல்லை. விமானிகள் குடித்திருக்கவில்லை. இந்த விமான விபத்தை கட்டாயமாகத் தவிர்த்திருக்க முடியும். அப்படி நடக்காமல்போகக் காரணம் - இறுதித் தருணத்தில் விமானிக்கும் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றக் குழப்பம்.

சுரேன் ரட்வத்தே என்ற அனுபவம் வாய்ந்த விமானி, விபத்துக்கான 'மனிதக் காரணிகள்’ குறித்த ஆராய்ச்சியில் பல ஆண்டு காலம் ஈடுபட்டவர். இந்த விமான விபத்துக்கான காரணத்தை விளக்கிச் சொன்னார்.

'இந்த ஏவியான்கா விமானம் 707 வகையைச் சேர்ந்தது. இதை ஓட்டுவதே பெரிய சவால்... இந்த விமானத்தை ஓட்ட வேண்டுமென்றால் நீங்கள் மிகவும் பலமானவராக இருக்க வேண்டும். துடுப்புகளை வலித்து எப்படி ஒரு படகைச் செலுத்த வேண்டுமோ, அது போல இந்த விமானத்தை ஓட்டுவதும் சிரமமான காரியம். 'காஃபி கப்’ அளவிலான ஒன்பது கருவிகளை சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டே தனது வலது கையினால் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், இடது கையினால் விமானத்தை ஓட்டவும் வேண்டியிருக்கும். இதனால் விமான ஓட்டிகள் மிகவும் களைப்படைந்து இருக்கலாம். அந்த நேரத்தில் முடிவெடுக்கும் திறனும் குறைந்திருக்கும்' என்றார்.

முடிவெடுப்பதில் மட்டுமல்ல... தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவல்களைப் புரிந்துகொள்ளும் திறனும் அவருக்குக் குறைந்து போயிருந்தது என்பது விபத்துக்கான முக்கியக் காரணம். அந்த விவரங்களை அறியும்போது நடுக்கமாகத்தான் இருக்கிறது

Sunday, July 10, 2011

TN Government announced more freebies!

அறிவிப்பு:

ஏழைகளுக்குக் கறவை மாடுகள், ஆடுகள் இலவசம் –
சமச்சீர் கல்வி உடைப்பில்!

கல்வி தேவையில்லை
கறவை மாடுகள் போதும்;
நம்மைப் `புண்ணாக்குகள் ஆக்குவதில்
ஆட்சியாளர்களுக்குத் தான் எவ்வளவு சந்தோஷம்!

கறவை மாடுகள் மூலம் யாருடைய
`கல்லாவில் எவ்வளவு நிரம்பப் போகிறதோ -
திஹாரில் இன்னும் இடம் இருக்கிறது!

(ஜூலை10, 2011 – மாலை மணி 5)

Saturday, July 9, 2011

Outliers in Tamil_Nanayam Vikatan

அவுட்லயர்ஸ்
 
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 33

 

1997 ஆகஸ்ட் 5-ம் தேதி காலை நேரம்...

கொரிய விமானம் 801-ன் கேப்டன் ஆறு மணிக்கு எழுந்தார். பின்னாளில் அவருடைய குடும்பத்தினரை விசாரித்தபோது அவர்கள் கூறியது:
''வர் ஒரு மணி நேரம் ஜிம்மிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபின் அன்றைய மாலையில் குவாம் பயணத்திற்கான விமான திட்டத்தைப் படித்தார். அதற்குப் பிறகு அவர் சிறிது நேரம் தூங்கி எழுந்தபிறகு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சியோலுக்கு ஒரு மூன்று மணிக்குபோல புறப்பட்டார்!''
அவருடைய மனைவி குறிப்பிடும்போது, ''கிம்போ இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தன்னை தயார் செய்து கொள்வதற்காக அவர் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி விட்டதாக''க் கூறினார். அவர் கொரியன் ஏர்ஃபோர்ஸிலிருந்து வந்த பிறகு, கொரியன் ஏரில் விமானியாக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். அவர் 8,900 மணி நேரம் விமானம் ஓட்டி அனுபவம் பெற்றவர். இதில் 3,200 மணிநேரம் ஜம்போ ஜெட் ஓட்டிய அனுபவமும் அடக்கம். சில மாதங்களுக்கு முன்பு அவர் வேலை பார்த்து வரும் விமான நிறுவனம், அவர் குறைந்த உயரத்தில் ஜம்போ ஜெட் என்ஜினை மிகவும் பாதுகாப்பாக கையாண்டதற்காக 'விமான பாதுகாப்பு விருதுவழங்கி கௌரவித்தது. அவருக்கு வயது 42. மிகவும் ஆரோக்கியமாக இருந்து வந்தவருக்கு பத்து நாட்களுக்கு முன்புதான் மார்புச்சளி இருப்பதாகக் கண்டறியப்பட்டது'' என்று கூறினார்.
இரவு 7 மணிக்கு கேப்டன், அவருடைய முதன்மை அதிகாரி மற்றும் விமான என்ஜினீயர் ஆகிய மூவரும் அன்று மேற்கொள்ள வேண்டிய பயணத்திற்கான பேப்பர்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் ஓட்டிச் செல்லவிருந்த விமானம், விமான உலகில் 'கிளாசிக்என அறியப்பட்ட போயிங் 747. விமானம் மிகவும் பக்காவாக இருந்தது. இந்த விமானம் ஒரு காலத்தில் கொரியன் ஜனாதிபதி பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டது. விமானம் 801 இரவு பத்து முப்பது மணிக்கு புறப்பட்டு
20 நிமிடத்தில் வானத்தை எட்டியது. அது டேக்ஆஃப் ஆன சமயத்தில் எந்தவித மாறுபாடான சம்பவமும் நிகழவில்லை. அதிகாலை 1 மணி 30 நிமிடத்திற்குக் கொஞ்சம் முன்னதாக விமானம் மேகமூட்டத்திலிருந்து வெளியே வந்தது. விமான சிப்பந்திகள் தூரத்தில் வெளிச்சம் எதுவும் இல்லாததைப் பார்த்தனர்.  

'இது குவாம்தானா?' விமான என்ஜினீயர் கேட்டார். சிறிது மௌனத்திற்குப் பிறகு அவரே, 'ம்... இது குவாம்தான், குவாம்தான்' என்றார். கேப்டன் நகைப்புடன், ''நல்லது'’ என்றார்!
முதன்மை அதிகாரி, ஏர் டிராஃபிக் கன்ட்ரோலுடன் தொடர்பு கொண்டு, விமானம் 'சார்லி ப்ரேவோமேகமூட்டத்திலிருந்து வெளிவந்து விட்டது என்றும், விமானம் இடதுபக்கம் ரன்வே 6-ல் இறங்குவதற்கு 'ராடார் வெக்டார்தரும்படியும் வேண்டிக் கொண்டார்.
விமானம் குவாம் ஏர்போர்ட்டில் இறங்க ஆரம்பித்தது. இறங்குவதை நன்கு பார்க்க முடிகிறது என்று கேப்டன் கூறினார். இதற்கு முன்பு அவர் கிம்போவிலிருந்து எட்டுமுறை குவாமிற்கு விமானம் ஓட்டியிருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பாககூட அவர் இந்த வழியில் பயணித்திருக்கிறார்.
விமானம் இறங்குவதற்கான கியர் இயக்கப்பட்டது. இறக்கைகள் பத்து டிகிரிக்கு விரிவாக்கப்பட்டது. 1 மணி, 41 நிமிடம், 48 வினாடிகளுக்கு கேப்டன் வைபர்களை இயக்குமாறு விமான என்ஜினீயரிடம் கூறினார். அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அவர் ரன்வேயைப் பார்த்தார். ஆனால், கண்களுக்குப் புலப்படவில்லை. ஒரு வினாடிக்குப் பிறகு 'கிரவுண்ட் புராக்ஸிமிட்டி வார்னிங் சிஸ்டத்தின் மின்னணுவியல் குரல்: '500 அடி' என்றது. அதாவது, விமானம் நிலப்பரப்பிலிருந்து 500 அடி உயரத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அவர்களினால் ரன்வேயை பார்க்கவே முடியாதபோது எப்படி 500 அடி உயரம்? இரண்டு வினாடிகள் ஆனது. விமான என்ஜினீயர், ''..?'' என்றார் ஒருவித திகைத்த குரலில்.  
1 மணி 42 நிமிடம் 19 வினாடிகள்... முதன்மை அதிகாரி, ''நாம் மிஸ்ட் அப்ரோச்சை கையாளுவோம்'' என்றார். இதன் அர்த்தம், திரும்பவும் விமானத்தை மேலெழுப்பி ஒரு பெரிய வட்டம் போட்டுவிட்டு மீண்டும் தரையிறக்குவது.  
ஒரு வினாடிக்குப் பிறகு, விமான என்ஜினீயர், 'ரன்வே தெரிய வில்லை' என்றார். முதன்மை அதிகாரி, 'ரன்வே தெரியவில்லை... மிஸ்ட் அப்ரோச்' என்றார்.  
1:42:22... விமான என்ஜினீயர் 'மீண்டும் ஒருமுறை சுற்றுங்கள்' என்றார்.
1:42:23, கேப்டன், ''இன்னொரு முறை சுற்றுங்கள்' என்று கூறியபடியே விமானத்தை இறக்குவதிலிருந்து மெதுவாக இழுத்தார்.  
1:42:26... விமானம், விமான நிலையத்திலிருந்து தென் மேற்கில்
3 மைல் தொலைவில் உள்ள மிகவும் அடர்த்தியான நிமிட்ஷ் மலையின் மீது பக்கவாட்டில் மோதியது. 60 மில்லியன் டாலர் மதிப்பும் 212,000 கிலோ கிராம் எடையும் கொண்ட விமானம் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் மணிக்கு நூறு மைல் வேகத்தில் சிராய்த்து 2,000 அடிகள் வழுக்கி சென்று எண்ணெய் பைப்புகளையும், பைன் மரங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து தீக்கிரையானது. மீட்புப் பணியினர் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே 254 பயணிகளில் 228 பேர் இறந்து போயிருந்தனர்.  
இதற்கு இரண்டு வருடங் களுக்குப் பிறகு கொரியன் ஏர் போயிங் 747 சியோலில் விபத்துக் குள்ளானது. இரண்டு வருடத்தில் இரண்டு விபத்துக்கள் என்பது நல்ல அடையாளமே இல்லை. குவாம் விபத்து நடந்து ஏறக்குறைய ஒரு வருடத்தில் கொரியன் ஏர் 747 சியோலில் உள்ள கிம்போவில் அவசர அவசரமாக தரையிறங்கியது. இன்னொரு விமானம் கொரியாவின் உல்சான் ஏர்போர்ட்டில் ரன்வேயைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இதற்குப் பிறகு மார்ச் மாதத்தில் கொரியாவினுடைய ஏர் மெக்டொனால் டக்ளஸ் 83 போகாங்க் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இது நடந்து முடிந்த ஒரு மாதத்திற்குள் கொரியன் ஏரைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஷாங்காயில் உள்ள குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இன்னும் ஒருமாதம் கழித்து, கொரியன் ஏரைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது!
இந்தமாதிரி விபரீதம் நிகழக்கூடும் என 14 முறைகள் எச்சரிக்கை சமிஞ்ஞைகள் காக்பிட்டிற்கு அனுப்பிய பிறகும் இது நடந்தது!  1999 ஏப்ரல் மாதம் டெல்டா ஏர்லைன்ஸும், ஏர் பிரான்சும் கொரியன் ஏருடன் கூடிய தங்களது உறவை முறித்துக் கொண்டது. அவ்வளவு ஏன்.... தென் கொரியாவில் அமெரிக்க ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இருந்தனர். ஒரு சிறிய உத்தரவின் மூலம் யு.எஸ். ராணுவம் தனது நாட்டு படைவீரர்கள் யாரும் கொரியன் ஏரில் பயணம் செய்யக்கூடாது என தடை விதித்தது. யு.எஸ். ஃபெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டியினால்  தென் கொரியாவிற்கான பாதுகாப்பு குறியீடு (மதிப்பெண்) குறைக்கப்பட்டது. கனடா நாட்டு அதிகாரிகளும் கொரியன் ஏருக்கென்று தங்கள் நாட்டில் அளிக்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யப் போவதாகக் கூறினர்.  
இந்த விவாதங்களுக்கு இடையில், வெளியரு அமைப்பு செய்த தணிக்கை விவரம் 'லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தில் பயணிக்கக்கூடிய அலுவலர்கள் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பக்கூடிய நேரத்திலும், சரக்குகள் உள்ள இடத்திலும் நின்று புகைப்பிடித்ததாகவும், விமானம் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது அவர்கள் சுவாரஸ்யமாக பத்திரிகை படித்துக் கொண்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அவர்கள் பத்திரிகை படிக்கும்போது எச்சரிகை லைட் எரிந்தாலும் கூட அதை அவர்கள் பார்க்க முடியாதபடி பத்திரிகையை உயர்த்திப் பிடித்திருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. அலுவலகர்களிடையே நிலவிய உற்சாகமற்ற தன்மையும், பல விதிமுறை மீறல்கள் நடந்ததையும் 747 'கிளாசிக்கிற்கான பயிற்சியின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இப்படி ஒரு விபத்து ஷாங்காயில் நடந்தபோது கொரிய நாட்டு ஜனாதிபதி கிம் டேஜங் இவ்விபத்துக்கள் குறித்து பேசும்படியான ஒரு கட்டாயத்திற்கு உள்ளானார். ''கொரிய விமான விபத்துக்கள் ஒரு தனிப்பட்ட நிறுவனம் மட்டும் சார்ந்த பிரச்னையில்லை. இது ஒரு நாடு சம்பந்தப்பட்ட விஷயம். நமது நாட்டின் நம்பகத்தன்மையையே இது கேள்விக்குறியதாக மாற்றக் கூடியது' என்றும் கூறினார். இதற்குப் பிறகு டேஜங், ஜனாதிபதி பயணிக்கக்கூடிய விமானத்தை கொரியன் ஏரிலிருந்து அதன் போட்டியாளரான ஏசியானாவிற்கு மாற்றினார்!  
இதற்குப் பிறகு சில காலத்தில் யாராலும் நம்ப முடியாத ஓர் அற்புதம் நடந்தது. கொரியன் ஏர் புதிய வடிவம் எடுத்தது. இன்றைக்கு கொரியன் ஏர்லைன் சிறந்த மற்றும் தரம் வாய்ந்த விமானங்களின் அமைப்பான 'ஸ்கைடீம்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம். 1999-லிருந்து இதனுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்தவித களங்கமும் இல்லை. இதன் தலைகீழ் மாற்றத்தைக் கருதி 'ஏர் டிரான்ஸ்போர்ட் வேர்ல்ட்என்கிற அமைப்பு பீனிக்ஸ் விருது வழங்கி சிறப்பித்தது.
இந்த அத்தியாயத்தில் நாம் விபத்துக்கள் குறித்து அலசி ஆராய  இருக்கிறோம். இப்படி நாம் அலசப் போவதற்குக் காரணம், மோசமான நிலைமையில் இருந்த ஒரு விமான நிறுவனம் 'அவுட்லயர்ஆக, உலகத்திலேயே மிகவும் சிறந்த விமான சேவையாக எப்படி மாறியது என்பதைத் துல்லியமாகக் கணிப்பதுதான்.